வாசிக்க: 1 சாமுவேல் 15, 16; சங்கீதம் 124; லூக்கா 19: 1-27
வேதவசனம்: 1 சாமுவேல் 15: 22. அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
கவனித்தல்: தேவன் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதை மேலே நாம் காணும் இரண்டுவசனங்களும் நினைவுபடுத்துகின்றன. சாமுவேல் சொன்ன வார்த்தைக்கு எதிராக, சவுல் அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிர் தப்ப விட்டு, அவனும் அவனுடைய படைவீரரும் கொள்ளையில் தரமானவைகளை தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வைத்துக் கொண்டனர். சாமுவேல் சவுலைத் தேடினபோது, அவனோ தன் பேரைப் பெருமைப்படுத்தும் ஜெயஸ்தம்பம் நிறுவுவதில் மும்முரமாயிருந்தான். கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் அவன் இருந்ததை எதிர்த்து சாமுவேல் கேள்வி கேட்டபோது, அவர் சாக்குப்போக்குகளைச் சொல்லத் துவங்கி, பழியை தன் படைவீரர்கள் மேல் சுமத்தினான். அவன் தன் செய்த பாவத்தில் இருந்து மனம் திரும்புவதற்குப் பதிலாக, கொள்ளைப் பொருள்களைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டு, தன் பெயர் மற்றும் மற்றவர்கள் முன் தன் மதிப்பு கெடுவதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் (1 சாமு.15:24, 30). கீழ்ப்படியாத, உண்மையற்ற ஒருவரின் பலியானது தேவனுக்கு அருவருப்பானது ஆகும். நம் காணிக்கைகள் மற்றும் பலிகளால் தேவனைப் பிரியப்படுத்தி, நம் பாவங்களை மறைத்து விட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1 சாமு.16 ல், கர்த்தர் கட்டளையிட்டபடி இஸ்ரவேலின் எதிர்கால ராஜாவை அபிசேகம் செய்ய சாமுவேல் சென்றதை நாம் காண்கிறோம். கடந்த காலத்தில் சவுலை தேவன் தேர்வு செய்த விதத்தைக் கண்ட சாமுவேல், இங்கு உயரத்தையும் வெளிப்புறத் தோற்றத்தையும் பார்த்துக் கொண்டு இருந்திருக்கக் கூடும். ஆனால், ஈசாய் தன் மகன்களை ஒருவர் பின் ஒருவராக சாமுவேல் முன் கொண்டுவந்த போது, ஆரம்பத்திலேயே தேவன் சாமுவேலிடம் தான் ஒரு நபரின் இருதயத்தையே பார்ப்பதாகவும், அவரின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்ப்பதில்லை என்றும் தேவன் சொன்னார். ஆகவே, சாமுவேல் ஈசாயின் மகன்களில் எதிர்கால ராஜாவை அடையாளம் கண்டுகொள்ள தேவன் அவர்களை எப்படிப் பார்க்கிறாரோ அதே விதத்தில் பார்க்க வேண்டியதாயிருந்தது. ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து நாம் எவ்வளவு சீக்கிரமாக ஒருவரைப் பற்றி நியாயந்தீர்த்து விடுகிறோம்! தேவன் ஒருவரின் செல்வம், கல்வி, சமுதாய அந்தஸ்து, சாதி, மற்றும் நிறம் போன்ற காரியங்களைப் பார்ப்பதில்லை. அவர் அம்மனிதரின் இருதயத்தைக் காண்கிறார். தேவன் மற்றவர்களை காண்கிற அதே விதத்தில் நாமும் அவர்களைப் பார்ப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பயன்பாடு: தேவனுடைய வார்த்தைக்கும் கற்பனைகளுக்கும் நான் முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். முதல் தரமானவைகளை என் சொந்த் உபயோகத்திற்கென வைத்துக் கொள்கிற அரைகுறை கீழ்ப்படிதலில் நான் திருப்தி அடையக் கூடாது. என் காணிக்கைகள் மற்றும் பலிகளினால் நான் தேவனைப் பிரியப்படுத்தி விட முடியாது. வேண்டுமென்றே நான் கீழ்ப்படியாமல் இருப்பது நான் விரும்பிய பலனைப் பெற உதவாது. மாறாக, தேவனுடனான என் உறவை அது பாதிக்கும். ஆகவே, நான் தேவனுடைய வார்த்தைக்குக் கவனமாக கீழ்ப்படிவேன். தேவனுடனனான என் அன்பின் உறவின் காரணமாக நான் தேவனுக்கு அனுதினமும் கீழ்ப்படிகிறேன். நான் மற்றவர்களை பாரபட்சமின்றி, தேவன் அவர்களைப் பார்ப்பதுபோல பார்ப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் ஆன்மீக வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் இந்த இரு முக்கியமான பாடங்களுக்காக உமக்கு நன்றி. உம்முடனான என் அன்புறவில் வளர எனக்கு உதவும். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.” ஆமென்.
+91 9538328573
No comments:
Post a Comment