Sunday, May 2, 2021

கர்த்தர் உன்னைக் காக்கிறவர்

வாசிக்க:  1 சாமுவேல் 9,10; சங்கீதம் 121; லூக்கா 17: 20-37

வேதவசனம்: சங்கீதம் 121: 7. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
8. கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

கவனித்தல்: சங்கீத புத்தகத்தில் “ஆரோகண சங்கீதம்” என்ற தலைப்புடன் துவங்குகிற (சங்.120-134 வரையிலான) 15 சங்கீதங்கள் “புனிதப் பயண சங்கீதங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. உபாகமம் 16:16 ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, எருசலேமிற்குச் செல்லும் தங்கள் வருடாந்திர பயணத்தின்போது சீயோன் மலையில் ஏறுகையில் இந்தச் சங்கீதங்களைப் பாடல்களாகப் பாடினார்கள் என்று அனேக வேத அறிஞர்கள் கருதுகின்றனர்.  எருசலேம் தேவாலயத்தில் ஏறிச்செல்வதற்கான 15 படிகளை ஆரோகணம் (எபிரேய மொழியில் šîr ha-ma‘ălōṯ) என்பது குறிப்பிடுகிறது என்று சிலர் கருதுகின்றனர். சங்கீதம் 121 புனித யாத்திரை பாடல்களில் ஒன்றாகும். அதில் கர்த்தர் காக்கிறார் என்பது முக்கியமான கருப்பொருள் ஆகும். 

இங்கே, சிருஷ்டிகராகிய தேவன் தனக்கு உதவிசெய்து, எல்லா தீங்குக்கும் விலக்கிப் பாதுகாப்பதாக சங்கீதக்காரன் தேவன்மேல் உள்ள தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் எனில், நம் வாழ்க்கையில் நாம் ஏன் அனேக கஷ்டங்களையும் போராட்டங்களையும் காண்கிறோம்? அனேக நல்ல கிறிஸ்தவர்கள் கூட தங்கள் வாழ்வில் பலப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். சங்கீதக்காரனின் வேதனை மற்றும் பாடுகளைப் பற்றி பல சங்கீதங்கள் விவரிக்கின்றன. உண்மையைச் சொல்வதானால், அனேக சங்கீதங்கள் அப்படிப்பட்ட வேதனையான தருணங்களில் எழுதப்பட்டவை. தேவன் நம்மைப் பாதுகாக்கிறாரா? ஆம். அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. தேவன் உண்மையாகவே தம் ஜனங்களைக் காக்கிறார் என்ற தேவனைப் பற்றிய ஒரு பெரிய பிம்பத்தை சங்கீதக்காரன் தருகிறார். நம் சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவன் நம் ஒவ்வொருவரிடமும் எப்படி இடைபடுகிறார் என்பது வேறுபடுகிறது. தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்குக் கூட ஜனங்கள் பயப்படுவார்கள் என்று யார் நினைத்துப் பார்த்தார்கள்! நம் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் வெளியே செல்லும்போது, அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. சிலர் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார்கள். சங்கீதம் 121 ஐ நாம் வாசிக்கும்போது, தேவன் நம்மை எல்லா நேரங்களிலும் காக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.  நம் வாழ்வின் கடினமான தருணங்களினூடாக நாம் செல்லும்போதும், தேவன் நம்மைப் பாதுகாத்து, அதை மேற்கொள்ள நமக்கு உதவுகிறார். இப்பொழுது உங்களைக் காக்கிற தேவன் என்றைக்குங் காப்பார் என்று சங்கீதக்காரன் சொல்கிறார். இந்த உலகத்தில் உள்ள வேறெதைக் காட்டிலும், தேவனை நம்புவது அதிக நம்பிக்கையைத் தருகிறது.

பயன்பாடு:
தேவன் எனக்கு உதவி செய்கிறார். நான் தூங்கும் போதும் கூட அவர் என்னைப் பாதுகாக்கிறார். அவருடைய சிறகுகளின் கீழ் என்னைப் பத்திரமாக காக்கின்றார். என் வாழ்க்கையை இன்றைக்கும் என்றென்றைக்கும் அவர் பாதுகாக்கிறார். அவர் மகிமையான நித்திய நம்பிக்கையை எனக்குத் தருகிறார். அவரே என் நம்பிக்கை!

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நான் உம்மிடம் வருகிற நேரங்களில் எல்லாம் நீர் எனக்குத் தருகிற நம்பிக்கை மற்றிம் உறுதிக்காக உமக்கு நன்றி. நீர் உண்மையாகவே என்னைக் காக்கின்றீர். உம் பாதுகாப்பின் கீழ் இப்பொழுதும் எப்பொழுதும் தங்கி வாழ எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: