Thursday, May 6, 2021

யுத்தம் கர்த்தருடையது

வாசிக்க:  1 சாமுவேல் 17, 18; சங்கீதம் 125; லூக்கா 19: 28-48

வேதவசனம்: 1 சாமுவேல் 17: 45. அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
46. இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்... அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.
47. கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

கவனித்தல்: கோலியாத் சவுலையும் இஸ்ரவேலரையும் ஒரு நேரடி யுத்தத்திற்கு சவால் விட்டு அழைத்தபோது, அவனுடைய பிரமாண்டமான உயரம் மற்றும் அவனுடைய ஆயுத அணிகலன்களின் எடை குறித்து மிகவும் பயந்தார்கள். கோலியாத் 9 அடி உயரமும், ஏறக்குறைய 58 கிலோ எடையுள்ள வெண்கல போர் அணிகலன்களினால் தன் உடலை முற்றிலும் மறைத்துக் கொண்டிருந்த போர்வீரன் ஆக இருந்தான். இஸ்ரவேலர்களில் சவுல் மிகவும் உயரமானவனாக இருந்தான் (1 சாமு.9:2). ஆயினும், அந்த பெலிஸ்தன் வந்த போது, அவனுக்கு எதிராகச் சென்று சண்டையிடுவதற்குப் பதிலாக, சவுலும் கோலியாத்தைக் குறித்து கலங்கி மிகவும் பயப்பட்டான். இங்கே, பயத்தின் அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு சேனையையும் அவர்களின் ராஜாவையும் பார்க்கிறோம்.

ஆயினும், பதின்ம வயது சிறுவனான தாவீது யுத்தக்களத்திற்கு வந்து, தேவனுக்கும், அவருடைய மக்களுக்கும் எதிரான கோலியாத்தின் நிந்தனைகளைக் கேட்ட போது, தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தீர்மானம் உடையவனாக மாறினான் (1 சாமு. 17: 26, 27, 30). போரிட்டு பழகாத தாவீதை ஒரு தொழில்முறை யுத்த வீரனுக்கு எதிராக சண்டையிட அனுப்ப சவுலுக்கு தயக்கம் இருந்தது. தாவீதோ கர்த்தருடைய பலத்தில் போருக்குச் செல்ல விரும்பினான். எந்த ஆயுதங்களுடன் அல்ல, கர்த்தருடைய நாமத்தில் வந்திருப்பதாக கோலியாத்திடம் தாவீது தைரியமாகச் சொன்னான். ஒரு கவண் மற்றும் கூழாங்கல் கொண்டு  தாவீது அந்த பெலிஸ்தியனைத் தோற்கடித்தான். வலிமையான போர்க்கவசங்களினால் தன் உடலை முழுமையாக மூடி மறைத்திருந்த கோலியாத்தைக் கொல்வது தாவீதுக்கு சாத்தியமானது எப்படி? (சவுல் உட்பட) அனைவரும் கோலியாத் எவ்வளவு பெரியவன் என்று பார்த்துக் கொண்டிருந்தபோது, தாவீது தன் தேவன் எவ்வளவு பெரியவர், வல்லமையுள்ளவர் என்று பார்த்தான். அந்த தனி நபருக்கு இடையேயான யுத்தத்தை கர்த்தருடைய யுத்தமாக மாற்றினான். சேனைகளின் கர்த்தர் மீதமுள்ளவைகளைச் செய்தார். பெலிஸ்தியரின் ஹீரோவை தாவீது கொன்று வீழ்த்தினான். நாம் பெரிய கோலியாத்துகளைப் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், கர்த்தருடைய பலத்தில் அவைகளுக்கு எதிராக செல்ல வேண்டும். நம் இயலாமைகள் மற்றும் பலவீனங்களைக் குறித்து நாம் கவலைப்படத் தேவை இல்லை. தேவன் இன்றும் கூட நமக்கு உதவ முடியும். ஏனெனில் அவர் மாறுவதில்லை. அவர் உயிரோடிருக்கிறார். அவரால் எல்லாம் ஆகும்! 

பயன்பாடு: நான் மலை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்போது, தாவீதுக்கு உதவிய அதே தேவன் எனக்கும் உதவ வல்லவராயிருக்கிறார் என்பதை நான் நினைவில் கொள்ளா வேண்டும். அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளின் நேரங்களில் தேவனை தங்களுடைய பலமாகக் கருதுவதில்லை என்பது வருந்தத்தக்கது. நான் தேவனுடைய நாமத்தில் வெளியே செல்லும்போது, நான் பாதுகாக்கப்பட்டவனாகவும், தீய சக்திகளை எதிர்க்க வல்லமை உள்ளவனாகவும் இருக்கிறேன். இப்போது என் வாழ்வில் இருக்கிற பிரச்சனைகள் என் தேவனை விட பெரியவை அல்ல. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்”  என்று தாவீதைப் போல நான் பாடுவேன் (சங்.18:29). தேவன் என் பெலன். அவரில் நான் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, நீர் இன்றும் எங்களுக்காக யுத்தம் செய்து, உம் ஜனங்களுக்காக யுத்தங்களை ஜெயிக்கிறீர். என் பார்வையில் என் தற்போதைய சூழ்நிலைகளும் பிரச்சனைகளும் மிகப் பெரியதாகத் தோன்றலாம். ஆனால் அவர் உமக்கு கையாள முடியாத பெரிய பிரச்சனைகள் அல்ல. ஆண்டவரே, நான் என் நம்பிக்கையை உம் பலத்தில் வைத்து, உம் கைகளில் அவைகளை ஒப்புவிக்கிறேன். உம் நாமத்தினால், நான் என் போராட்டங்களில் வெற்றி பெறுவேன். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: