வாசிக்க: 1 சாமுவேல் 25, 26; சங்கீதம் 129; லூக்கா 21: 20-38
வேதவசனம்: லூக்கா 21: 36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
கவனித்தல்: லூக்கா 21ம் அதிகாரத்தில், வஞ்சகங்கள், போர்கள், பயங்கர அழிவுகள், பஞ்சங்கள், மற்றும் கொள்ளை நோய்கள் போன்ற உலகத்தின் இறுதியில் நடக்கப்போகும் அடையாளங்களைப் பற்றி சொல்கிறார். இந்த அடையாளங்கள் “இனிச் சம்பவிக்கப்போகிறவைகளில்” இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கின்றன. உலகம் இந்த அடையாளங்களைக் காணும்போது, ஜனங்கள் இச்சம்பவங்களினால் தங்கள் வாழ்க்கைக்கு உண்டாகக் கூடிய விளைவுகளின் சாத்தியக்கூறுகளை நினைத்து பயந்து நடுங்குவார்கள். ஆனால், இயேசுவோ தன்னைப் பின்பற்றுபவர்கள் உலக மக்களைப் போல வாழ்க்கையைக் குறித்த கவலையை உடையவர்களாக இருக்கக் கூடாது என்று எச்சரிக்கிறார். உலகத்தில் உள்ள அனைவர் மீதும் கடைசி கால நிகழ்வுகள் வரும் என்றாலும், இயேசுவை நம்புபவர்கள் ஜெபம் பண்ணி விழித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். சமீபத்திய செய்திகளைக் காணும்போது, உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்படும்போது, இது எப்படி முடியும் என்று நினைத்து நாம் அடிக்கடிக் கலங்கித் தவிக்கிறோம். ஆனால் இயேசுவோ ஜெபம் என்பது அப்படிப்பட்ட வேதனைப்படுத்தும் காரியங்களில் இருந்து தப்பிக்க உதவும் திறவுகோல் என்று சொல்கிறார். நம் தற்போதைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும், அதில் இருந்து வெளிவரவும் தேவையான பெலத்தை ஜெபம் பண்ணும்போது தேவன் நமக்குத் தருகிறார். இக்காலத்தில் நாம் செய்யும் ஜெபமானது மனுஷ குமாரன் முன் நாம் நிற்பதற்கு நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறது. எவ்வளவு உற்சாகமளிப்பதாக இது இருக்கிறது! அப்படித்தானே? நம் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் தேவனை நோக்கி ஜெபம் செய்வது சிறந்தது ஆகும். கடைசி கால அடையாளங்களைக் குறிந்த எதாவது செய்திகளை நாம் கேட்கும்போது (உதாரணமாக, கொள்ளை நோய் - ஆட்கொல்லி நோயின் பரவல்), நாம் ஜெபிக்கிறோமா?
பயன்பாடு: உலகமெங்கிலும் நடைபெறுகிற காரியங்கள் உலகத்தின் முடிவு சமீபம் என்பதை உணர்த்துகின்றன. இந்தக் காலத்தில், நான் என் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் எதிர்பார்ப்பிற்க்கேற்ப வாழ வேண்டும். அவர் என்னிடம் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படுவதற்குப் பதிலாக, நான் என் நேரத்தை — எப்பொழுதாவது அல்ல, எப்பொழுதும் — ஜெபத்தில் செலவழிக்க வேண்டும். நான் இயேசுவை நம்பி அவருக்குக் கீழ்ப்படியவேண்டும். இயேசுவை நம்புவது எந்தச் சூழ்நிலையிலும் நான் அவருக்காக வாழ்வதற்கான பெரிய நம்பிக்கையை எனக்குத் தருகிறது. ஆகவே, நான் எப்பொழுதும் விழித்திருந்து ஜெபம் செய்வேன்.
ஜெபம்: இயேசுவே, என்னைச் சுற்றி நடப்பவைகளைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக, என் நேரத்தை ஜெபத்தில் செலவழிக்க வேண்டும் என்று உணர்த்தும் அறைகூவலுக்காக நன்றி. ஆண்டவரே, இந்தக் காலத்தில் எல்லாருக்காகவும், எல்லாவற்றிற்காகவும் ஜெபிக்க உம் விண்ணப்பத்தின் ஆவியை என் மேல் ஊற்றும். ஆமென்.
No comments:
Post a Comment