Tuesday, May 18, 2021

தாவீதின் வாழ்வில் நடந்த ஒரு திருப்புமுனை

வாசிக்க:  2 சாமுவேல் 11, 12; சங்கீதம் 137 ; யோவான் 1: 29-51

வேதவசனம்: 2 சாமுவேல் 11: 1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

கவனித்தல்:  தாவீது போரை நடத்துவதற்கு யுத்தக்களத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், இஸ்ரவேலின் எதிரிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும்படி யோவாபையும் தன் சேனையையும் அனுப்பி வைட்டு அவன் எருசலேமில் தன் மாளிகையில் இருந்து விட்டான். தாவீது போர் செய்ய முடியாதபடிக்கு வயதானவன் என்பதை இது குறிக்கவில்லை. அந்த சமயத்தில் அவன் சுமார் 50 வயது நிறைந்தவனாக இருந்திருப்பான். 1 சாமு.10ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் முந்தைய போரில் தாவீது போர்க்களத்திற்கு வந்து யுத்தத்தை தலைமையேற்று நடத்தின பின்பே இஸ்ரவேலர்கள் ஒரு பெரிய வெற்றியை கண்டனர் என வாசிக்கிறோம்.  அது ஒரு வசந்த காலமாக ( அன்றைய சூழலில், பொதுவாக பனிக்காலம் முடிந்த பின்பே யுத்தத்திற்கு புறப்படும் காலம்) இருந்தது. ஆகவே அந்த இனிமையான காலநிலையில் சற்று அதிக ஓய்வு எடுக்கலாம் என்று தாவீது நினைத்திருப்பார். தாவீது பத்சேபாளை சிறு வயது முதலே அறிந்திருக்கக் கூடும். ஏனெனில், அவளுடைய தகப்பன் எலியாம் தாவீதின் மெய்க்காவலர்களின் ஒருவன், அவளுடைய தாத்தாவாகிய அகித்தோப்பேல் தாவீதுடைய நண்பராகவும், ஆலோசனைக் காரனாகவும் இருந்தவன். 

தாவீது எருசலேமில் தங்கி இருந்து, வசந்த காலத்தில் இளவேனில் காற்றில் ஒரு சாயங்கால நேரம் மகிழ்ச்சியுடன் இருந்த போது, அவனுடைய மாம்சத்தின் இச்சையானது கர்த்தருக்கு எதிராக பாவம் செய்யும்படி அவனை சோதித்தது. இங்கே, தாவீது தன் அரச கடமையைச் செய்யத் தவறிய செயலானது தேவனால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவாகிய அவனுக்கு சற்றும் பொருத்தமற்ற  தொடர்ச்சியான தவறுகளைச் செய்ய வழிநடத்தியது என்பதை நாம் காண்கிறோம். தாவீது பத்சேபாளுடன் செய்த பாவமும், அதை மறைக்க அவன் செய்த செயல்களும்  தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று கருதப்பட்ட தாவீதின் வாழ்க்கையில் ஒரு அழிக்கமுடியாத களங்கத்தை உண்டு பண்ணியது. அதுவரையிலும், தாவீது தேவனுடைய மற்றும் தன் ஜனங்களின் எதிரிகளுடன் யுத்தம் செய்து வந்தார். பத்சேபாளுடனான சம்பவம் தாவீதின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்பு, அவன் தன் மரணமட்டும் தன் சொந்த குடும்பத்தினருடன் சண்டையிட வேண்டியதாயிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, தாவீதின் பாவம் கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பானதாக இருந்தது. தாவீதின் ஒரு பாவமானது அவன் கர்த்தருக்காக செய்த அனைத்து காரியங்களையும் மறைப்பதைக் கவனியுங்கள். அவன் செய்த ஒரு பாவம் அனேகரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. மேலும் முடிவிலாத பிரச்சனையை தாவீதின் வாழ்க்கையில் அது உண்டாக்கியது. தாவீது தன் இருதயத்தில் பாலியல் இச்சையை தங்கும்படி அனுமதித்தபடியால், அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவனை பாவம் செய்ய வைத்தது.

பயன்பாடு: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7) என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். தேவனுடைய பிள்ளையாகிய நான், பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓட வேண்டும் (2 தீமோ.2:22). தேவனுக்கு விரோதமாக பாவச் சோதனைகளை உண்டாக்குகிற ஒரு இடத்தில் நான் தங்கி இருக்கக் கூடாது. ஆண்டவரைச் சேவிப்பதில் எனக்கு இருக்கிற பொறுப்பை நான் தட்டிக் கழிக்கக் கூடாது. “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது”  நான் எதைச் எதைச் செய்தாலும், அதைக் கர்த்தருக்காகச் செய்ய வேண்டும் (கொலோ.3:17), என் பாலியல் அல்லது தீய இச்சைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல. நான் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படித்து என் இதயத்தின் தீய விருப்பங்களுக்கு எதிராக நிற்பதுதான் என் வாழ்க்கையின் உண்மையான திருப்புமுனை. 

ஜெபம்: பிதாவே, நான் எங்கே இருக்க வேண்டும், எப்பொழுது விலகி ஓட வேண்டும் என்பதை உம் வார்த்தை எனக்கு போதிக்கிறது. நான் உம்மிலும் உம் வார்த்தையிலும் நிலைத்திருக்க எனக்கு உதவும். இயேசுவே, நீர்  “சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவர்”  என்று  நான் விசுவாசிக்கிறேன். எல்லா சோதனைகளுக்கும் எதிர்த்து நிற்கவும், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்து நிற்கவும் எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: