Wednesday, May 26, 2021

மரணத்திலிருந்து ஜீவனுக்கு உட்படுதல்

வாசிக்க:  1 இராஜாக்கள் 3, 4 ; சங்கீதம் 145 ; யோவான் 5: 24-47

வேத வசனம்: யோவான் 5: 24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கவனித்தல்: யோவான் எழுதிய நற்செய்தி நூலில் “ஜீவன்” அல்லது வாழ்வு என்பது முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும். மத்தேயு, மாற்கு மற்றும் லூக்காவுடன் ஒப்பிடும்போது, “ஜீவன்” என்பதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையான zóé” வை யோவான் அடிக்கடி அதிக தடவை (36 முறை) பயன்படுத்தி இருக்கிறார்.  Zoe” என்ற வார்த்தையானது சரீர மற்றும் ஆவிக்குரிய ஜீவனைக் குறிக்கிறதாக இருக்கிறது. இங்கே, ஒருவரின் விசுவாசம் அவருடைய நித்திய ஜீவனுடன் தொடர்புடையது என்று இயேசு சொல்கிறார். இயேசு தருகிற இந்த வாழ்க்கையானது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, தேவனிடத்தில் விசுவாசம் வைக்கிற எவருக்கும் (அது யாராக இருந்தாலும்) அவருக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு நபர் இயேசுவை விசுவாசிக்க ஆரம்பிக்கும்போது, அவர் தேவனை தன் வாழ்வில் அனுபவிக்க ஆரம்பிகிறார்.  எதிர்காலத்தில் நடைபெறப் போகிற ஒன்றை அல்லது நியாயத்தீர்ப்பு நாளில் நடைபெறப் போகிற ஒன்றைப் பற்றி யோவான் 5:24 கூறவில்லை. இயேசுவின் வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு விசுவாசி ஏற்கனவே மரணத்தில் இருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டார், ஆவிக்குரியப் பிரகாரமாக மரித்த நிலையில் இருந்து கிறிஸ்துவுக்குள்ளான நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு விசுவாசிக்கு நித்திய ஜீவனுக்கு சொந்தமானவர், ஆவிக்குரிய மரணத்திற்கு அல்ல.  கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை இருளனைத்தையும் அகற்றி, வெளிச்சத்தைக் கொண்டு வருகிறது. இயேசுவில் நாம் வைக்கிற விசுவாசமானது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பலனளிப்பதாக இருக்கிறது.  இயேசு நமக்குத் தருகிற வாழ்க்கையானது நாம் அவரை விசுவாசிக்கிற முதல் நாளில் இருந்தே தேவனுடனான ஐக்கியத்தைப் பெற்றனுபவிக்க உதவுகிறது. இது தற்காலிகமானதல்ல, மாறாக முடிவில்லாத நித்திய வாழ்க்கை ஆகும்.  நாம் தேவனை விசுவாசிக்கும் போது, இருள் நிறைந்த மரணத்தின் பள்ளத்தாக்கில் இருந்து தேவன் ஆட்சி செய்கிற ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். 

பயன்பாடு: இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அனேகர் கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் இயேசுவின் செய்தியை விசுவாசிப்பதில்லை. நான் திருவசனத்தைக் கேட்கிறவனாக மட்டும் இருக்கக் கூடாது. நான் தேவனையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். அவருடைய வார்த்தையானது என்னை மரணத்தில் இருந்தும், ஆக்கினைத்தீர்ப்பில் இருந்தும் விடுவித்து, நித்திய ஜீவனுக்குள் என்னை நடத்துகிறது. தேவன் தந்த நித்திய வாழ்க்கையையும் ஐக்கியத்தையும் நான் இப்போதிருந்தே  அனுபவித்து மகிழ முடியும் என்பது எவ்வளவு அற்புதமானது! தேவனிடம் உள்ள என் விசுவாசமானது மரணத்தைப் பற்றிய பயங்களில் இருந்து என்னை விடுவிக்கிறது. நான் மரணத்தில் இருந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறேன். மரணம் அல்ல, தேவனே என் வாழ்க்கையை ஆளுகை செய்கிறார். நான் வாழ்ந்தாலும், மரித்தாலும் கர்த்தருடையவனாக இருக்கிறேன் ( ரோமர் 14:8). 

ஜெபம்: இயேசுவே, என் விசுவாசத்தைக் கண்டு நீர் கொடுத்த ஜீவனுக்காக, வாழ்க்கைக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, உம்மில் விசுவாசம் வைக்கிற எவருக்கும் நீர் நித்திய ஜீவனைத் தருகிறீர். ஆவிக்குரியப் பிரகாரமாக மரித்த நிலையில் இருந்த நான் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க உதவியதற்காக உமக்கு நன்றி. நான் இன்றும் என்றும் உம்முடன் வாழ எனக்கு உதவும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 146

No comments: