வாசிக்க: 1 சாமுவேல் 29 - 31; சங்கீதம் 131; லூக்கா 22: 35-71
வேதவசனம்: லூக்கா 22: 39. பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.
40. அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,
41. அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
45. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரைபண்ணுகிறதைக் கண்டு:
46. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
கவனித்தல்: எருசலேமிற்குள் ஒரு வெற்றிகரமான பவனியுடன் வந்த பின்பு, ஒவ்வொரு நாள் மாலையும் (ஞாயிறு முதல் வியாழன் வரை) இயேசு ஒலிவ மலைக்கு சென்று இரவும் முழுவதும் ஜெபித்தார். கடைசி இராப்போஜனத்திற்குப் பின்பு , இயேசு தன் “வழக்கத்தின்படியே” ஜெபிக்கச் சென்றார். இந்த முறை, அவருடைய சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். இயேசு தாம் வழக்கமாக ஜெபிக்கும் இடத்திற்கு (கெத்சமனே) வந்ததும், அவர் தன் சீடர்களிடம் “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள்” என்று சொன்னார். “ஜெபம்பண்ண... எங்களுக்குப் போதிக்கவேண்டும்” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டபோது, “சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று தன் மாதிரி ஜெபத்தில் இயேசு அவர்களுக்குப் போதித்தது உங்கள் நினைவுக்கு வருகிறதா? இயேசுவின் பாடுகளின் போது தம் சீடர்கள் எதிர்கொள்ள இருக்கிற சோதனைகள் பற்றி இயேசு தெளிவாக இராப்போஜன நேரத்தில் அவர்களிண்டம் எச்சரித்தார். அவர்கள் அப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள ஆயத்தமுள்ளவர்களாக இருகக் வேண்டும் என அவர் விரும்பினார். ஆகவே, சோதனைக்கு எதிராக நிற்கும்படி அவர்களை ஜெபிக்கச் சொன்னார்.
மத்தேயு 22:36-46 மற்றும் மாற்கு 14:32-42 ஆகிய வேத பகுதிகளும் இயேசு ஒலிவ மலையில் ஜெபித்தது பற்றிக் கூறுகின்றன. இயேசு சுமார் மூன்று மணி நேரம் ஜெபித்தார் எனத் தோன்றுகிறது. இயேசு தனக்கு நெருக்கமான மூன்று சீடர்களையும் தம்முடன் இணைந்து ஜெபம் பண்ண வேண்டும் என்று சொன்னார். ஆனால் அவர்கள் நித்திரை மயக்கமாகவும், தூங்கிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களைக் கடிந்து கொண்டு ஜெபம் பண்ண வேண்டுமென இயேசு நினைவுபடுத்திய போது, “தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.” அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறவர்களாக இருந்தார்கள் என லூக்கா காரணம் சொல்கிறார்.
தம் சீடர்கள் ஜெபிக்க வேண்டும் என இயேசு நினைவு படுத்தியபோது சொன்ன சில வார்த்தைகளை நாம் காண்போம்: “எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள்”, “ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?”, “விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது”, “நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன?” இயேசு சிலுவை மரணத்தின் வேதனையைத் தாங்கும் வலிமையை ஜெபம் செய்த போது பெற்றுக் கொண்டார். நாம் பலவிதமான சோதனைகள் மற்றும் பாடுகளினூடாக செல்லக் கூடும் அல்லது எதிர்கொள்ள நேரிடலாம். நம் கவலைகள் நம் துக்கங்களாக மாறிவிட நாம் அனுமதிக்கக் கூடாது. வரப்போகிற ஆபத்தை நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நாம் ஜெபிக்கும்போது, நம் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு தேவனுடைய உதவியையும் வல்லமையையும் பெற்றுக் கொள்வோம்.
பயன்பாடு: என் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அல்லது என் எதிர்காலத்தைக் குறித்த பயங்கள் ஆகியவற்றைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நான் ஜெபம் செய்வேன். நான் ஜெபம் செய்யும்போது, என் வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொள்ள அல்லது வெற்றி பெறுவதற்கான தேவனுடைய வல்லமையை நான் பெறுகிறேன்.
ஜெபம்: இயேசுவே, என் வாழ்க்கையின் மிக மோசமான சூழ்நிலைகளிலும் கூட நான் ஜெபிக்க வேண்டும் என்று எனக்கு போதிக்கிற முன்மாதிரியான உம் வாழ்க்கைக்காக நன்றி. என் பலவீனங்களை ஜெயிக்கவும், என் வாழ்க்கையில் உள்ள போராட்டங்களை வெற்றி பெறவும் அனுதினமும் ஜெபிக்க எனக்கு உதவும். ஆமென்.
+91 9538328573
No comments:
Post a Comment