Sunday, May 16, 2021

உங்களுக்குச் சமாதானம்

வாசிக்க:  2 சாமுவேல் 7, 8; சங்கீதம் 135 ; லூக்கா 24: 28-53

வேதவசனம்: லூக்கா 24: 36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

கவனித்தல்: இயேசுவின் சீடர்கள் யூத அதிகாரிகளுக்குப் பயந்ததினால்,  பூட்டிய கதவுகளுக்குப் பின் இருந்து கொண்டு இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பேசிக்கொண்டிருந்ததை நாம் பார்க்கிறோம். இயேசு தன் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து முன்னமே சொன்னதை புரிந்து கொள்ளாதபடியினால், அவருடைய சிலுவை மரணத்திற்குப் பின் இயேசுவின் சீடர்கள் தங்கள் ஆண்டவருடைய மரணத்தைக் குறித்த துக்கத்தையும், ஆட்சியாளர்களைக் குறித்த பயத்தையும் மற்றும் தங்கள் எதிர்காலத்தைக் குறித்த கவலைகளையும் அனுபவித்திருப்பார்கள். சுருங்கக் கூறின், அவர்கள் நிச்சயமற்ற ஒரு நிலைமையில் இருந்தார்கள். எம்மாவு கிராமத்துக்குச் சென்ற இரு சீடர்களும் வேகமாக எருசலேமுக்குத் திரும்பி வந்து உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் கண்ட அனுபவத்தைச் சொன்ன போது, மற்ற சீடர்கள் அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை என மாற்கு 16:12-13 சொல்கிறது. ஆயினும், உயிர்த்தெழுதல் நாளின் அதிகாலையில் இருந்தே பயத்தினால் பீடிக்கப்பட்டிருந்த இயேசுவின் சீடர்கள் இயேசுவின் தரிசனம் குறித்து கேள்விப்படவும், அவரைக் காணவும் ஆரம்பித்திருந்தனர். இயேசு தன் சீடர்களுக்குத் தரிசனமான ஒவ்வொருமுறையும், மகிழ்ச்சி மற்றும் பயம் கலந்த கலவையான உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தினர். ஆனால் இயேசுவோ, “உங்களுக்குச் சமாதானம்” என்று சொல்லி அவர்களை வாழ்த்தி, தன்னைப் பற்றிய சந்தேகங்களையும், அவர்களுடைய பயங்களையும் களைந்து போட அவர்களுக்கு உதவி செய்தார். அவர் முன்பு அவர்களிடம் சொன்ன தம் வார்த்தைகளை நினைவுபடுத்தி, அதைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுடைய மனதை அவர் திறந்தார். மேலும், பரிசுத்த ஆவியானவரைப் பெறும் வரைக்கும் அவர்கள் ஜெபத்தில் தரித்திருக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின் என்ன நடந்தது என்பதை நாமறிவோம். நாம் நம்பிக்கையற்ற காலங்களைக் கடந்து செல்லும் போது, பயம், மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கவலைகளை எதிர்கொள்ள நேரிடும் போது, இயேசு தம் சமாதானத்தையும் வாக்குத்தத்தத்தையும்  நமக்குத் தர விருப்பம் உள்ளவராக இருக்கிறார். நாம் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோமா?

பயன்பாடு: இயேசுவைப் பற்றி ஏதேனும் சந்தேகங்கள், என் எதிர்காலத்தைக் குறித்த கவலைகள் மற்றும் பயங்கள் எனக்கு இருந்தால், மற்றவர்களிடம் இருந்து என்னை ஒளித்து மறைத்து வைத்துக் கொள்வதால் நான் அதை சரி செய்து விட முடியாது என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும். மாறாக, நான் இயேசுவைத் தேடும்போது, அந்தரங்கத்தில் நான் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது, எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை எனக்குத் தந்து கிறிஸ்து இயேசுவுக்குள் என் மனதையும் இருதயத்தையும் தேவன் காத்துக் கொள்கிறார். நான் தேவ சமாதானத்தைப் பெறவே விரும்புகிறேன். நான் சமாதானத்தின் தேவனை சேவிக்கிறேன். அவர் சாத்தானையும் அவனுடைய தீய திட்டங்களையும் என் காலின் கீழ் நசுக்கிப் போடுகிறார்.

ஜெபம்: இயேசுவே, என் வாழ்க்கையில் வேதனையான தருணங்களை நான் எதிர்கொள்ளும் நேரங்களிலும் கூட உம் சமாதானத்தை எனக்கு தருகிறதற்காக உமக்கு நன்றி. வேதாகமத்தில் உள்ள சத்தியங்களைக் காண என் கண்களைத் திறந்தருளும். ஆண்டவரே, உம்மில் நான் உறுதியாக நிலை நிற்க என் விசுவாசத்தைப் பலப்படுத்தும். அனுதினமும் உம் சமாதானத்தை பெற்று அனுபவிக்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: