வாசிக்க: 1 சாமுவேல் 27, 28; சங்கீதம் 130; லூக்கா 22: 1-34
வேதவசனம்: சங்கீதம் 130: 3. கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
4. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5. கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
கவனித்தல்: சங்கீதம் 130ல், தன் நிகழ்கால நெருக்கடியான நிலையில் இருந்து தேவனை நோக்கி சங்கீதக்காரன் கூப்பிடுகிறான். அவர் “பிரச்சனைகளின் கடல்” ஒன்றினால் சூழ்ந்து கொள்ளப்பட்டதாகவும், நிற்பதற்கு உறுதியான இடம் ஒன்றும் இல்லாதது போலவும் தோன்றுகிறது. இந்த வேதனையான நிலைமைக்குக் காரணம் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை. அவருடைய வியாதி, அவருடைய வாழ்க்கையில் இருந்த நிச்சயமற்ற தன்மைகள், அல்லது எதிரிகளின் தாக்குதல் ஆகியவை அவர் ஆழங்களில் இருப்பது போன்று அவரை நினைக்க வைத்திருக்கலாம். தன் நம்பிக்கையற்ற சூழ்நிலையில், அவர் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகிறார். தேவனுடைய மன்னிப்பைப் பெறாமல் எவரும் அவர் முன் நிற்க முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறார். தன்னுடைய நீதி எல்லாம் தேவனுக்கு முன் அழுக்கான கந்தை போல இருக்கிறது என்றும், ஒருவரின் பாவங்களை தேவன் கணக்கிடுவாரானால் எவரும் அவர் முன் நிற்கமுடியாது என்பதை உணர்ந்து ஒருவர் தேவனுடைய மன்னிப்பைக் கேட்கும்போது, தேவன் அப்படிப்பட்ட ஜெபங்களைக் கவனித்துக் கேட்கிறார்.
முதலாவதாக, சங்கீதக்காரன் தேவனுடைய மன்னிப்பு வேண்டும் என வேண்டுதல் செய்கிறார். தேவனுடைய மன்னிப்பானது அவருக்கு உண்மையுடன் ஊழியம் செய்வதற்கான பயபக்தியைத் தருகிறது. தன் வருந்தத்தக்க சூழ்நிலையில் இருந்து தேவன் மட்டுமே தன்னை விடுவிக்க முடியும் என்பதை சங்கீதக்காரன் அறிந்திருந்தார். ஆகவே, அவர் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற தன் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார். அவர் தேவனுடைய வார்த்தையில் தன் நம்பிக்கையை வைக்கிறார். நம் வாழ்க்கையின் சூறாவளிகளில் எதிர்த்து நிற்பதற்கான வல்லமையையும், நம்பிக்கையின் வெளிச்சத்தையும் தேவனுடைய வார்த்தை நமக்குத் தருகிறது. நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி.11:1). நம் நிகழ்காலப் பிரச்சனைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, விசுவாசத்துடன் நாம் நம் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தேவன் நமக்கு என்ன வைத்திருக்கிறார் என்பதைக் காண வேண்டும். கர்த்தருக்காக காத்திருப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுக்காக காத்திருத்தல் என்பது ஒரு போதும் வீணான நேரம் அல்ல.
ஜெபம்: பிதாவே, என் இருதயத்தில் ஆழத்தில் இருந்து நான் ஏறெடுக்கிற என் ஜெபங்களைக் கேட்பதற்காக உமக்கு நன்றி. நான் உம்மிடம் வரும்போது, ஆண்டவரே உம் நித்திய, மாறாத அன்பினால் என்னை நீர் ஏற்றுக்கொள்கிறீர். உம் மன்னிப்பைப் பெறத் தகுதி அற்ற ஒரு பாவி நான். உம் கிருபைக்காக நன்றி. உம் இரட்சிப்புக்காக உம்மைத் துதிக்கிறேன். பயபக்தியுடன் உம்மை எப்பொழுதும் சேவிக்க எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment