Saturday, October 30, 2021

பணம் எல்லா தீமைக்கும் வேர் ஆக இருக்கிறதா?

வாசிக்க: எரேமியா 47,48; சங்கீதம் 119:1-88; 1 தீமோத்தேயு 6

வேத வசனம் 1 தீமோத்தேயு 6: 10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கவனித்தல்: ”பணம் பத்தும் செய்யும்” என்பது நன்கறியப்பட்ட ஒரு பழமொழி. பணத்தினால் எதையும் வாங்கிவிடமுடியும் என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில கிறிஸ்தவர்கள் பணம் ஒரு தீய காரியம் (அ) பொருள் என்று தவறான புரிதல் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இங்கே, ”கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற” தவறான போதகர்களுக்கு எதிராக பவுல் எழுதுகிறார் (வ.3-5). கள்ளப் போதகர்கள் தீய நோக்கங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் சத்தியத்தை திரித்துக் கூறி, தங்கள் ஆதாயத்துக்காக எதையும் செய்யத் துணிகிறார்கள். பண ஆசையினால் பணத்தின் பின் செல்லுபவர்களும் அப்படியே இருக்கிறார்கள். “பணம் ஒரு நல்ல சேவகன், ஆனால் மோசமான எஜமானன்” என்று ஒரு தத்துவ ஞானி சொல்கிறார். பணம் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கும்போது, பண ஆசை நம்மை இயக்கும்போது, அது எல்லா விதமான தீமைகளுக்கும் ஒரு வேராக மாறிவிடுகிறது. ”பண ஆசைக்காக செய்யப்படாத ஒரு பாவத்தை நினைத்துப் பார்ப்பதே கடினமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஆசையானது ஜனங்களை தற்பெருமை அடைந்து கொள்ள, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எதையாகிலும் செய்ய, நீதியை சிதைக்க, ஏழைகளை தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள, பொய் சொல்ல, ஏமாற்ற, திருட, மற்றும் கொலை செய்ய தூண்டுகிறது” என்று ஜான் மெக்ஆர்தர் என்ற தேவ மனிதர் விளக்குகிறார். இயேசு தன் மலைப்பிரசங்கத்தில், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாதுதேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” என்று நமக்குப் போதித்திருக்கிறார் (மத்.6:24).

பண ஆசையானது ஜனங்களை பொருளாசைக்கு நேராக வழிநடத்துகிறது. அது அவர்களிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ” சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பவுல் கூறுகிறார். 9ஆம் வசனத்தில் ஐசுவரியம் மற்றும் பணத்தின் பின் செல்கிற ஒருவரின் படிப்படியான வீழ்ச்சி மற்றும் அழிவு பற்றிய ஒரு காட்சியை பவுல் நமக்குத் தருகிறார். பொருளாசிக்காரர் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்று வேதம் கூறுகிறது (1 கொரி.6:10; எபே.5:5). கிறிஸ்தவர்களாகிய நாம் தேவபக்திக்கு எதிராக இருப்பவைகளை விட்டு விலகி ஓடி, நமக்கு ஏற்புடையவைகளைப் பின்பற்ற வேண்டும் (வ.11).  வேசித்தனம், விக்கிரகாராதனை, மற்றும் பாலியல் இச்சை ஆகியவைகளை விட்டு விலகி ஓடவேண்டும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது (1 கொரி.6:18; 10:14; 1 தீமோ.6:10; 2 தீமோ.2:22). நமக்கோ, “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (வ.6).

பயன்பாடு: பரிசுத்த வேதாகமம் பண ஆசைக்கு எதிராக போதிக்கிறதேயன்றி, பணத்துக்கு எதிராக அல்ல. ஒரு கிறிஸ்தவர் ஒரே நேரத்தில் தேவனுக்கும் உலகப்பொருளாகிய பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது. நான் பணத்தை பின் தொடர்ந்து செல்லும்போது, நான் கிறிஸ்துவை பின்பற்றுவதையும், அவருடைய வார்த்தையின்படி வாழ்வதையும் நிறுத்திவிடுகிறேன்.  ஒரு கிறிஸ்தவராக, நான் பண ஆசையை விட்டு விலகி ஓட வேண்டும்.  நான் “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி” நாட வேண்டும். தேவன் எனக்குப் பணத்தை மட்டுமல்ல, எனக்குத் தேவையானது அனைத்தையும் தருகிறார் (சங்.23:1). ஐசுவரியம் சம்பாதிக்க எனக்கு பெலன் தருகிற தேவனை நான் நினைவுகூர வேண்டும் (உபா.8:18).  பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும்படி அதை ஞானமாக பயன்படுத்த வேண்டும்.(1 தீமோ.6:17-19).

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, என் அனுதின உணவை எனக்குத் தருகிறதற்காகவும், உம் மகிமையின் ஐசுவரியத்தின்படி என் தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கிறதற்காகவும் உமக்கு நன்றி. கர்த்தாவே, பண விஷயஙகளில் ஞானமாக நடந்து கொள்ள உம் ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 301

1 comment:

davidarulblogspot.com said...

மிக சரியாக கூறியிருக்கிறீர்கள். ஆசையே வீழ்ச்சிக்கும் காரணமாகிறது