Saturday, October 16, 2021

உண்மையான மனம் திரும்புதலின் அடையாளங்கள்

வாசிக்க: எரேமியா 21,22; சங்கீதம் 106; 1 தெசலோனிக்கேயர் 1

வேத வசனம்1 தெசலோனிக்கேயர் 1: 9. ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
10. அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.

கவனித்தல்:  ஞாயிறு ஆராதனைகள், கிறிஸ்தவ கூடுகைகள், மற்றும் நற்செய்தி கூட்டங்களில்,  இயேசு தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றினார் என ஜனங்கள் தங்கள் சாட்சியை கூறுவதை நாம் பார்க்கிறோம். மாற்றப்பட்ட ஒரு மனிதன்,  குறிப்பாக, ஜனங்கள் அம்மாற்றங்களை காணும்போது, கிறிஸவரான பின் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என்பதைக் காணும்போது, அவர் கிறிஸ்துவுக்கு வல்லமையான ஒரு சாட்சியாக இருக்கிறார். தெசலோனிக்கே சபையைப் பற்றி மக்கெதோனியா மற்றும் அகாயாவில் உள்ளவர்களிடம் இருந்து கேள்விப்பட்ட சாட்சி குறித்து பவுல் தெசலோனிக்கேயில் உள்ள புதிய விசுவாசிகளை உற்சாகப்படுத்தும்படி எழுதுகிறார். தெசலோனிக்கே விசுவாசிகள் பற்றி மூன்று காரியங்களை பவுல் குறிப்பிடுகிறார்: 1) அவர்கள் விக்கிரகங்களை விட்டு விட்டார்கள், 2) ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்தார்கள், 3) இயேசுவின் இரண்டாம் வருகைக்கு காத்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவ விசுவாசத்தில் இந்த மூன்று காரியங்களும் அடிப்படையானவ ஆகும்; இவை உண்மையான மனம் திரும்புதலின் அடையாளமாகவும், இயேசுவைப் பின்பற்றுபவர்களிம் அடையாளமாகவும் இருக்கின்றன.

 தெசலோனிக்கேயில் உள்ள விசுவாசிகள் தேவனிடத்தில் மனம் திரும்பினார்கள்; அது அவர்களுடைய விக்கிரக வணக்கத்தை விடச் செய்தது. ஜீவனுள்ள மெய்யான தேவனைக் காணும்படி அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்ட போது, அவர்கள் விக்கிரக வணக்கத்தில் வெறுமையை உணர்ந்து, அவைகளை விட்டு விலகி இருக்க வேண்டும். (மறுபடியும்) கிறிஸ்துவிடம் திரும்புதல் ஒரு மனிதரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டு பண்ணுகிறது.  இந்த மாற்றமானது ஒருவரின் வாழ்வின் மையமாக இருக்கிற அவருடைய இருதயத்தில்  துவங்குகிறது என்பது முக்கியமான விஷயம் ஆகும். தேவனிடம் திரும்புதல் மற்றும் விக்கிரகங்களை விட்டு விலகுதல் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகும். ”இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு சொல்லி இருக்கிறார் (மத்.6:24). நாம் விக்கிரக வணக்கத்தில் இருந்து கொண்டு ஜீவனுள்ள தேவனை சேவிக்க முடியாது. தேவனை விட்டு நம் கவனத்தைத் திசைதிருப்பும் எதுவும் விக்கிரக வணக்கம் தான். அது நம் நவீன உலக கண்ணோட்டம், தத்துவங்கள், உலகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம்பிக்கை போன்றவை விக்கிரக வணக்கமாக மாறக் கூடும். நாம் எல்லாவிதமான விக்கிரக வணக்கத்தில் இருந்தும் நம்மை விலக்கிப் பாதுகாத்துக் கொள்வோமாக. தெசலோனிக்கே சபை விசுவாசிகளிடம் காணப்பட்ட மூன்றாவது பண்பு என்னவெனில், அவர்கள் கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். அவர்கள் கடுமையான உபத்திரவத்தின் மத்தியில் வாழ்ந்தார்கள். ஆனால் கிறிஸ்துவை விசுவாசிப்பதில் அவர்கள் உறுதியாக இருந்து, அவருடைய வருகையை ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தார்கள். தெசலோனிக்கே சபைக்கு பவுல் எழுதின முதல் நிருபத்தில் ஒவ்வொரு அதிகாரமும் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிய குறிப்புடன் நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்க சுவராசியமான ஒன்று ஆகும். நாம் அனுதினமும் இயேசு கிறிஸ்துவின் வருகை பற்றி இப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு உடையவர்களாக இருக்கிறோமா?

பயன்பாடு: இயேசு மீண்டும் வருவேன் என்று வாக்குப் பண்ணி இருக்கிறார். அவர் சீக்கிரமாக வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான், பரிசுத்தமாகவும் தேவ பக்தியுடனும் வாழ வேண்டும். என் விசுவாசத்தையும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய என் எதிர்பார்ப்பையும் ஜனங்கள் காணக்கூடிய விதத்தில் நான் வாழ வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, தேவபக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கான மூன்று அடையாளங்களை எனக்கு நினைவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கவும், அதற்கேற்றபடி வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 288

No comments: