Monday, May 24, 2021

இயேசுவுடன் ஒரு உரையாடல்

வாசிக்க: 2 சாமுவேல் 23, 24 ; சங்கீதம் 143 ; யோவான் 4: 27-54

 வேத வசனம்: யோவான் 4: 27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.

கவனித்தல்: யோவான் நற்செய்தி நூல் பலவிதங்களில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா எழுதிய நற்செய்தி நூல்களில் இல்லாத இயேசுவைப் பற்றிய தனித்துவமான தகவல்களை இது தருகிறது. யோவான் எழுதிய நற்செய்தி நூலின் முக்கியமான சிறப்பியல்புகளில் ஒன்று என்னவெனில், இது இயேசு செய்த காரியங்களை விட அவருடைய வார்த்தைகள் (அவர் பேசியவைகள்) பற்றி அதிகம் பேசுகிறது. நற்செய்தி நூலில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் உரையாடல்களில் மிகவும் நீண்ட உரையாடலை  யோவான் 4ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம். அது ஒரு சமாரியப் பெண்ணுடனான உரையாடல் ஆகும். இயேசுவின் சீடர்களுடைய ஆச்சரியத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. முதலாவதாக, யூதர்கள் சமாரியர்களை வெறுத்து, அவர்கள் தீட்டானவர்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் எனக் கருதி அவர்களுடனான தொடர்பை தவிர்த்து வந்தார்கள் (அந்த சமாரியப் பெண்ணும் இயேசு தன்னுடன் பேசியதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள், பார்க்க வச.9). இரண்டாவதாக, யூதப் பாரம்பரியங்களின் படி, ஆண்கள் பொது இடங்களில் ஒரு பெண்ணை சந்தித்துப் பேசுவது என்பது தவறான செயலாக கருதப்பட்டது. அந்நாட்களில், தன் மனைவியாக இருந்தால் கூட ஒரு யூதன் வீதியில் அவளுடன் பேச மாட்டான்.  மூன்றாவதாக, அவருடைய சீடர்கள் அந்நேரத்தில் அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஆனால் நாம் உரையாடலில் இருந்து அறிந்து கொள்வது என்னவெனில், அந்தப் பெண்ணின் ஒழுக்கமற்ற வாழ்க்கை நிலை ஆகும். அவள் ஐந்து முறை விவாகரத்து பெற்றவள், மற்றும் தான் திருமணம் செய்யாத ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்தவள். 

ஆயினும், இயேசு யார் என்பதை அந்த சமாரியப் பெண் அறிந்து கொள்ள உதவும்படி ஒரு உரையாடலைத் துவங்க இவை எதுவும் அவருக்கு தடையாக இருக்கவில்லை. அந்த உரையாடலின் போது, இயேசுவை ஒரு சாதாரண யூதராகக் கருதுவதில் இருந்து அவரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவாக கருதும்படி இயேசுவைப் பற்றிய அவளுடைய புரிதல் மாறியது. பின்னர், “சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் (இயேசு) மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (யோவான் 4:39). ஆலோசனைச் சங்கத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பு (மாற்கு 14:62), நான்கு நற்செய்தி நூல்களில் யோவான் 4ல் மட்டுமே இயேசு வெளிப்படையாக தன்னை மேசியா என்று சொல்வதைப் பார்க்கிறோம். மேலும், “உலக ரட்சகர்” என்ற பட்டம் வேறெங்கிலும் நற்செய்தி நூலில் இயேசுவுக்குக் கொடுக்கப்படவில்லை. இது போல, இயேசுவின் ஒவ்வொரு உரையாடலும் ஜனங்கள் அவர் யார் என்பதைப் புரிந்து கொள்ள உதவியது. இயேசு அந்த சமாரியப் பெண்ணின் அனைத்து சந்தேகங்களையும் போக்கினார். அந்த சமாரியப் பெண்ணை இழிவாக இகழ்வதற்குப் பதிலாக, மாற்றப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பெற ஒரு வாய்ப்பை இயேசு  அவளுக்குக் கொடுத்தார். எவ்வித சமுதாயக் கட்டுப்பாடுகளும் இயேசு நம்முடன் பேசுவதைத் தடுக்க முடியாது. அவர் நம்முடன் தனிப்பட்ட முறையில் பேச விருப்பம் உள்ளவராக இருக்கிறார். நாம் தனிமையை உணரும்போது, நாம் மற்றவர்களுடன் பேச தயக்கத்துடன் அல்லது தடை செய்யப்பட்டவர்களாக இருக்கும்போது, நாம் இயேசுவுடன் பேச முடியும் என்பதை நினைவு கூர வேண்டும். இயேசு இன்று நம்மிடம் வருவார் எனில், நாம் அவரிடம் என்ன கேட்போம்? அவர் நம்மிடம் என்ன சொல்வார்? நாம் இயேசுவுடன் பேச ஆயத்தமாக இருக்கிறோமா? 

பயன்பாடு: நம்சந்தேகங்கள், பயங்கள், கவலைகள், மற்றும் வாழ்க்கை மற்றும் நித்தியத்தைக் குறித்த கேள்விகளுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, நான் நேரடியாக இயேசுவிடம் சென்று, தடை எதுவும் இன்றி அவருடன் நான் பேச முடியும். இயேசு எனக்கு யார் என்பதையும், அவர் எனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்பதையும் நான் புரிந்து கொள்ள இயேசு எனக்கு உதவுகிறார். அந்த சமாரியப் பெண்ணிடம் செய்தது போல, அவர் மெதுவாக அனைத்து இரகசியங்களையும் வெளிப்படுத்தி, நான் அவைகளைப் புரிந்து கொள்ள உதவுகிறார். நான் இயேசுவுடன் பேச தயக்கம் காட்டக் கூடாது. இயேசு என்னிடம் வருவது போல, எவ்வித  சமூக அச்சமும் இன்றி நான் எவரிடமும் போய்ப் பேச மனதுடையவனாக இருக்க வேண்டும்.  இயேசுவுடனான ஒரு உரையாடல் மற்றும் இயேசுவைப் பற்றிய ஒரு உரையாடல் உண்மையிலேயே அனைவருக்கும் பயனுள்ளது ஆகும். 

ஜெபம்: இயேசுவே, இன்றும் என்றும் என்னுடன் பேச விருப்பம் உள்ளவராக நீங்கள் இருப்பதற்கு உமக்கு நன்றி. நான் உம்முடன் பேச நேரம் ஒதுக்க எனக்கு உதவுங்கள். ஆண்டவரே, உம் வார்த்தைகளைக் கேட்க என் செவிகளைத் திறந்தருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 144

No comments: