Tuesday, May 25, 2021

எவ்வித எதிர்பார்ப்புகள் இல்லாத எதிர்பாராத ஒரு அற்புதம்

வாசிக்க:  1 இராஜாக்கள் 1, 2 ; சங்கீதம் 144 ; யோவான் 5: 1-23

வேத வசனம்: யோவான் 5: 6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
7. அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

கவனித்தல்: நடைபெறச் சாத்தியமில்லாத நம்பிக்கையுடன் என்றாவது ஒரு நாள் சுகம் கிடைக்கும் என்று 38 வருடங்களாக அந்த மனிதன் குளத்தின் அருகே இருந்ததை நாம் பார்க்கிறோம். ஆயினும், இயேசு தாமாகவே அவன் அருகே சென்று, “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” என்று கேட்ட போது, அவன் நேரடியான ஒரு பதிலைச் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்கள் மேல் பழியைப் போட்டு, தான் எதினால் இதுவரை சுகம் கிடைக்கப் பெறவில்லை என்பதை சொல்லிக்கொண்டிருந்தான்.  அவனுடைய நாள்பட்ட வியாதி மற்றும் காத்திருத்தலானது அவனுடைய ஆர்வம் அனைத்தையும் வடிந்தோடப் பண்ணியிருக்கும். அந்த சமாரியப் பெண்ணைப் போல (யோவான் 4:10), தன்னிடம் பேசுவது யார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே, அவன் இயேசு தன்னைக் குணப்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் இயேசுவோ அவனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்று சொன்னார். உடனே அவனுடைய நீண்ட நாள் காத்திருக்குதல் ஒரு முடிவுக்கு வந்து, அவன் சுகமடைந்தான். அவனுடைய குறை அல்லது வியாதி ( அவன் கண்பார்வ்வையற்றவராக, அல்லது முடவனாக, அல்லது வாத நோயினால் பாதிக்கப்பட்டவனாக இருந்திருக்கக் கூடும்.) என்ன வென்று நமக்குத் தெரியவில்லை. நாமறிந்தது எல்லாம் என்னவெனில், இயேசு அவனைச் சந்தித்தபோது, அவன் அதன் பின் ஒரு வியாதியஸ்தனாக இருக்கவில்லை. அற்புதம் தேடி வந்த நபர்களின் விசுவாசத்திற்கு பதிலளிப்பதாகவே அனைத்து அற்புதங்களும் இருந்தாலும், இந்த வேத பகுதியானது ஒருவர் இயேசுவின் மீது போதிய விசுவாசம் இல்லாதவராக இருந்தாலும் கூட, இயேசு அவரைக் குணப்படுத்த முடியும் என்பதை இந்த வேதபகுதி நமக்குச் சொல்கிறது. 

இன்றைய உலகில், வியாதி இல்லாதவர் என எவரும் இல்லை. ஒரு அற்புத சுகம் கிடைக்கும்படி வியாதியஸ்தர் அனைவரும் ஆண்டவரைத் தேடுவதில்லை என்று நாமறிவோம். இயேசு தான் விரும்பும் எவரையும் குணப்படுத்த முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த பெதஸ்தா குளம் அருகே, அனேகர் அற்புதம் பெறுவதற்காகக் காத்திருந்தனர். ஆனால் இயேசுவோ 38 வருடங்கள் காத்திருந்த இந்த மனிதனைத்தான் சுகப்படுத்தினார். இயேசுவின் அற்புத சுகத்தைப் பெற்ற மனிதன் இயேசுவுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் உண்மையாக இருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது ஆகும்.  இயேசு அவனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை.   “இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே” (வ.14) என்று அவனிடம் சொன்னார். பாவத்தின் விளைவாகவே வியாதி வருகிறது என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அந்த மனிதனின் பாவங்கள் தான் அவனுடைய நீண்டகால வியாதிக்கும் காத்திருத்தலுக்கும் காரணம் என்பதை உணர்த்துகின்றன. இன்றும் கூட இயேசு நம்முடன் பேசுவதற்கும் குணமாக்குவதற்கும் உண்மையுள்ளவராக அவர் இருக்கிறார். தேவனை அறியாத அல்லது விசுவாசிக்காத ஜனங்கள் எவரையும் இயேசு இரட்சிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்கலாம். ஒருவரின் விசுவாசக் குறைபாடு இயேசுவை எவ்விதத்திலும் மட்டுப்படுத்தாது.

பயன்பாடு:  யூதர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்வது தான் தங்கள் குறிக்கோள் என்று பார்த்ததால், அவர்களால் அந்த அற்புதத்தின் மகத்துவத்தை காணமுடியாமல் போயிற்று. இயேசு என் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு காரியத்தைச் செய்யும்போது, நான் அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் கீழ்ப்படியவும் திறந்த மனதுள்ளவனாக இருக்க வேண்டும். நான் இயேசுவுக்குக் கீழ்ப்படியும்போது, நான் எவ்வளவு காலம் காத்திருந்தேன் என்பது ஒரு பொருட்டல்ல. என் நீண்ட காத்திருக்குதல் ஒரு முடிவுக்கு வரும். நான் தேவனைப் பிரியப்படுத்துகிற ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். தேவனைப் பிரியப்படுத்துகிற ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும். கர்த்தருக்காக காத்திருக்குதல் ஒரு போதும் வீணாகாது.  

ஜெபம்: இயேசுவே, எந்த வியாதியையும் சுகப்படுத்த உம் வார்த்தைகள் வல்லமையுள்ளதாக இருக்கின்றது. ஆண்டவரே, அற்புதத்திற்காக மட்டும் அல்ல, உம்மை அறிந்து என்னிலும் என் வாழ்க்கை மூலமாகவும் உம்மை கனப்படுத்தவும் உம்மைத் தேட எனக்கு அருளும்.  ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 145


No comments: