Sunday, May 30, 2021

எது முக்கியம்? - சாலொமோனின் வாழ்க்கை சொல்லும் பாடம்

வாசிக்க:  1 இராஜாக்கள் 11, 12 ; சங்கீதம் 149 ; யோவான் 7: 25-53

வேத வசனம்:  1 இராஜாக்கள் 11: 4. சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
5. சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.
6. சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

கவனித்தல்: சாலொமோன் வாழ்ந்த நாட்களில் இருந்த எல்லா மனிதரையும் விட அவன் ஞானம் நிறைந்தவனாக இருந்தான் (1 இராஜா 4:31). சாலொமோனின் ஞானத்தைக் கேட்பதற்காக அனேகர் அவனிடம் வந்தனர் ( 1 இராஜா. 4:34; 10:1-13). அது மட்டுமல்ல, அவனிடம் ஏராளமான செல்வம் இருந்தது ( பார்க்க. 1 இராஜா 10: 14-29). அவனுடைய ஆட்சியில், வெள்ளியானது மதிப்பற்ற ஒரு பொருளாக இருந்தது (1 இராஜா 10: 21, 27). அவனுடைய ஞானம் மற்றும் செல்வம் இரண்டுமே தேவன் அவனுக்குக் கொடுத்த பரிசுகள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தன்னுடைய ஞானம் மற்றும் செல்வத்துடன், சாலொமோன் ஒரு சிறந்த அரசராக இருந்திருக்க வேண்டியவர். ஆனால், சிறந்த ஆரம்பத்தை உடைய ஞானம் நிறைந்த ஒரு இராஜாவின் வீழ்ச்சியைப் பற்றிய குறிப்பை நாம் இங்கு காண்கிறோம். 

தன் இராஜ்ஜியத்தை தாக்குதல்கள் மற்றும் போர் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதற்காக தன் திருமணங்கள் மூலம் சாலொமோன் ஒரு உலக ரீதியான கூட்டுறவை ஏற்படுத்தி இருக்கக் கூடும். ஆயினும், மோசே மூலமாக தேவன் கொடுத்த எச்சரிக்கைகளுக்கு அவன் கீழ்ப்படியவில்லை (உபா.17:14-20). அவன் தேவனை மறுதலிக்கவில்லை. மாறாக,  “தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.”  முதலாவதாக, சாலொமோன் தன் மனைவிகளை அவர்களுடைய அந்நிய தெய்வங்களை அவரக்ள் வணங்கும்படி அனுமதித்திருக்கலாம். படிப்படியாக, அவர்கள் தேவனிடம் இருந்து அவனுடைய இருதயத்தைத் திருப்பினார்கள். முடிவில், அவன் கர்த்தருடனான தன் அர்ப்பணிப்பில் குறைவுள்ளவனாக மாறினான். தன்னுடைய ஞானத்தில், மற்ற மதங்களுடைய நடவடிக்கைகளில் கலந்து கொள்வது தேவனுக்கு எதிரான ஒரு பெரிய பாவம் அல்ல என்று அவன் நினைத்திருக்கக் கூடும். ஆனால், தேவனுடைய கற்பனைகளுக்கு அவன் கீழ்ப்படியாதபடியால், கர்த்தர் அவன் மேல் கோபமடைந்தார். நாம் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்பதை சாலொமோனின் வாழ்க்கை நமக்கு நினைவுபடுத்துகிறது. உலக ரீதியிலான நம் தொடர்புகள், தேவ பக்தியற்றவர்களுடனான கூட்டணி போன்றவை தேவனிடம் இருந்து நம் இருதயத்தை திருப்பி, அவரை விட்டு நாம் விலக காரணமாகக் கூடும். 

பயன்பாடு: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்” என்று சாலொமோன் எழுதினான் (நீதி.1:7). ஆயினும், அவன் வயது சென்று பலவீனமானபோது, கர்த்தருக்குப் பயப்படுதலையும், ஞானத்தையும் அசட்டை பண்ணினான் என்பது வருந்தத்தக்கது ஆகும்.  மற்றவர்களை விட எனக்கு எவ்வளவு அதிக ஞானம் இருக்கிறது என்பதை தேவன் பார்ப்பதில்லை. மாறாக, அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் அர்ப்பணம் உள்ள என் இதயத்தை தேவன் காண்கிறார். வேதாகமம் சொல்வது போல, நான் தேவனை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்பு கூறுகிறேன் ( உபா.6:5; மத்.22:37). 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, உம்மை அன்பு செய்து உம் வார்த்தையை  பின்பற்ற  எனக்கு நினைவு படுத்துவதற்காக உமக்கு நன்றி. உம்மிடம் இருந்து என் கவனத்தை திசைதிருப்புகிற சோதனைகளை மேற்கொள்ள உதவும். இயேசுவே, நீரே என் ஞானம். நான் எப்பொழுதும் உம்மைச் சார்ந்து வாழ எனக்கு உதவும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 150


No comments: