வாசிக்க: 2 சாமுவேல் 13, 14; சங்கீதம் 138; யோவான் 2:1-12
வேத வசனம்: யோவான் 2: 4. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
கவனித்தல்: கானாவூரில் நடந்த ஒரு திருமணத்தில் இயேசு செய்த முதலாவது அற்புதம் தங்கள் வாழ்வில் ஒரு அற்புதத்தை எதிர்நோக்கி இருக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டிருக்கிறது. இயேசு தன் தாயாராகிய மரியாளை “ஸ்திரீயே” என்று அழைத்தபடியால் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வில்லை என சில கிறிஸ்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நற்செய்தி நூலாசிரியர் பயன்படுத்தியிருக்கிற guné என்ற கிரேக்க வார்த்தையான ஒரு பெண் என்பதைக் குறிக்கிற பொதுவான வார்த்தை ஆகும். பொதுவாக, ஒரு வார்த்தை சொல்லப்பட்ட சூழ்நிலைதான் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தீர்மானிக்கிறது. இயேசு சிலுவையில் இருந்து தன் தாயாரை அன்புடன் அழைத்தபோது, இதே guné என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (யோவான். 19:26). நற்செய்தி நூலில் guné என்ற வார்த்தையானது பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் கவனிக்கையில் (மத்தேயு 15:28 ; லூக்கா 13:12; யோவான் 4:21; 8:10; 20:13; 20:15), இயேசு தன் தாயாரை அவமரியாதையாக பேசவில்லை என்பதில் உறுதியாக இருக்கலாம். இந்த வசனத்தின் முக்கியமான கருத்து என்னவெனில், இயேசு மேசியாவாக தன்னை வெளிப்படுத்துகிறதற்கு ஏற்ற நேரம் அதுவல்ல என்பதே.
ஆயினும், திருமண வீட்டாரின் உடனடித் தேவையைச் சந்திக்க இயேசுவால் முடியும் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்தி, “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்” என்று வேலைக்காரரிடம் மரியாள் சொன்னாள். அப்படிப்பட்ட ஒரு சிக்கலான நேரத்தில், ஏற்ற நேரத்தில் சரியான தீர்வைக் கொடுக்கக் கூடியவர் இயேசு மட்டுமே என்று அவள் விசுவாசித்தாள். சில நேரங்களில், நாம் விரும்புகிறபடி தேவன் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். மரியாள் அப்படிப்பட்ட ஒரு தவறைச் செய்யவில்லை. அந்தச் சூழ்நிலையின் தேவையை இயேசுவிடம் அவள் சொல்லி, அவர் என்ன சொன்னாலும் அதின்படி கீழ்ப்படிந்து, அவர் சொல்வதைச் செய்யுங்கள் என்று மரியாள் வேலைக்காரருக்கு அறிவுறுத்தினாள். அவர்கள் கீழ்ப்படிந்து, கற்சாடிகள் நிறைய தண்ணீரினால் நிரப்பினார்கள். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதுதான், இயேசு மீதமுள்ள காரியங்களைச் செய்தார். பின்னர், பந்தி விசாரிப்புக் காரனின் வார்த்தைகள் அந்த அற்புதம் எவ்வளவு சிறந்த ஒரு அற்புதம் என்பதை விளங்கப் பண்ணுகிறது.. இயேசு என்ன சொன்னாலும், அதற்காக எதை நாம் எதைக் கொடுக்க வேண்டியதாயிருந்தாலும், நாம் அவரின் வார்த்தைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியும்போது, நம் வாழ்க்கையில் தேவ மகிமையைக் காண்போம்.
பயன்பாடு: எனக்கு ஒரு அற்புதம் (அல்லது வனுடைய இடைபடுதல்) தேவைப்படும்போது, நான் இயேசுவிடம் செல்ல வேண்டும். என் வாழ்க்கைத் தேவைகளைப் பற்றிய என் ஜெபங்களைக் கேட்பதற்கு அவர் என் அருகில் இருக்கிறார். இயேசு எனக்குச் சொல்கிற வார்த்தைகளை நம்பி நான் கீழ்ப்படியவேண்டும். என் வாழ்க்கையின் வெற்று ஜாடிகளை என் இருதயத்தின் முழுமையானக் கீழ்ப்படிதலுடன் நிரப்பும்போது, நான் இயேசுவின் மீது வைத்திருக்கிற விசுவாசத்தை அவர் கனப்படுத்தி, என் தேவைகள் என்னவாக இருந்தாலும் அதை அவர் சந்திக்கிறார்.
ஜெபம்: இயேசுவே, என் வாழ்க்கையில் நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நீர் அற்புதங்களைச் செய்கிற தேவன். என் தேவைகளின் நேரத்தில் மட்டுமல்லாது, எப்பொழுதும் நான் உம்மைச் சார்ந்திருக்கவும், என் வாழ்க்கையில் உம் வார்த்தைகளுக்கு உண்மையான கீழ்ப்படிதலைக் காண்பிக்கவும் எனக்கு உதவும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
No comments:
Post a Comment