Thursday, May 13, 2021

இயேசு ஒரு மந்திரவாதியா?

வாசிக்க:  2 சாமுவேல் 1 ,  2; சங்கீதம் 132; லூக்கா 23: 1-25

வேதவசனம்: லூக்கா 23: 8. ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, 9. அநேக காரியங்களை குறித்து, அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

கவனித்தல்: பிலாத்து இயேசுவை ஏரோதுவிடம் அனுப்பிய போது, இயேசுவைப் பார்க்கவேண்டும் என்ற தன் விருப்பம் நிறைவேறியதால் ஏரோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஏனெனில், இயேசுவின் பெரும்பான்மை ஊழியங்கள் மற்றும் அற்புதங்களை காற்பங்கு தேசாதிபதியாக ஏரோது ஆட்சி செய்த  கலிலேயா பகுதியில் செய்தார். யோவான் ஸ்நானகனின் மரணத்திற்குப் பின்பு, ஏரோது இயேசுவின் அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, “யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது” என்று சொன்னான் (மத்.14:2, மாற்கு 6 14). இயேசுவை அற்புதம் செய்யும் ஒரு நபராக மட்டுமே ஏரோது பார்த்தான். மறுபுறம், இயேசுவோ ஏரோதுவை தன் சுய லாபத்துக்காக தந்திரமான காரியங்களைச் செய்யும் நரிக்கு ஒப்பிட்டுப் பேசினார் (லூக்கா 13:32,33). இயேசுவின் அற்புதங்களையும், அற்புதங்கள் மற்றும் விடுதலை பெற்றவர்களையும் பார்ப்பதற்கு ஏரோதுவுக்கு அனேக வாய்ப்புகள் கண்டிப்பாக இருந்திருக்கும். ஆனால் அவன் இயேசுவைப் பார்ப்பதற்கு இதற்கு முன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இப்பொழுதோ, இயேசு அற்புதங்கள் செய்து காட்ட வேண்டும் என்று விரும்பினான்.

தன் அற்புத தொடுதலின் அவசியத் தேவை இருந்த பலரை இயேசு சுகப்படுத்தினார். அற்புதம் பெறுவதற்காக நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் வந்த எவருக்கும் இயேசு ஏமாற்றம் தரவில்லை. தன்னைப் பார்க்க விரும்பினவர்களின் வீட்டுக்கு அவராகவே முன் வந்து சென்றார் (லூக்கா 10:1-6). ஏரோது தன் தேவைக்காக அல்ல, தன் அரச பெருமையில் தன் ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காக இயேசுவிடம் அற்புதத்தை எதிர்பார்த்தான்.  பரிசேயர்களின் மற்றும் சதுசேயர்களின் மிகக் கடினமான, சிக்க வைக்கக்கூடிய  கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளித்த இயேசு, ஏரோதுவுக்கு ஒரு பதிலும் சொல்ல வில்லை. இயேசு அற்புதத்திற்காக தேவையையும், அற்புதத்தை எதிர்பார்க்கிறவர்களின் இருதய விருப்பத்தையும் எப்போதும் காண்கிறார்.  உண்மையான தேடுதல் உள்ள ஒருவர் இயேசுவை ஒருபோதும் கேலி செய்ய மாட்டார். ஆனால், ஏரோதுவைப் போன்ற பெருமை நிறைந்தவர்கள் தாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை எனில் இயேசுவை கேலி செய்வர்.  பணத்துக்காகவும் பொருளுக்காகவும் மக்களின் கவனத்தைப் பெற எதையாவது செய்கிற மந்திரவாதியா இயேசு? அவர் கர்த்தர். தங்களின் தேவையில் இருந்து அற்புதம் வேண்டி அவரைக் கூப்பிடுகிறவர்கள் அனைவருக்கும் இயேசு பதிலளிக்கிறார். அகந்தையும் இடும்பும் உள்ள ஒரு நபர் இயேசுவிடம் இருந்து எதையும் பெற மாட்டார்.

பயன்பாடு: அனேகர் இயேசுவை பலவித காரணங்களுக்காக பார்க்க/சந்திக்க விரும்புகின்றனர். இயேசுவைப் பற்றி அவர்கள் கேள்விப்படுகிறதும் வாசிக்கிறதும் அவரைப் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்பில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக  நான் இயேசுவைத் தேடக் கூடாது. மாறாக, அவரை என் ஆண்டவரும் இரட்சகருமாக நான் கனம் செய்ய வேண்டும். அன்பு நிறைந்த தாழ்மையுள்ள ஒரு இருதயத்துடன் நான் இயேசுவிடம் செல்லும்போது, அவர் என்னை ஏற்றுக் கொண்டு, என் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். இயேசு “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” அவர் என் துதிக்குப் பாத்திரர்.

ஜெபம்: இயேசுவே, என்னைத் தாழ்த்தி, உண்மையான அன்புள்ள இருதயத்துடன் உம்மைத் தேட போதிக்கும்  இந்த முக்கியமான பாடத்திற்காக நன்றி. ஆண்டவரே, தாழ்மையுள்ளவர்களுக்கு நீர் கிருபை அளிக்கிறீர், பெருமை உள்ளவர்களுக்கோ எதிர்த்து நிற்கிறீர். நான் என் பேராசைகளுக்கு அல்ல, தேவைகளுக்காக உம்மைத் தேட எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: