Monday, October 11, 2021

மகிழ்ச்சியின் கடிதம்

வாசிக்க: எரேமியா 11,12; சங்கீதம் 101; பிலிப்பியர் 4

வேத வசனம் பிலிப்பியர் 4: 4. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

கவனித்தல்:   எல்லாம் நாம் நினைத்தபடி நன்றாக நடக்கும்போது, நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், நாம் தோல்விகள், உறவு சார்ந்த பிரச்சனைகள், புறக்கணிப்பு மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிடும்போது, வருத்தமடைகிறோம். நம் மகிழ்ச்சியானது பெரும்பாலும் நம் வாழ்வின் சூழ்நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில், “சந்தோஷம்” என்பது முக்கியமான கருப்பொருள் ஆகும். மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையை இந்த சிறிய புத்தகத்தில் 15 முறை பயன்படுத்தி இருக்கிறார். பிலிப்பியர் நிருபம் முழுவதிலும் சந்தோசம் பற்றி பவுல் எழுதி இருக்கிறார். ஆகவே, இந்த நிருபம் ஒரு மகிழ்ச்சியின் கடிதம் என்று அழைப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அப்படி என்றால், பவுல் தன் விரும்பிய அனைத்தையும் பெறுகிற மிகவும் வசதியான ஒரு இடத்தில் இருந்தார் என்று பொருள் கொள்ளக் கூடாது. 4ஆம் வசனத்திற்கு முந்தைய வசனங்களில் உடன் வேலையாட்கள் இருவர் இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பவுல் எழுதுகிறார். பிலிப்பியர் புத்தகத்தை நாம் வாசிக்கும்போது, பவுல் தன் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியை அனுபவித்து சந்தோஷமாக இருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். நாமனைவரும் அறிந்திருக்கிறபடி, பவுல் சிறைச்சாலையில் இருந்து  பிலிப்பியருக்கு நிருபம் எழுதினார்; அவருக்கு எதிரிகள் எல்லா இடங்களிலும் இருந்தனர்; அவர் உபத்திரவங்களையும் பாடுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால் அவை எதுவும் அவர் மகிழ்ந்து களிகூருவதை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

எல்லா சூழ்நிலைகளிலும் நாம் எப்படி மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பது என நாம் கேட்கக் கூடும். நம் சூழ்நிலைகளைச் சார்ந்து நம் மகிழ்ச்சி இருக்குமெனில். நாம் எல்லா நேரங்களிலும் சந்தோஷமாக இருக்க முடியாது.  ”கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” என்று பவுல் எழுதுகிறார். நம் வாழ்க்கை சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்க வேதம் நம்மை அழைக்கிறது, “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகே.8:10). இயேசு நமக்கு தரும் மகிழ்ச்சியில் இருந்து எதுவும் எவரும் நம்மைப் பிரிக்க முடியாது. கர்த்தரின் சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும் நித்திய பேரின்பமும் உண்டு (சங்.16:11). ”அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” என்று ஆபகூக் (3:17-18) பாடுகிறார். நாம் எல்லா சமயங்களிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க முடியும். இயேசு இது பற்றி நமக்கு போதித்தார், அப்போஸ்தலர்கள் தங்கள் பாடுகள் மற்றும் உபத்திரவங்களில் இந்த சொல்ல முடியாத சந்தோஷத்தை பெற்றனுபவித்தனர். கிறிஸ்துவே நம் மகிழ்ச்சியின் ஊற்று ஆக இருக்கிறார். கலாத்தியர் 5:22-23ல், சந்தோஷம் என்பது ஆவியின் கனியில் ஒன்றாக சொல்லப்பட்டிருக்கிறதை நாம் காண்கிறோம்; அதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றும் இல்லை. நம் வெளிப்பிரகாரமான காரணிகளைப் பொறுத்து கர்த்தரில் நாம் களிகூருதல் என்பது ஒருபோதும் மாறுவதில்லை. அது நமக்குள் இருந்து வருகிறது. நம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், நாம் கர்த்தரில் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க முடியும். பவுல் சொல்வது போல, ”சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

பயன்பாடு: நான் இயேசுவை விசுவாசிக்கும்போது, ”சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற” சந்தோஷத்தினால் நான் நிரப்பப்படுகிறேன் (1 பேதுரு 1:8). நான் கர்த்தருக்குள் எப்பொழுதும் களிகூருகிறேன். எந்த மனிதனும் அதை என்னிடம் இருந்து எடுத்துப் போட முடியாது. நான் ஆவியின் படி நடக்கும்போது, என் வாழ்வில் ஆவியின் கனியாகிய சந்தோஷத்தைக் காண்கிறேன். வாழ்க்கைப் பிரச்சனைகள் மற்றும் கர்த்தருக்காக வாழ்வதற்கான மிகச் சிறந்த மருந்து கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பது ஆகும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் சமூகத்தின் மகிமையான சந்தோஷத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, நான் எப்பொழ்தும் மகிழ்ந்து களிகூர முடியும் என்ற நம்பிக்கையை நீர் எனக்கு தருகிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருக்க என் இருதயத்தை நிரப்பும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 283

No comments: