Thursday, October 7, 2021

பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள்

 வாசிக்க: எரேமியா 3,4; சங்கீதம் 97; எபேசியர் 6

வேத வசனம் எபேசியர் 6: 10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

கவனித்தல்:   எபேசியர் 6ஆம் அதிகாரத்தில், ஆவிக்குரிய யுத்த நடைமுறை குறித்த தன் இறுதிச் சிந்தனைகளைப் பவுல் பகிர்ந்து கொள்கிறார்.  சாத்தானுடைய ஆளுகைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத பெயர் கிறிஸ்தவர்களைக் குறித்து அவன் கவலைப்படுவதில்லை. ஸ்பர்ஜன் சொல்வது போல, “சாத்தான் ஒரு போதும் செத்துப் போன குதிரையை உதைப்பதில்லை.” நாம் கிறிஸ்துவில் வாழும்போது, கிறிஸ்துவுக்காக வாழும்போது, நாம் சாத்தானுக்கு எதிரான ஒரு ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவரும் பிசாசின் தந்திரங்களுக்கு எதிராக தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும். பொதுவாக நாம் நம் எதிரியைக் காணுப்போது, போர் செய்யும் முறை மற்றும் ஆயுதங்கள் குறித்து திட்டமிடுகிறோம். இங்கு, பவுல் சொல்வது போல, நம் யுத்தமானது “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல.” சாத்தானுக்கும் அவனுடைய கண்ணுக்குப் புலனாகாத தாக்குதல்களுக்கும் எதிராக எதிர்த்து நிற்பதற்கான முதல்படி என்னவெனில், ”கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும்” பலப்படுவது ஆகும். நம் பலத்தையும் வல்லமையையும் சார்ந்து இருப்பது, நம் ஆவிக்குரிய எதிரியை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது. நாம் விரைவிலேயே சோர்வடைந்து, நம் சக்தி அனைத்தையும் இழந்து, பிசாசின் தாக்குதலுக்குப் பலியாகக் கூடும். ”ஆவிக்குரிய(ஆன்மீக) யுத்தங்களில் சுயத்தைச் சார்ந்திருப்பது ஆவிக்குரிய (ஆன்மீக)  தற்கொலை” என்று ஒரு கிறிஸ்தவர் சொல்கிறார்.நம் தேவன் கிறிஸ்துவில் நம்மை வெற்றி சிறக்கப் பண்ணுகிறார் (2 கொரி.2:14). பிசாசுக்கு எதிரான நம் ஆவிக்குரிய யுத்தத்தில், நாம் தேவனுடைய வல்லமையைச் சார்ந்து இருக்க வேண்டும்.

பிசாசுக்கு எதிரான நம் யுத்தத்தில் இரண்டாவதாக நாம் செய்ய வேண்டியது என்னவெனில், தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்வது ஆகும். எபேசியர் 6:14-17 இல் பவுல் தேவனுடைய சர்வாயுத வர்க்கம் எவை என்பதைப் பற்றிய விவரங்களைத் தருகிறார். நம் வாழ்க்கையில் பலவீனமான எந்த பகுதியையும்  பிசாசு தாக்குவதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தில், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மற்றும் எதிரியைத் தாக்குவதற்கான ஆயுதங்களும் உண்டு. நம் வாழ்வில் சிறப்புக் கவனம் தேவைப்படுகிற பகுதிகள் எவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அப்படியெனில், மற்றப் பகுதிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் தேவை இல்லை என்று அர்த்தமாகி விடாது.  தேவனுடைய ஒரு போர்வீரராக, பிசாசு நம் வாழ்வில் எந்த வெற்றியையும் பெற நாம் அனுமதிக்கக் கூடாது. நம் போராயுதங்கள் ”அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” என்பதை நாம் நினைவில் கொள்வோம் (2 கொரி.10:4). ஆயினும், நாம் பிசாசை குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது. ஏனெனில், “பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8).  நாம் விசுவாசத்தில் பிசாசை எதிர்த்து நிற்கும்போது, நாம் தேவனுடைய வல்லமையையும் பலத்தையும் நம்பும்போது, “நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:37). சாத்தானின் “தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” (2 கொரி.2:10).

பயன்பாடு:   வெற்றியுள்ள ஒரு ஆவிக்குரிய வாழ்க்கைக்கு, பிசாசுக்கு எதிரான என் போராட்டத்தில், நான் தேவனுடைய வல்லமையையும் பலத்தையும் சார்ந்து இருக்கிறேன். சாத்தானையும் அவனுடைய தந்திரங்களையும் தோற்கடிப்பதற்கான பலத்தை தேவன் எனக்குத் தருகிறார்.  நான் பிசாசுக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்பேன்; அவனுடைய எந்த தீய தந்திரங்களும் என் வாழ்வில் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன். நான் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துக் கொள்கிறேன். நான் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தில் மறைந்திருக்கிறேன். சாத்தான் எனக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பிசாசுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு நீர் தருகிற போராயுதங்களுக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம்மை எப்பொழுதும் நம்பி அனுதினமும் என் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றியுள்ள கிறிஸ்தவராக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 279

No comments: