Tuesday, May 4, 2021

எண்ணித் துணிக கருமம்

வாசிக்க:  1 சாமூவேல் 13, 14; சங்கீதம் 123; லூக்கா 18: 18-43

வேதவசனம்: 1 சாமூவேல் 13: 11. நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே,
12. கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.

கவனித்தல்: சவுல் இஸ்ரவேலரின் ராஜாவாக ஆனதும் சீக்கிரத்திலேயே தன்னைப் பற்றியே சிந்திக்கிறவனாகவும், தேவனையும் அவருடைய வார்த்தையையும் சார்ந்திராமல் தன் சொந்த எண்ணங்களைச் சார்ந்து செயல்படுகிறவனாகவும் மாறினான். சாமுவேல் சவுலை ராஜாவாக அபிசேகம் பண்ணுவதற்கு முன்பு, அவன் தாழ்மையுள்ளவனாகவும், மனிதர் முன் வரத் தயங்குகிறவனாகவும் இருந்தான் (1 சாமு.9:21, 10:22). 14 மற்றும் 14ம் அதிகாரங்களில், தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ராஜாவைப் பற்றிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிய ஒரு வித்தியாசமான சவுலை நாம் காண்கிறோம். அந்த சமயத்தில் இஸ்ரவேலரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்தது. 2000 பேரைக் கொண்ட சவுலின் ராணுவம் கூட பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. ஆயுதம் இல்லாத இஸ்ரவேலரின் படைபலத்துடன் ஒப்பிடும்போது, பெலிஸ்தியரின் படை வீரர்கள் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர் என்பது வெளிப்படை (1 சாமு.13:22). நிலைமை மோசமானபோது, ஆசாரியர்கள் மட்டுமே செய்ய வேண்டிய தகன மற்றும் சமாதான பலிகளைச் செலுத்துவதற்கு சாமுவேல் வரும் வரைக்கும் காத்திருக்கவில்லை.

நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு” என்று சாமுவேல் சவுலிடம் தெளிவாகக் கூறியிருந்தும் (1 சாமு.10:8), சவுல் தன் படைவீரர் தன்னை விட்டு செல்வதைப் (2000 பேர் 600 பேராக ஆனது ) பற்றி கவலைப்பட்டு, தேவ தயவை நாடாமல், காரியங்களை தன் கைகளில் எடுத்துக் கொள்ள விரும்பினான். அப்படிப்பட்ட பிரச்சனையான தருணத்தில் சவுல் செய்தது சரிதான் என்று அனேகர் அவன் செய்ததை நியாயப்படுத்தக் கூடும். தான் ஏதேனும் செய்யவில்லை எனில், இஸ்ரவேலர்கள் அனைவரும் பெலிஸ்தியரிடம் தோற்றுப் போய்விடக் கூடும் என்று சவுல் நினைத்திருக்கக் கூடும். சாமுவேல் வந்து சேர்ந்தபோது, “கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்” என்று இரண்டு முறை சவுலைக் கடிந்து கொண்டார் (1 சாமு.13:12, 15). இஸ்ரவேலின் பலம் அவர்களுடைய படையின் வலிமையில் அல்ல, தேவனிடத்தில் இருக்கிறது என்பதை சவுல் மறந்து விட்டார். தேவன் பெலிஸ்தியர்கள் நடுவே ஒரு பயங்கரத்தையும் திகிலையும் உண்டாக்கியபோது, அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர் (1 சாமு.14: 15, 20). ஆயினும், சாமுவேல் தன்னைக் கடிந்து கொண்டபோது எதையும் கற்றுக்கொள்ளாமல் இருந்த சவுல், மறுபடியும் அவசரமாக ஆசாரியனாகிய அகீயாவை தடுத்து நிறுத்தி, பயத்தில் விலகி ஓடிய பெலிஸ்தியரைக் கொள்ளையிட சவுல் யுத்தத்திற்குச் சென்றான் (1 சாமு. 14:19, 20). தேவனுடைய வார்த்தைக்கு அவன் கீழ்ப்படியாமல் இருந்தது அவனுக்கும், அவனுடைய அரசுக்கும், மற்றும் அவனுடைய நாட்டுக்கும் கலக்கத்தையும் பிரச்சனைகளையும் உண்டாக்கியது.  

பயன்பாடு: உடனடி தீர்வுகள் மற்றும் செயல்கள் தேவைப்படுகிற கடினமான தருணங்களினூடாக நான் செல்லும் காலங்களிலும், தேவனைச் சார்ந்து அவருடைய வார்த்தையை நான் கனப்படுத்த வேண்டும் என்பதற்கு சவுலின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. வெளிப்பிரகாரமாக பார்த்தால், இது புத்தியற்ற ஒரு செயலாகக் கருதப்படலாம். ஆயினும், தேவனிடம் இருந்து ஒரு உறுதியான வார்த்தையைப் பெற்று நான் இருக்கும்போது, நான் தேவனுக்குக் காத்திருக்க வேண்டும். நான் எதுவும் செய்யவில்லை எனில் எல்லாவற்றையும் இழந்துவிடக் கூடும் என்று நான் நினைக்கக் கூடாது. தேவன் எல்லாவற்றின் மீதும் மாட்சிமை பொருந்திய ஆளுகை செய்கிறவராக, கட்டுப்பாடு உடையவராக இருக்கிறார். என்னிடம் இருக்கும் பொருகளில் அல்ல, தேவனில் என் வலிமை இருக்கிறது. தேவனுக்கும் அவருடைய வார்த்தை மீதும் நான் கொண்டிருக்கிற அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் தருணங்களாக என் கடினமான மற்றும் சோதனையான நேரங்கள் இருக்கின்றன. என் தவறாக செயல் அல்லது கீழ்ப்படியாமை எனக்கு மட்டுமல்ல, என்னைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையை உண்டாக்கக் கூடும். ஆகவே, நான் என் வாழ்க்கையில் எழும் அழுத்தங்களின் படி அல்லாது, தேவனுடைய வார்த்தையின்படி சிந்தித்து செயல்படுவேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நான் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளின் மத்தியில் இருக்கும்போதும் உம்மை நான் நம்ப முடியும். நான் உம்மை நம்பும்போது, என் வாழ்வில் உம் வார்த்தைகளை நான் கனம் செய்யும்போது, நீர் உம் வார்த்தையை எப்பொழுதும் நிறைவேற்றி, என் பிரச்சனைகளில் இருந்து என்னை விடுவிக்கிறீர். ஆண்டவரே, நீர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்ற மனப்பான்மையுடன் வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: