Friday, October 29, 2021

கர்த்தரை நம்புவது நமக்கு நல்லது

வாசிக்க: எரேமியா 45,46; சங்கீதம் 118; 1 தீமோத்தேயு 5

வேத வசனம் சங்கீதம் 118: 8. மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

கவனித்தல்:  ”ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்” என்பது பழமொழி.  ஆயினும், ஒருவர் உதவி தேடும்போது அல்லது அவசரமான உதவி தேவைப்படுகிற நிலையில் இருக்கும்போது, நாம் காண்பது என்ன? சங்கீதம் 118இல், தேவனுடைய உதவியைத் தேடியது பற்றிய தன் தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து சங்கீதக்காரன் பேசுகிறார். ”மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” என்பதை அவர் கற்றுக் கொண்டார். சங்கீதம் 118 எதிரிகளிடம் இருந்து பெற்ற விடுதலைக்கான துதி மற்றும் நன்றியறிதலின் பாடல் ஆகும். சங்கீதம் 118இல் 8 ஆ வசனம் வேதாகமத்தின் மத்திய அல்லது மைய வசனம் என பலர் கருதுகின்றனர். பரிசுத்த வேதாகமத்தில் மிகவும் சிறிய அதிகாரமான சங்கீதம் 117க்கும் மிகவும் நீண்ட பெரிய அதிகாரமான சங்கீதம் 119க்கும் இடையில் சங்கீதம் 118 வருவது சுவராசியமான ஒன்றாகும். தேவனை நம்பி, அவருடைய உதவியை எப்பொழுதும் தேடும்படி வேதாகமம்  நமக்குப் போதிக்கிறது.

மனிதரின் உதவியை நம்புவதை விட தேவனுடைய உதவியைத் தேடுவது ஏன் சிறந்தது என்று நாம் கேட்கலாம்.  மனிதனுடைய சக்தியானது ஒரு வரையறைக்குட்பட்டது என்பதையும், ஆனால் தேவனோ சர்வ வல்லவர், அனைத்தும் அவருக்கு சாத்தியம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். மனித அன்பு பலவீனமானதும், பெரும்பாலும் சுயநல தன்மை உடையதாகவும் இருக்கிறது. ஆனால் தேவன் தம் நிபந்தனையற்ற அன்பை நமக்கு அருளுகிறார். சங்கீதக்காரன் பாடுவது போல, தேவனுடைய ”கிருபை என்றுமுள்ளது.”  உதவ விரும்புவர்கள் கூட உதவி செய்ய முடியாத நேரங்கள் உண்டு. ”இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” என்று வேதம் சொல்கிறது (சங்.121:4). நாம் உதவி வேண்டி தேவனை எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் இருந்து கூப்பிடலாம். ”தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” என்று சங்கீதம் 145:18 கூறுகிறது. ”இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று இயேசு நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார் (மத்.28:20). நமக்கு உதவுகிற, நம்முடனே கூட எப்போதும் இருக்கிற பரிசுத்த ஆவியானவரை தேவன் நமக்குத் தந்திருக்கிறார் (யோவான் 14:16).  தேவனையும் அவருடைய உதவியையும் தேடுவதற்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தாம். தேவன் நமக்கு உதவும்படி கேட்பதற்கு நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவனை நான் இன்றைய தினமே தேடும்படிக்கும், ஒவ்வொரு நாளும் அவரில் மகிழ்ந்து களிகூரவும் சங்கீதம் 118 நமக்கு அறைகூவல் விடுக்கிறது. ”கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” என்று சங்,32:10 கூறுகிறது. ”நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர்” என்று நாம் அனைவரும் கர்த்தரை நோக்கிச் சொல்ல முடியும் (சங்.91:2).

பயன்பாடு:  நான் எந்த மனிதர்கள் மீதும் என் நம்பிக்கையை வைக்கக் கூடாது. தேவன் எனக்குக் கொடுத்திருக்கிற என் மேல் கரிசனையுள்ள நல்ல மற்றும் அன்பான நண்பர்கள், உறவினர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். தேவன் மனிதர்கள் மூலமாகவே தம் உதவியை அனுப்புகிறார் என்பது உண்மைதான். ஆணால் என் கண்கள் தேவன் மீதே இருக்க வேண்டும், தேவன் பயன்படுத்தும் எந்த மனிதன் மீதும் இருக்கக் கூடாது. சில சமயங்களில் மனிதர்கள் நமக்கு உதவி செய்ய தவறலாம், ஆனால் தேவன் ஒருபோதும் தவறுவதில்லை. ”எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” (சங்.73:28).

ஜெபம்:  அன்பின் தேவனே, என் ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் உண்மையாக பதிலளிப்பதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம்மை எப்பொழுதும் நம்பவும், உமக்காக வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 300

No comments: