வாசிக்க: 2 சாமுவேல் 17, 18; சங்கீதம் 140; யோவான் 3:1-21
வேத வசனம்: யோவான் 3: 19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
கவனித்தல்: நாம் இங்கு பார்ப்பது போல, ஒளி மற்றும் இருள் இவ்விரண்டுக்குமான வித்தியாசத்தைப் பற்றி யோவான் எழுதிய நற்செய்தி நூல் அடிக்கடி கூறுகிறது. மேலும், இயேசு கிறிஸ்துவுடன் ஒளியை தொடர்பு படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் மகத்துவத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள் கிறிஸ்துவிடம் ஏன் வருவதில்லை? என்று சில நேரங்களில் நாம் ஆச்சரியப்படுகிறோம். நற்செய்தியின் செய்தியைப் புரிந்து கொள்ள முடியாதபடிக்கு அது மறைபொருள் அல்ல. யோவான் 3:19ல், அவ்ர்களுடைய இருதயக் கடினத்திற்கான ஒரு காரணத்தை நாம் காண்கிறோம்; அவர்களுடைய கிரியைகள் பொல்லாதவைகளாக இருப்பதினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் அதிகமாக இருளை நேசிக்கிறார்கள். ஒளியானது இருளிலே பிரகாசித்தாலும், அதை அவர்கள் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. கிறிஸ்துவுடனான ஒரு வாழ்க்கை என்பது அனேக கட்டுப்பாடுகளும், சட்டதிட்டங்களும் நிறைந்த கடினமான ஒரு வாழ்க்கை என பலர் (சில கிறிஸ்தவர்களும் கூட) நினைகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவிடம் வந்தால், தங்கள் சுதந்திரம் பறிபோய்விடும் என்று பயப்படுகின்றனர். தாங்கள் செய்வது தீமையானது என்று அறிந்திருந்தாலும் கூட, கட்டுப்பாடற்ற தங்கள் வாழ்க்கையை தொடரவே அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, அவர்களுடைய வாழ்க்கையில், செய்கைகளின் மீது ஒளியானது பிரகாசிக்கும்போது, அவர்கள் இருளில் தங்களை மறைத்து, ஒளித்துக் கொள்கிறார்கள்.
மறுபக்கத்திலோ, சத்தியத்தின்படி வாழ்கிற எவரும் மகிழ்ச்சியுடன் ஒளியினிடம் வருகிறார்கள். இருளில் வாழ விரும்புகிறவர்கள் மற்றும் தேவனுடைய சத்தியத்தின்படி வாழ விரும்புகிறவர்கள் ஆகிய இருவருக்குமிடையேயான மனப்பான்மையில் உள்ள வித்தியாசத்தை நன்கு கவனியுங்கள். ஒளியானது எல்லா கிரியைகளின் உண்மையான தன்மையை - அது நல்லதா அல்லது கெட்டதா- என்பதை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் ஒளியில் வாழ்வது என்பது சுமை அல்ல, அது காரியங்களை நாம் தெளிவாகக் காணக்கூடிய இனிமையான ஒரு அனுபவம் ஆகும். மேலும், இது சங்கடம், பயம், வரக்கூடிய எதிர்மறையான பின்விளைவுகளைப் பற்றிய கவலைகள் மற்றும் அவமானம் என எதையும் தருவதில்லை. மாறாக, நாம் தேவனுடன் ஒரு அன்பின் உறவைப் பெற்றனுபவிப்பதால், அது ஜீவனையும், மகிழ்ச்சியையும், பரலோக வாழ்வின் முன்சுவையையும் நமக்குத் தருகிறது. இருளை நேசிக்கிறவர்கள் தங்களுடைய முடிவு மற்றும் ஆக்கினைத் தீர்ப்பை ஏற்கனவே தெரிவு செய்துவிட்டார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டும் என்ற நம் தீர்மானம், நம் ஆன்மீக வாழ்வில் ஜீவனைத் தந்து, கிறிஸ்துவின் ஒளியில் எவ்வித பயமும் இன்றி வாழ நமக்கு உதவுகிறது.
பயன்பாடு: நான் ஒளியை நேசித்து, தேவனுடைய சத்தியத்தின்படி வாழ விரும்புகிறேன். என் வாழ்க்கையில் இருந்து எல்லா இருளையும் தீமைகளையும் அகற்றிப் போடுகிற வெளிச்சமாக இயேசு இருக்கிறார். நான் தேவனுடைய வெளிச்சத்தில் வாழும்போது, என் வாழ்வில் இருளுக்கு எந்த இடமும் இல்லை. தேவன் என்னையும் என் செயல்களையும் பார்க்கிறார் என்ற நம்பிக்கையை ஒளியின் கீழ் வாழ்வது எனக்குத் தருகிறது. பொல்லாதவைகளைச் செய்கிறவர்கள் இருளில் வாழும்போது அனுபவிக்கும் தற்காலிக இன்பங்களையும் நித்தியமான பிரச்சனைகளையும் போலல்லாமல், தேவனின் ஒளியானது விவரிக்க முடியாத மற்றும் மகிமையான மகிழ்ச்சியினால் என் வாழ்க்கையை நிரப்புகிறது. எனக்கும், எவருக்கும் கிறிஸ்துவின் ஒளியில் வாழ்வது என்பது ஒரு பெரிய ஆசீர்வாதம் ஆகும்.
ஜெபம்: இயேசுவே, நீர் இந்த உலகத்தின் வெளிச்சமாக இருக்கிறீர். என் நிலையற்ற வாழ்விற்கான நம்பிக்கையை உம் வெளிச்சம் தந்து, காரியங்களை தெளிவாகப் பார்ப்பதற்கு உம் வெளிச்சம் எனக்கு உதவுகிறது. ஆண்டவரே, நான் உம் வெளிச்சத்தை நேசிக்கவும், இருளை வெறுக்கவும் உதவி செய்யும். உம் வெளிச்சத்தில் சத்தியத்தின்படி என் வாழ்நாளெல்லாம் வாழ எனக்கு உதவும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
No comments:
Post a Comment