Saturday, May 15, 2021

இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிப் பேசுவது வீண் பேச்சா?

  வாசிக்க:  2 சாமுவேல் 5 , 6; சங்கீதம் 134; லூக்கா 24: 1-27

வேதவசனம்: லூக்கா 24: 11. இவர்களுடைய (அந்தப் பெண்களின்) வார்த்தைகள் அவர்களுக்கு (இயேசுவின் சீடர்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களுக்கு) வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.

கவனித்தல்: இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் காலியான கல்லறை அருகே தங்களுக்கு நேர்ந்த சம்பவம் ஆகியவற்றைப் பற்றி அந்தப் பெண்கள் சொன்னபோது, அவருடைய சீடர்களும், மற்றவர்களும் (ஒரு கூட்டம் ஆண்கள்) அப்பெண்களின் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. அவர்களுக்கு அது ஒரு வீண் பேச்சாகத் தோன்றியது. அந்தப் பெண்களின் வார்த்தைகளை நம்பாமல் இருப்பதற்கு அவர்களுக்கு அனேக காரணங்கள் இருந்திருக்கக் கூடும்: முதலாவதாக, பெண்களின் சாட்சியத்திற்கு அந்நாட்களில் சம மதிப்பை ஜனங்கள் கொடுக்க வில்லை. யூத அதிகாரிகள் பெண்களுடைய சாட்சியை நிலையற்றதாகவும் நம்பத்தகுந்தது அல்ல என்றும் கருதியதால் நீதிமன்றங்களில் அவர்களை சாட்சியாக இருக்க அனுமதிக்கவில்லை. இரண்டாவதாக, அந்தப் பெண்களின் சாட்சியத்தைக் கேட்டவர்கள் அப்பெண்கள் சொன்னபடி இயேசுவின் உயிர்த்தெழுதல் இருக்கும் என்பதை எதிர்பார்க்க வில்லை. மேசியாவைக் குறித்த அவர்களின் எதிர்பார்ப்பு வித்தியாசமானதாக இருந்தது (லூக்கா 24:20,21). கடைசியாக, இயேசு தன் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து அவர்களுக்குப் போதித்தவைகளை அவர்கள் மறந்துவிட்டார்கள். இயேசுவின் ஊழியத்தில் பெண்கள் வகித்த முக்கியமான பங்கையும் (லூக்கா 8:3), இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய செய்தியை பரப்புவதில் அவர்கள் முதல் சாட்சிகளாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது ஆகும். இயேசு தன் சீடர்களுடன் நடந்து, மனித இரட்சிப்புக்கு  தன் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியற்றின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவுபடுத்தி, புரிந்து கொள்ள உதவி செய்தார் என்பது முக்கியமானது ஆகும். உலக வரலாற்றில் இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் கட்டுக்கதை என நிரூபிக்க முயன்ற பல அறிவு ஜீவிகள் முடிவில் இயேசுவின் சீடர்களாக மாறி இருக்கின்றனர். காலியான கல்லறை இன்றும் பேசுகிறது.

பயன்பாடு: இயேசு மரித்தோரில் இருந்து உயிரோடு எழுந்தார் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான நம்பிக்கை ஆகும். இயேசு கிறிஸ்துவின் மீதான என் நம்பிக்கை ஒரு குருட்டு நம்பிக்கை அல்ல, மாறாக அவருடைய உயிர்த்தெழுதல் என்ற வரலாற்று உண்மையின் மீது கட்டப்பட்ட விசுவாசம் ஆகும். உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்றும் உயிரோடு இருந்து, என் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை இன்று எனக்குத் தருகிறார். எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அனைவரையும் சமமாகப் பார்ப்பதற்கான ஒரு பார்வையை அவர் எனக்குத் தருகிறார். இயேசு சந்தேகப்படுகிற ஒருவரை ஒருபோதும் வெறுத்து ஒதுக்குவதில்லை. அவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ள தன் உதவியை அவர்களுக்கு அளிக்கிறார். பலவித சந்தேகங்கள், பயங்கள் மற்றும் இருளினால் மூடப்பட்டிருக்கிற உலகத்தைப் பிரகாசமாக்க நான் இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

ஜெபம்: இயேசுவே, உம் மீது நான் வைத்திருக்கும் விசுவாசம் பற்றிய நம்பிக்கையையும், மனதில் ஒரு நிச்சயத்தையும் தருகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, உம் இரட்சிப்பு தேவைப்படுகிற அனைவருக்கும் அதைச் சொல்ல ஒரு தைரியமான சாட்சியாக இருக்க எனக்கு உம் வல்லமையைத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: