Friday, May 14, 2021

ஒன்றாக வாழ்தல்

வாசிக்க:  2 சாமுவேல் 3 , 4; சங்கீதம் 133; லூக்கா 23: 26-56

வேதவசனம்: சங்கீதம் 133: 1. இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

கவனித்தல்: ஒருமித்து வாசம் செய்வதின் அல்லது ஒற்றுமையாக இருப்பதன் ஆசீர்வாதத்தைப் பற்றி  சங்கீதம் 133 நமக்குச் சொல்கிறது. ஒற்றுமையைப் பற்றிய கருத்து மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையுடன் அதன் தொடர்பு ஆகியவை எந்த சமுதாயத்திற்கும் பொருந்தக் கூடியது. ஆயினும், சங்கீதம் 133ன் உள்ள வசனங்களின் அடிப்படையில், இது தேவனை ஆராதிக்கிற ஒரு சமுதாயத்திற்கு ஒற்றுமையாக வாழ்வதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. புனிதப் பயணியான சங்கீதக்காரன் சீயோனுக்கு அதாவது எருசலேமுக்கு வந்து சேர்ந்த போது இஸ்ரவேலர்கள் தேவனை ஆராதிக்க ஒன்றாகக் கூடி வந்திருப்பதைப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த ஒற்றுமையின் மதிப்பு மற்றும் பலமானது அளவிட முடியாதது என்று சங்கீதக்காரன் உணர்ந்திருக்க வேண்டும். ஆகவே, அது “எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” என்பதைக் கவனித்துப் பார்க்க நம்மை அழைக்கிறார். தேவனை சேவிப்பதில் / துதிப்பதில் / ஆராதிப்பதில் நம்மிடம் காணப்படும் ஒற்றுமையானது முடிவிலா மகிழ்ச்சியையும், நினைத்துப் பார்க்க முடியாத பலத்தையும் மற்றும் பரலோக ஆசீர்வாதங்களையும் நமக்குத் தருகிறது. “அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.”

பிளவுகள் உள்ள ஒரு வீடு நிலைத்து நிற்காது என்று வேதம் நமக்கு போதிக்கிறது.  நம் ஆண்டவராகிய இயேசு தம் சீடர்கள் மற்றும் அவரை விசுவாசிக்கும் அனைவருடைய ஒற்றுமைக்காக ஜெபம் பண்ணினார் (யோவான் 17).  பல அவயவங்களை உடைய ஒரே சரீரத்தைப் போல சபையானது இருக்கிறது பவுல் உருவகப்படுத்தி கூறுகிறார். சபையில் ஒவ்வொரு அவயவத்திற்கும் தனித்துவமான செயல்பாடு உண்டு, அவை தனித்து இயங்க முடியாது (1 கொரி.12). இப்படியாக, அனைத்து கிறிஸ்தவர்களும் ஒரே சரீரமாகிய சபையின் உறுப்பினர்களாக, அவயவங்களாக மாறுகிறார்கள். ஆயினும், சபையில், கிறிஸ்தவர்களிடையே, மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களில்  நாம் அதிக ஒற்றுமையின்மையை காண்கிறோம்.  “நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை” இயேசு நமக்குத் தந்திருக்கிறார் (யோவான் 13:34). அன்பும், தாழ்மையும் மட்டுமே நம்மை ஒற்றுமைக்கு  நேராக வழிநடத்திச் செல்லும் என்று ஒரு பரிசுத்தவான் கூறுகிறார்.

பயன்பாடு: நான் தேவனுக்கு முன்பாக வரும்போது, நான் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அவயவமாக இருக்கிறேன் என்பதை நான் நினைவில் கொள்ளா வேண்டும். ஒரு சக கிறிஸ்தவர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு எதிராக கசப்பு மற்றும் வைராக்கியத்தை வைத்துக் கொண்டு, ஒற்றுமையாக இருப்பதினால் வரும் ஆசீர்வாதத்தையும் மகிழ்ச்சியையும் நான் பெற்று அனுபவிக்க முடியாது.  கிறிஸ்து என்னை நேசிப்பது போல நான் அனைவரையும் நேசிப்பதற்கு என் சுய பெருமைகளையும், பிடிவாதங்களையும் விட்டு விட வேண்டும். மேலும், ஒற்றுமை என்பது எல்லாம் ஒரே மாதிரியாக ஒன்று போல் இருப்பதல்ல என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். நான் வேற்றுமையில் ஒற்றுமை காண முயற்சிப்பேன்.

ஜெபம்: பிதாவே, ஒற்றுமையைப் பற்றிய ஒரு அழகான காட்சியை நினைவுபடுத்துவதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, எவ்வித பாரபட்சமும் இல்லாமல் ஒருவரையொருவர் அன்பு செய்ய எங்களுக்கு உதவுங்கள். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவில் நாங்கள் ஒன்றாக இருக்க எங்களை ஒன்றுபடுத்துங்கள். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: