Friday, May 28, 2021

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

வாசிக்க:  1 இராஜாக்கள் 7, 8 ; சங்கீதம் 147 ; யோவான் 6: 41-71

வேத வசனம்: யோவான் 6: 63. ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

கவனித்தல்: தன் மாம்சமும் இரத்தமும் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது என்ற ஆவிக்குரிய உண்மையைப் பற்றி இயேசு சொன்ன போது, ஜெப ஆலயத்தில் இருந்த யூதர்களிடையே சலசலப்பு உண்டாயிற்று. இயேசுவின் சீடர்களில் (இதன் பொருள் என்னவெனில், 12 பேர் தவிர இயேசுவுக்கு இன்னும் பல சீடர்கள் இருந்தனர்) அனேகர்  “இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்” என்று சொன்னார்கள். இயேசுவின் போதனை புரிந்து கொள்ளக் கடினமானது அல்ல, ஆனால் அதை ஏற்றுக் கொள்வதும் விசுவாசிப்பதும் கடினமானதாக இருக்கக் கூடும். இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியது போல, இயேசுவை ஏற்றுக் கொண்டு, ஒருவர் அவரை விசுவாசிக்கும்படி செய்வது பிதாவின் செயல் ஆகும்.

யோவான் 6:63ல், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் சரீர வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இயேசு சொல்கிறார் (பார்க்க. யோவான் 3:6). இயேசுவின் வார்த்தைகள் அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுகள் அல்ல; அவை “ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.” ஆயினும், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் அவரை விசுவாசிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் தங்கள் இருதயத்தை உயிர்ப்பிக்கும்படி அனுமதித்தவர்களே இயேசுவை ஏற்றுக் கொண்டு, நித்திய ஜீவனைப் பெறுகிறார்கள். இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாமல், அவருடைய சீடர்களில் பலர் அவரை விட்டு விலகினார்கள். இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்வது கடினமானது  மட்டுமல்ல, இடறலுக்கேதுவானது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்கள் இயேசுவைப் பற்றி வேறு எதிர்பார்ப்புகள் உடையவர்களாக இருந்திருக்கலாம். ஆயினும், இயேசு தன் 12 சீடர்களைப் பார்த்து அவர்களும் அவரை விட்டு போக மனதாயிருக்கிறார்களா என்று கேட்ட போது, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்” என்று பேதுரு சரியாகச் சொன்னார் (யோவான் 6:68, 69). இயேசுவை நாம் அற்புதங்களுக்காகவும், பூமிக்குரிய வாழ்க்கைக்காகவும் மட்டுமே இயேசுவை பின்பற்றுகிறவர்களாக இருந்தால், அவருடைய போதனையானது ஏற்றுக் கொள்ள கடினமானதாக இருக்கும். நித்திய ஜீவனுக்காக நாம் அவரைப் பின்பற்றுபவர்களாக இருந்தால், நாம் நம் ஆன்மீக வாழ்க்கைக்கான பலத்தை அவரிலும் அவருடைய வார்த்தைகளிலும் கண்டடைவோம். 

பயன்பாடு: என் ஆவிக்குரிய வாழ்வில் இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதற்கான என் விருப்பம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நான் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தையும், உலக வாழ்வின் பயனற்ற தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு வாழ்வு தருகிறவர். இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்வது மட்டும் போதாது, நான் அவருடைய வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும். இயேசுவின் வார்த்தைகளை விசுவாசிப்பது அவர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு எனக்கு உதவி செய்கிறது. அவர்  “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” நித்திய ஜீவ வார்த்தைகளுக்காகவும் மற்றும் நித்திய வாழ்க்கைக்காகவும், இயேசுவைத் தவிர வேறு யாரிடம் நான் செல்வேன்? 

ஜெபம்: இயேசுவே, வாழ்வு தரும் உம் வார்த்தைகளுக்காக நன்றி. ஆண்டவரே,  என் சரீர வாழ்க்கைக்காக மட்டுமல்ல, நித்திய வாழ்க்கைக்காகவும் உம் வார்த்தைகளை விசுவாசிக்க எனக்கு உதவும். உம்மைப் போல வேறு யாரும் இல்லை. உம்மை விட்டு ஒருபோதும் விலகாத, ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான பலத்தைப் பெறுவதற்கு, அனுதினமும் உம் வார்த்தைகளை தியானிக்க எனக்கு உதவும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 148

No comments: