Sunday, May 9, 2021

மனச்சாட்சியில் குத்தப்பட்ட ஒரு தேவமனிதன்

வாசிக்க:  1 சாமுவேல் 23, 24; சங்கீதம் 128; லூக்கா 21: 1-19

வேதவசனம்: 1 சாமுவேல் 24: 4. அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.
5. தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது.

கவனித்தல்: நாம் வாழும் இந்த உலகில், தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்தி ஒரு வேலை அல்லது பதவியை பெறுவதற்கு ஜனங்கள் முயற்சி செய்வதை நாம் அடிக்கடி காண்கிறோம். சில நேரங்களில், ஜனங்கள் ஒழுக்க நெறிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள் எதையும் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். இங்கே, 1 சாமு.24, அதிகாரத்தில் சாமுவேலால் அபிசேகம் செய்யப்பட்ட இரு மனிதர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம்: இஸ்ரவேலரின் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப்பட்ட தாவீது மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் தேவனால் தள்ளப்பட்ட இஸ்ரவேலரின் முதல் ராஜாவாகிய சவுல். வெளிப்படையாக, பொறாமையினாலும் தன் பதவியை எப்படியாவது காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தாவீதைக் கொல்ல சவுல் விரும்பினான். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சவுலை விட்டு தாவீது தப்பி ஓடுகிறவனாக இருந்தாலும், தாவீதின் வீரம் மற்றும் வரும் காலத்தில் இஸ்ரவேலரை வழிநடத்துவதில் அவனுடைய பங்கு ஆகியவை நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டிருந்தது. 

இங்கு, சவுலைக் கொன்று இஸ்ரவேலின் ராஜாவாக மாறுவதற்கு தாவீதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தாவீதோடு கூட இருந்தவர்களும் இது தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்று நினைத்தனர்.  தாவீது சவுலைக் கொன்று போட்டிருந்தால், எவரும் அவனைக் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். எந்த கஷ்டமும்  இல்லாமல் தாவீது விரைவிலேயே ராஜாவாக அரசருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருப்பார். ஆயினும், “சவுலுடைய சால்வையின் தொங்கலை” அறுத்த பின்பு தாவீது மனச்சாட்சியில் குத்துண்டவரானார். அரச பதவியை அவர் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளாமல், சவுலை அவர் உயிர் தப்பச் செய்து, தேவனுடைய உதவியைக் கேட்கிறார். சவுல் தன் தீயச்செயல்களை உணர்ந்து வருந்திய போதிலும், அது தற்காலிகமானதாகவும், குறுகிய வாழ்நாளை உடையதாகவும் இருந்தது. தாவீதைக் கொல்லும்படி சவுல் மீண்டும் வந்த போது, “கர்த்தர் அபிசேகம் பண்ணினவருக்கு” தீங்கு செய்ய மாட்டேன் என்ற தீர்மானத்துடன் சவுலைக் கொலை செய்வதில் இருந்து தன்னை விலக்கிப் பாதுகாத்துக் கொண்டான் என நாம் வாசிக்கிறோம் (1 சாமு.26). தாவீதுக்கு ஒரு உயரிய பதவியைப் பெறுவதில் ஆர்வம் இருக்கிறதா அல்லது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவைகளைச் செய்வதில் விருப்பம் இருக்கிறதா என்பதை காண்பிப்பதற்கான ஒரு சோதனை/ வாய்ப்பு ஆக இச்சம்பவம் இருந்தது. சவுலை தாவீது கொன்று போட்டிருந்தால், தாமதமின்றி சீக்கிரத்தில் அவன் இஸ்ரவேலின் ராஜாவாக மாறியிருப்பான். ஆனால், அதன் பின்னர் தன் எஞ்சிய வாழ்நாட்களில், தன் மனச்சாட்சியுடன் இடைவிடாத ஒரு போராட்டத்தை உடையவனாக இருந்திருப்பான். அப்போஸ்தலர் யோவான் எழுதுவது என்னவெனில், “நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” (1 யோவான் 3:20). தாவீது தன் மனதின்/மனச்சாட்சியின் குரலைக் கேட்டு, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டான்.

பயன்பாடு: என் அனுதின வாழ்வில், நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் என் முன் இருக்கும் வாய்ப்புகள் என் பெயர் மற்றும் புகழுக்காக பயன்படுத்த தேவனால் கொடுக்கப்பட்டவை போலத் தோன்றலாம். அப்படிப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறந்ததை பெற்றுப் பயனடைய எதையாவது செய்யும்படி என்னைச் சுற்றி இருப்பவர்கள் கூறலாம். ஆனால், அப்படிப்பட்ட தருணங்களில், நான் என செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும்.  தேவன் என் மனதில்/மனச்சாட்சியில் பேசி, அவருடைய எழுதப்பட்ட வார்த்தையை நினைவுபடுத்துகிறார். வெளிப்பிரகாரமாக பார்த்தால், சிறந்த ஒன்றைப் பெறுவதற்காக ஒருவர் தன் மனச்சாட்சியை புறந்தள்ளுவது மிக எளிதானதாகத் தோன்றலாம். தேவனுடைய பிள்ளையாகிய நான், எந்த உலகப் பொருள்கள் மற்றும் பதவிகளைப் பெறுவதற்காக தேவனை இழந்து விடக் கூடாது. தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நல்ல மனச்சாட்சி உடையவனாக நான் இருக்க வேண்டும். ஒன்றை விரைவாகப் பெற்று என் வாழ்நாள் முழுதும் என் மனச்சாட்சியுடன் போராடிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தேவனுடைய நேரத்திற்காக காத்திருப்பது எனக்கு நல்லது.

ஜெபம்: இயேசுவே, என்னுடன் பேசுவதற்காகவும், தேவ பக்தியுள்ள ஒரு வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகளை நினைவுபடுத்துவதற்காகவும் உமக்கு நன்றி. “காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று நீர் அடிக்கடி சொன்னீர். ஆண்டவரே, இரைச்சல் நிறைந்த இந்த உலகில் உம் குரலைக் கேட்க என் இருதயத்தைத் சரியான அலைவரிசையில் திருப்பி, அனுதினமும் உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: