வாசிக்க: 1 சாமுவேல் 7,8; சங்கீதம் 120; லூக்கா 17: 1-19
வேதவசனம்:லூக்கா 17: 5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
6. அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
கவனித்தல்: நமக்கு ஒரு மாபெரும் தேவை இருக்கும்போது, அல்லது ஒரு குணமாகுதலுக்காகக் காத்திருக்கும்போது, அல்லது வரக்கூடிய ஆபத்துகள் மற்றும் நோய்களைப் பற்றி பயப்படும்போது அவைகளை எதிர்கொள்ள அல்லது மேற்கொள்ள நம் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுமாறு ஆண்டவரிடம் நாம் கேட்கிறோம். நம் வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள போதிய விசுவாசம் நம்மிடம் இல்லை என்று உணர்கிற நேரங்களில் எல்லாம், “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” என்று நாம் ஜெபிக்கிறோம். தங்கள் வாழ்வில் இயற்கைக்கப்பாற்பட்ட அற்புதங்கள் நடப்பதற்கு விசுவாசத்தின் பெருக்கம் தேவை என சில கிறிஸ்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் அல்லது தவறான விளக்கம் கொடுக்கிறார்கள். ஆயினும், லூக்கா 17ல் இந்த வசனம் சொல்லப்பட்ட சூழலைக் காணும்போது, ஒருவர் மற்றவர்களுக்கு இடறலை உண்டு பண்ணக் கூடாது, மன்னிப்பு கேட்கிற எவரையும் எப்பொழுதும் மன்னிக்கத்தயாராக இருக்க வேண்டும் என்ற மன்னித்தல் மற்றும் இடறல் சம்பந்தமான இயேசுவின் எதிர்பார்ப்பை நாம் பார்க்கிறோம். இதைச் செய்வதற்கு தங்களுக்கு அதிக விசுவாசம் தேவை என அப்போஸ்தலர்கள் நினைத்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” என்று ஜெபித்தார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் ஐந்து முறை மட்டுமே “விசுவாசம்” [pistis] என்கிற இந்த வார்த்தை வருகிறது சற்று ஆச்சரியமானதாக இருக்கிறது. அந்த இடங்களில் எல்லாம் விசுவாசம் என்பது உண்மையுள்ள நடத்தையைக் (faithful behavior) குறிப்பிடுவதாக இருப்பதை நாம் காண்கிறோம் (லூக்கா 5:20; 7:9, 50; 8:25, 48). இங்கே அப்போஸ்தலர்கள் இது பின்பற்ற மிகவும் கடினமானது அல்லது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று சொல்லவில்லை. மாறாக, அவர்கள் உண்மையாக இருப்பதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். “ எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே” என்று சொல்லி ஜெபிக்க இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் (லூக்கா 11:4). நம் அனுதின வாழ்வில் தேவனுடைய மன்னிப்பு நமக்குத் தேவையாயிருப்பது போல, மற்றவர்களையும் நாம் மன்னிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு நமக்கு மிகப்பெரிய விசுவாசம் எல்லாம் தேவை இல்லை. கடுகு விதையளவு உள்ள விசுவாசத்தைக் கொண்டே இதைச் செய்ய முடியும் என இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். மத்தேயு 17:20 தவிர மற்ற இடங்களில் எல்லாம் இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்துடன் ஒப்பிடுவதற்காக கடுகு விதையைப் பற்றி இயேசு சொன்னார். தேவனுடைய ராஜ்ஜியத்தில், நாம் இயேசுவின் போதனையை பின்பற்ற மனதாயிருந்தால், நம் கடுகு விதையளவேயான சிறிய விசுவாசமானது நடைமுறையில் சாத்தியம் இல்லாதவைகளை எல்லாம் சாதித்துக் காட்டும்.
பயன்பாடு: பணம், பொருள் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை பிரதானப்படுத்தும் இந்த உலகில் வாழ்வதற்கு, தேவன் மீதான விசுவாசம் எனக்குத் தேவையாயிருக்கிறது. நான் அனுதினமும் விசுவாசத்தைப் பயன்படுத்தும்போது, விசுவாசத்தில் நான் வளருவேன் அல்லது என் விசுவாசம் வளரும். இயேசுவைப் பின்பற்றுவதற்கான என் இருதய விருப்பத்தைக் காட்டுவதற்கும், என் விசுவாசத்தை அப்பியாசிப்பதற்கும் தேவனுடைய ராஜ்ஜியத்தைதின் எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஆகும். மற்ற கிறிஸ்தவர்களுக்கு நான் செய்யக் கூடிய குறைந்த பட்ச நன்மையான காரியம் என்னவெனில், அவர்கள் விசுவாசத்தைல் இடறலை உண்டாக்காமல் இருப்பதே. தேவனுடைய மன்னிப்பிற்காக நான் ஜெபிக்கும்போது, தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்கிற எவரையும் மன்னிக்க நான் தயாராக இருக்க வேண்டும். தேவன் எப்படி என்னை மன்னிக்கிறார் என்பதை நினைவுகூர்ந்து, நான் அவர்களுக்கு தேவனுடைய அன்பைக் காட்ட வேண்டும். நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க ஆயத்தமாக இருக்கிறேனா? மற்றவர்களை மன்னிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேனா?
ஜெபம்: இயேசுவே, நீரே என் வாழ்க்கையின் முன்மாதிரியாக இருக்கிறீர். நான் எல்லாவிதங்களிலும் எப்பொழுதும் உம்மைப் பின்பற்றத் தேவையான விசுவாசத்தை எனக்குத் தாரும். தேவனுடைய ராஜ்ஜியத்தின் பிள்ளையாக வாழ எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment