வாசிக்க: 1 சாமுவேல் 11, 12; சங்கீதம் 122; லூக்கா 18: 1 -17
வேதவசனம்: லூக்கா 18: 1. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்...
6. பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
கவனித்தல்: பொதுவாக, நாம் விடாமுயற்சியுடன் தொடந்து எல்லா வேளைகளிலும் ஜெபிப்பதில்லை. சில நேரங்களில், நம் முன் இருக்கும் சவாலானது நாம் எதிர்பார்ப்பை விட மிகப் பெரியது போல இருக்கும்போது நாம் ஜெபிப்பதை விட்டுவிடுகிறோம். விதவையைப் பற்றிய இந்த உவமையில், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாலும் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். நம்மை சுற்றிலும் அநியாயம் செய்கிற, அன்பில்லாத, தேவபக்தியில்லாத மனிதர்கள் இருக்கக் கூடும். மனுஷரை மதியாத அந்த நேர்மையற்ற அந்த நியாயாதிபதியிடம் விண்ணப்பம் பண்ணுவதில் அந்த விதவையானவள் விடாமுயற்சியுடன் உறுதியாக இருந்தாள். அந்த நியாயாதிபதி அவளுக்கு நியாயம் செய்யும்படி தன் மனதை மாற்றுகிறவரைக்கும் அவள் விடாப்பிடியாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தாள். இந்த உவமையில் இயேசுவின் முக்கியமான வாதம் என்னவெனில், ஒரு அநியாயம் செய்கிற நியாதிபதி நியாயம் செய்ய முன்வருவான் எனில், தன்னிடம் ஜெபிக்கிறவர்களின் ஜெபங்களுக்கு நம் பரமப் பிதாவானவர் பதிலளிப்பது எவ்வளவு அதிக நிச்சயம்! ஒரு சரியான முடிவை எடுக்க அந்த நியாயாதிபதி அதிக காலம் எடுத்துக் கொண்டான். ஆனால், தேவன் இப்படிப்பட்ட ஜெபங்களை புறக்கணியாமல், இயேசு சொன்னது போல, சீக்கிரமாய் நியாயம் செய்வார். தேவனை நோக்கி நாம் செய்யும் ஜெபங்களை ஒருபோதும் நாம் நிறுத்தக் கூடாது. நம் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும் என்பது எவ்வளவு அதிக நிச்சயமானதாக இருக்கிறது! நாம் ஜெபம் செய்யாமலிருக்க ஏதேனும் நியாயமான காரணங்கள் இருக்கிறதா?
பயன்பாடு: நான் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும். என் சூழ்நிலைகள் மோசமாகும்போது, நம்பிக்கை மங்கும்போது, என் திறமைக்கு மிஞ்சின சவால்கள் என் முன் வரும்போது, நான் ஜெபம் செய்வதை மறந்து விடக் கூடாது. காரியங்கள் கடினமானதாக மாறும்போது நான் இன்னும் அதிக ஊக்கமாக தேவனைத் தேடவேண்டும். என் சூழ்நிலையானது எனக்கு எந்த நம்பிக்கையையும் தராமல் இருக்கும் நேரத்தில், நான் ஜெபிக்கும்போது, என் உண்மையான பலத்தையும் நம்பிக்கையையும் நான் இயேசு கிறிஸ்துவில் கண்டுகொள்கிறேன். எந்த மனிதனில் அல்லம் தேவன் மீது என் நம்பிக்கை இருக்கிறது. தேவன் மீது உள்ள விசுவாசத்தில் நான் ஜெபித்து என் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கலை நான் பார்க்கிறேன். ஏனெனில், என் தேவன் என் ஜெபங்களுக்கு பதில் தர ஒருபோதும் தவறுவதில்லை. ஆகவே நான் ஒருபோதும் ஜெபிப்பதை விட்டுவிடமாட்டேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கும் உம முடிவிலாத அன்புக்காக நன்றி. அவபக்தி நிறைந்த இந்த உலகில் நீரே என் நம்பிக்கை. நன்மையான எந்த வரமும் பூரணமான ஈவும் உம்மிடத்தில் இருந்தே வருகிறது. நீரே நீதியுள்ள நியாயாதிபதி. ஆண்டவரே, எந்தச் சூழ்நிலையிலும் உம்மை முதலாவதாக தேட எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment