Saturday, May 8, 2021

கர்த்தர்...கட்டாராகில்...

 வாசிக்க:  1 சாமுவேல் 21, 22; சங்கீதம் 127; லூக்கா 20: 27-47

வேதவசனம்: சங்கீதம் 127: 1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; 2. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. 3. நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

கவனித்தல்: தேவனைச் சார்ந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை சங்கீதம் 127 நமக்கு நினைவுபடுத்துகிறது. நாம் என்ன செய்தாலும், அது பெரிதானாலும் சிறிதானாலும் சரி, நமக்கு தேவன் தேவை. தனித்துவமான திறமை வாய்ந்தவர்கள், அசாதாரணமான தாலந்துகளை உடையவர்கள் உண்டு. சிலர் கடின உழைப்புக்குப் பெயர்பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சங்கீதம் இவர்களுக்கு எதிராக எதையும் சொல்லவில்லை. ஆயினும், சங்கீதக்காரன் சொல்வது போல, அவர்களுடைய உழைப்பு அல்லது முயற்சியின் பலன் தேவனுடைய ஆசீர்வாதத்தினாலேயே கிடைக்கிறது. அனேக மாபெரும் மனிதர்களின் தோல்விகளையும், சாதாரண மனிதர்கள் செய்த அரும்பெரும் சாதனைகளையும் பற்றி வரலாறு நமக்குச் சொல்கிறது. ஆயினும், நவீன உலகில் அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் என நாள்முழுதும் பிரயாசப்படுகிறவர்களாக தங்களை அலுவல் நிறைந்தவர்களாக வைத்துக் கொள்கிறார்கள். ஒரு நாளின் இறுதியில் அவர்கள் மிகவும் சோர்வுற்றவர்களாக, வருத்தம் மற்றும் வேதனையுடன் படுக்கைக்குச் செல்கின்றனர். இங்கு சங்கீதக்காரன் அப்படிப்பட்ட முடிவற்ற கஷ்டங்கள் வீண் என்று சொல்கிறான். சாப்பிட போதிய நேரம் அல்லது உடல்நலம் இல்லை எனில், மிக அதிகம் சம்பாதித்து என்ன பயன்? நம் இருதயத்தில் சமாதானம் இல்லை எனில், வீணான காரியங்களில் நம் உடல் உழைப்பை முற்றிலும் செலவழிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்நாட்களில், உலகமெங்கிலும் தூக்கமின்மை வியாதி உலகமெங்கிலும் பெருகி வருவதைக் காண்கிறோம். நம் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் மனிதர்களின் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை பக்க விளைவு இல்லாத ஒரு தூக்கத்திற்கு உத்திரவாதம் தருவதில்லை. ஆனால் கர்த்தர் ”தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.” அப்படியெனில், நாம் நம் நேரம், குடும்பம், வேலை ஆகியவற்றை தேவனுக்கு உரிய இடம் கொடுப்பதற்கு நாம் எவ்வளவு அதிகமாக முன்னுரிமை கொடுக்க வேண்டும்! 

பயன்பாடு: என் வேலையில் நான் தேவனைச் சார்ந்து இருக்கும்போது, முடிவுகளில் நான் ஒரு வித்தியாசத்தை காண்கிறேன். என் திறமைகள், தாலந்துகள் மற்றும் தேவன் தந்த வரங்கள் ஆகியவை தனித்துவமானவை. ஆயினும், தேவன் விரும்பியபடி பயன்படுத்தும்படி நான் அவருக்கு விட்டுக்கொடுக்கும்போது மட்டுமே, அவை என் வாழ்க்கைக்கு, குடும்பத்திற்கும் மற்றும் என் சமுதாயத்திற்கு மிகுந்த பயனுள்ளதாகவும், பலனளிக்கிறதாகவும் இருக்கும். தேவனுடைய கரங்களில், என் சாதாரண வேலைகள் மற்றும் திறமைகள் மிகச் சிறந்ததொரு படைப்பாக மாற முடியும். எந்த வேலைகள் மற்றும் பொறுப்புகளைக்காட்டிலும் தேவன் எனக்கு முக்கியம். ஆகவே, நான் எதையும் செய்வதற்கு முன்புஅது பெரிதானாலும் சரி, சிறிதானாலும் சரிதேவனைத் தேடுவேன். தேவன் படிப்பை, வேலையை, என் வீட்டை மற்றும் வாழ்க்கையை கட்டி எழுப்பும்படி கேட்பேன். தேவனுடனான என் வாழ்க்கை எனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் வாழ்க்கைக்காக நீர் காட்டுகிற கரிசனைக்காகவும் அன்பிற்காகவும் நன்றி. ஆண்டவரே, “கர்த்தர்...கட்டாராகில்” என்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள எனக்கு உதவும். இயேசுவே, எல்லாவற்றிலும் உம் ஞானத்தைத் தேடவும், என் வாழ்க்கையும் உம்மைக் கனப்படுத்தவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: