Thursday, May 27, 2021

இயேசு ஜீவ அப்பம்

வாசிக்க: 1 இராஜாக்கள் 5, 6 ; சங்கீதம் 146 ; யோவான் 6: 1-41

வேத வசனம்: யோவான் 6: 33. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
34. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.
35. இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

கவனித்தல்: நம் அனுதின வாழ்க்கைக்கு தண்ணீரும், உணவும் அடிப்படைத் தேவைகள் என்று நாம் அறிவோம். ஐந்தாயிரம் பேருக்கு இயேசு உணவளித்த அற்புத நிகழ்வுக்குப் பின்பு, ஜனங்கள் அவரைத் தேடி வந்தார்கள். ஜீவத் தண்ணீரைப் பற்றி இயேசு குறிப்பிடும்போது அதை முறையாகப் புரிந்து கொள்ளாத சமாரியப் பெண்ணைப் போலவே (யோவான் 4:15),  நாம் இங்கு காண்கிற ஜனங்களும் இயேசு அவர்களிடம் பேசின காரியம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. சமாரியப் பெண் மற்றும் இந்த ஜனங்கள் இயேசுவிடம் வைத்த வேண்டுகோளில் உள்ள ஒற்றுமையைக் கவனியுங்கள். ஏனெனில் அவர்கள் உலகப் பொருள்களைச் சார்ந்து சிந்தித்து, இயேசுவின் வார்த்தைகளில் உள்ள ஆவிக்குரிய அர்த்தத்தைக் காண தவறிவிட்டார்கள். இந்த இரு சந்தர்ப்பங்களிலுமே இயேசு நித்திய ஜீவனைப் பற்றி பேசினார் என்பது சுவராசியமானது ஆகும்.

35ஆம் வசனத்தில், இயேசு சொன்ன “நானே” என்று துவங்கும் சொற்றொடர்களில் முதலாவதை நாம் பார்க்கிறோம். இயேசு “நானே” என்று சொல்வது மோசேக்கு தேவன் வெளிப்படுத்தின அவருடைய நாமத்திற்கு ஒத்ததாக, மிகவும் இசைவானதாக இருக்கிறது (யாத்.3:14).  “நானே” என்று சொல்லும் இயேசுவின் வாக்கியங்களில் இயேசு தன்னைப் பற்றி குறிப்பிடுவது, இயேசு யார் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. ஆவிக்குரியப் பிரகாரமாக பசியுடனும் தாகத்துடனும்  இருக்கிற அனைவரும் இயேசுவிடம் வந்து, அவரை விசுவாசிக்கும்போது திருப்தியடைவார்கள். இயேசு தருகிற நித்திய ஜீவன் என்பது, நாம் இயேசுவிடம் வரும்போது பெறுகிற ஒரு இலவச பரிசாக இருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக நாம் பெறுகிற ஒன்றாகும்.நம் சரீர வாழ்க்கைக்கு தண்ணீரும், உணவும் இருப்பது போல, நம் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கு இயேசு இன்றியமையாதவர். 

பயன்பாடு: என் கண்கள் உலகப் பிரகாரமான ஆதாயங்கள் மீது இல்லை. மோசே இஸ்ரவேலர்களுக்கு அறிவுரை கூறும்போது,  “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு” தேவன் அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்ததாக சொன்னார் ( உபா.8:3). அந்த மன்னாவைப் சாப்பிட்டவர்களுக்கு திரும்பவும் பசி வந்தது, அவர்கள் மரித்தும் போயினர். ஆனால் இயேசுவோ “ஜீவ அப்பம்” ஆக இருக்கிறார். நான் அவரிடம் செல்லும் போது, அவர் என் ஆத்துமாவைத் திருப்தியாக்குகிறார். இயேசு எனக்கு யார் என்பதை நான் விசுவாசிக்கும்போது, அவர் என் ஆன்மீக தாகத்தைத் தீர்க்கிறார்.  எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் நித்திய ஜீவனை எனக்குத் தருகிறார். இயேசுவில் நான் பெறுகிற ஆன்மீக திருப்தி என்பது நித்தியம் வரைக்கும் முடிவில்லாத ஒரு அனுபவம் ஆகும். 

ஜெபம்: இயேசுவே, என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, நீர் யார் என்பதைக் காண என் கண்களைத் திறந்தருளும். உம்மை ஜீவ அப்பமாக விசுவாசிக்க என் இருதயத்தைத் திறந்தருளும். ஜீவ அப்பமாகிய இயேசுவே, நீர் எனக்கு அனுதினமும் தேவை. முழு இருதயத்தோடும் உம்மைத் தேட எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day -  147

No comments: