வாசிக்க: 2 சாமுவேல் 15, 16; சங்கீதம் 139; யோவான் 2:13-25
வேத வசனம்: சங்கீதம் 139: 23. தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24. வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
கவனித்தல்: சங்கீதம் 139 ல், தேவன் யார், தன் வாழ்க்கையில் தேவன் எவ்வாறு இடைபடுகிறார் என்பதை தாவீது வெளிப்படுத்துகிறார். அனைத்தையும் அறிந்திருக்கிற, எங்கும் நிறைந்திருக்கிற தேவனைப் பற்றி தாவீது சொல்கையில், தேவன் தன்னையும் பற்றி அறிந்திருக்கிறார், தன்னைப் பார்க்கிறார் என்பதை அவர் புரிந்து கொள்கிறார். அவர் தேவனுக்கு மறைவாக எங்கும் செல்ல முடியாது. மேலும், தன்னைப் பற்றிய தேவனுடைய நினைவுகள் மிகவும் அருமையானவை மற்றும் அளவிடமுடியாதவை என்று தாவீது உணர்கிறார். இதை மனதில் வைத்துக் கொண்டு, இந்த சங்கீதத்தை ஆரம்பித்த அதே விதத்தில், “ தேவனே, என்னை ஆராய்ந்து” பாரும் என்று சொல்லி தன் சுய பரிசோதனையைத் துவங்குகிறார். இங்கு, தேவன் தன்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான தன் விருப்பத்தை தாவீது வெளிப்படுத்துகிறார். ஏனெனில், தேவன் ஆராய்ந்து சோதித்தறியும்போது அது தனக்குப் பலனளிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். தங்கம் அக்கினியால் புடமிடப்படுவது போல, தேவன் ஒருவரைச் சோதித்தறியும்போது அந்த நபரிடம் இருக்கிற தேவபக்தியற்ற காரியங்கள் ஏதேனும் இருந்தால் அதை அவர் நீக்குகிறார். தேவனுக்கு வேதனையைத் தருகிற வழிகள் எதுவும் தன்னிடத்தில் இருக்கக் கூடாது என சங்கீதக்காரன் விரும்பினார். தேவனுக்குப் பிரியமல்லாத அல்லது அவரைத் துக்கப்படுத்துகிற காரியங்கள், தேவனிடம் இருந்து நம்மைப் பிரிக்கிற காரியங்கள், மற்றும் தேவனுடைய வார்த்தைக்கு எதிரான காரியங்கள் அனைத்தும் தேவனிடம் இருந்து நம்மை வேதனை தரும் வழிகளில் நடத்தக் கூடும். இதற்கு ஒரே மருந்து கர்த்தருடன் நித்திய வழியில் நடப்பது தான் என்பதை தாவீது உணர்ந்திருந்தார். ஆகவே அவர் தேவ நடத்துதலுக்காக ஜெபம் செய்கிறார்.
தேவன் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார், அவர் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. அவர் நம் இருதயத்தில் இருக்கிறதைப் பார்க்கிறார். நம்மைப் பற்றிய அவருடைய நினைவுகள் அருமையானவை, எண்ண முடியாதவை. “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” என்று அவர் சொல்கிறார் (ஏசாயா 55:9). இப்படி இருக்கையில், நம் சொந்த வழிகளில் நடப்பதைப் பார்க்கிலும், தேவனையும் அவருடைய வழிகளையும் தேடுவது நமக்கு அதிக நன்மையானதாக இருக்கும் அல்லவா?
பயன்பாடு: என் தேவன் என்னை அறிந்திருக்கிறார். அவர் என்னைப் பார்க்கிறார். அவர் என் மீது கரிசனை உள்ளவராக இருக்கிறார். இந்த அன்பான தேவனுடைய பராமரிப்பில் வாழ்வது என்பது உண்மையிலேயே அருமையானது. எதுவும் தேவனிடம் இருந்து என்னைப் பிரிக்க முடியாது. அவர் என்னைக் குறித்து விசாரிக்கிறார். நான் அவருக்காக வாழ வேண்டும். அவர் என்னைச் சுத்திகரித்து, நித்தியத்திற்கு நடத்தும் அவருடைய வழியில் என்னை வழிநடத்துகிறார். நான் தேவனுடன் நடந்து கொண்டிருக்கும் வரை, எதற்கும் பயப்பட மாட்டேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் அன்பிற்காகவும், கரிசனைக்காகவும் நன்றி. என் இருதயத்தில் உள்ளவைகளை அறிந்து கொள்ள “என்னை ஆராய்ந்து பாரும்”, “என்னை சோதித்தறியும்.” தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ என்னை வழிநடத்தும். உம்மைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்து கொள்ளவும், உம் நித்திய வழியில் நடக்கவும் உதவியருளும். ஆமென்.+91 9538328573
No comments:
Post a Comment