வாசிக்க: 1 சாமுவேல் 19, 20; சங்கீதம் 126; லூக்கா 20: 1-26
வேதவசனம்: சங்கீதம் 126: 4. கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.
5. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
கவனித்தல்: தேவனுடைய ஜனங்களின் திரும்புதல் பற்றிய மகிழ்ச்சியைக் குறிப்புடன் சங்கீதம் 126 துவங்குகிறது. பாபிலோனிய சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த யூதர்கள் குறித்து இச்சங்கீதம் சொல்கிறது. அவர்களுக்கு அது நம்பமுடியாத ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியுடன் தேவனைத் துதித்தார்கள். ஆயினும், 4ம் வசனத்தில், “எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்” என்ற ஒரு ஜெபத்தை நாம் காண்கிறோம். சங்கீதக்காரன் ஏற்கனவே ஒரு திருப்புதலை அனுபவித்திருக்கும்போது, ஏன் மறுபடியும் அதற்காக ஜெபிக்க வேண்டும் என்று நாம் நினைக்கக் கூடும். கடந்த காலத்தில் தேவன் விடுவித்ததை நம் வாழ்வில் இடைபட்டதை நினைத்துப் பார்ப்பது நம் விசுவாசத்தை கட்டி எழுப்புகிறதாக இருக்கிறது. நம் வாழ்வின் தற்போதைய சவால்களுக்காகவும், நம் வாழ்வின் இன்னமும் செய்து முடிக்கப்படாத வேலைகளுக்காகவும் ஜெபிப்பதற்கு தேவனியான பலத்தை அது தருகிறது. இங்கு ”திருப்பும்” என்ற ஜெபமானது ஏற்கனவே ஆரம்பித்த திருப்புதலின் வேலை தொடர்ந்து நடக்கவும், செய்து முடிக்கப்படவும் வேண்டும் அல்லது இன்னமும் செய்யப்படவேண்டியவைகள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
“தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல” திருப்பும் என்று சங்கீதக்காரன் ஜெபிக்கிறார். யூதேயாவின் தெற்குப்பகுதி தண்ணீர் இல்லாத வறட்சியானதும், விவசாயம் செய்வதற்கு வசதியற்றதுமான இடம் ஆகும். ஆயினும், திடீரெனப் பெய்யும் பெருமழைகளினால் உண்டாகும் காட்டாற்று வெள்ளங்கள் தெற்குப் பகுதியில் உள்ள நீரோடைகளை தண்ணீர்களால் நிரப்பும். நம் வாழ்வில் தோல்வி நிறைந்த ஒரு நீடிய வறண்ட காலத்தை நாம் அனுபவிக்கக் கூடும். நாம் தேவனிடத்தில் திரும்பும்போது, அவர் தன் வேளையில் தன் ஆசீர்வாதங்களினால் நம் வாழ்வை நிரப்ப வல்லவராக இருக்கிறார். தொடர்ந்து நீண்ட நாட்கள் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனிடம் அவனுடைய முயற்சிகளை கண்ணீருடன் (ஜெபத்தில்) விதைக்குமாறு ஒரு ஞானி ஆலோசனை சொன்னானாம். சங்கீதக்காரன் தன் நம்பிக்கையை, மகிழ்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்பை விதைத்தல் அறுத்தல் பற்றிய உருவகத்துடன் வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். கண்ணீருடன் விதைக்கிறவர்களுக்கு மகிழ்ச்சியுடனும் கெம்பீரத்துடனும் பாடி அறுவடை செய்து திரும்புவது வாக்கு பண்ணப்பட்டிருக்கிறது.
பயன்பாடு: தேவன் என் வாழ்வில் இதுவரை அனேக வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறார். அவர் என்னை அனேக காரியங்களில் இருந்து விடுவித்திருக்கிறார். ஆயினும், சில நேரங்களில் நான் என் முயற்சிகள் அனைத்தும் பலனற்று, பயனற்றுப் போவதைக் காணக் கூடும். தேவனுடைய விடுதலை எனக்கு இன்னமும் தேவை என்பதை நான் உணரும்போது, தேவன் என் சிறையிருப்பை திருப்ப நான் ஜெபிக்க முடியும். என் பாவச் சோதனை, அல்லது வியாதி, அல்லது சரீர பலவீனம், அல்லது குடும்பச் சூழ்நிலை, அல்லது தேவபக்தியற்ற சுற்றுப்புறம் போன்றவை என் சிறையிருப்பாக இருக்கக் கூடும். அது என்னவாக இருந்தாலும், நான் உண்மையுள்ள இருதயத்துடன் தேவனிடம் ஜெபிக்கும்போது, நம்பமுடியாத விதத்தில் அவர் என் சிறையிருப்பை மாற்றுவார். அவருடைய இரட்சிப்பு சொல்ல முடியாத சந்தோசத்தை எனக்குத் தருகிறது.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் என்னை எடுத்து நிறுத்தும் போது தருகிற மகிழ்ச்சிக்காக உமக்கு நன்றி. உம் கரங்களில் இருப்பதுதான் எவ்வளவு அற்புதமானது! கர்த்தாவே, என் சிறையிருப்பைத் திருப்பும். என் வாழ்வில் நீர் செய்கிற வல்லமையான செயல்களைச் சொல்லி துதிக்கும் மகிழ்ச்சியின் பாடலை நான் பாடுவேன். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment