Saturday, May 29, 2021

நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள்

வாசிக்க: 1 இராஜாக்கள் 9, 10 ; சங்கீதம் 148 ; யோவான் 7: 1-24

வேத வசனம்: யோவான் 7: 24. (இயேசு) தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.

கவனித்தல்: நாம் நம் கலாச்சார பழக்க வழக்கங்கள் அல்லது சமுதாய பாரம்பரியங்களுக்கு மிகவும் அதிக முக்கியத்துவம்  கொடுக்கும்போது, தேவன் நம் வாழ்க்கையில் செய்பவைகளை காணத் தவறிவிடுவோம். நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பது எல்லாவற்றையும் விட மேலானது என்று யூதர்கள் கருதினர். ஓய்வு நாட்களில் இயேசு பிணியாளிகளை சுகமாக்கின போது, யூதர்கள் கோபமடைந்து, அவரைக் கொலை செய்யவும் முயற்சித்தனர். ஜனங்களை சுகப்படுத்திய தேவனின் கிரியைகளை காணத் தவறினர். ஆகவே, நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பதில் அவர்களிடம் காணப்பட்ட மாய்மாலத்தை இயேசு வெளிப்படுத்தினார். தன்னை விமர்சித்தவர்களிடம் இயேசு சொன்ன காரியம் என்னவெனில், ஓய்வு நாளில் சரீரத்தின் ஒரு பகுதியை வெட்டுவது (விருத்த சேதனம் செய்தல்) நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல் என கருதப்படும் எனில், ஒருவரின் முழு சரீரத்தையும் சுகமாக்கும் குணமாக்குதல் நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருப்பது எவ்வளவு அதிகம். இயேசுவின் கிரியைகளை யூதர்கள் அவர்களுடைய பாரம்பரிய கண்ணாடி வழியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அவருடைய கிரியைகளின் மூலம் மற்றும் நோக்கத்தைக் காண வேண்டும் என்ற சவாலை அவர்களுக்கு முன் வைத்தார். குற்றம் சாட்டாதிருங்கள் என்று இயேசு சொல்ல வில்லை. மாறாக நீதியாக தீர்ப்பு செய்யும்படியும், நியாயப்பிரமாணத்தின் உண்மையான அர்த்தம் இன்னதென்று அறிந்து புரிந்து கொள்ள இயேசு அவர்களை அழைத்தார்.  நாம் தோற்றத்தின்படி எவரையும் எதையும் நாம் தீர்ப்பிடக் கூடாது. சில நேரங்களில், நாம் பார்ப்பதும் கேட்பதும் நம்மை ஏமாற்றி விடக்கூடும். நாம் எந்த முன் அனுமானமும் இன்றி, நீதியின்படி தீர்ப்பு செய்வதற்கு,  நாம் காரியங்களை உள்ளபடி காண வேண்டும். தேவன் நம் வாழ்க்கையில் எப்பொழுதும் கிரியை செய்கிறார். தேவன் நம் வாழ்க்கையில் செய்து வருகிறவைகளைக் காண, நாம் திறந்த மனதுடையவர்களாக இருக்க வேண்டும். “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்” (மத்தேயு. 13:16).

பயன்பாடு: இயேசுவை நான் அவர் இருக்கிற வண்ணமாக காணவில்லை எனில், அது நான் அவரை விசுவாசியாமல் இருக்கவும், தவறாகப் புரிந்து கொள்ளவும் என்னை நடத்தக் கூடும். இயேசு என் வாழ்க்கையில் எப்பொழுதும் கிரியை செய்து வருகிறார். இயேசுவின் வார்த்தைகளையும் கிரியைகளையும் காணத்தவறிய யூதர்களைப் போல நான் இருக்க விரும்பவில்லை. நான் முக்கியமானவைகளுக்கு உரிய இடத்தை கொடுப்பேன். நான் தேவனைப் பார்ப்பதையும் கேட்பதையும் பாதிக்கிற எந்த பாரம்பரியத்தையும் அனுமதிக்க மாட்டேன். நான் அனைத்தையும் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் காண்பேன். 

ஜெபம்: இயேசுவே, என் வாழ்க்கையில் நீர் செய்து வருகிற கிரியைகளுக்காக உமக்கு நன்றி. உம் வல்லமையையும் மகிமையையும் குறித்து சாட்சி கூற என்னை சுகப்படுத்துகிறீர். உமக்கும் எனக்கும் இடையில் எதையும் நான் வைக்க விரும்பவில்லை. ஆண்டவரே, உம் வார்த்தையிலும் கிரியைகளிலும் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு உதவும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 149

No comments: