Saturday, May 22, 2021

இயேசுவை உயர்த்துவோம்

வாசிக்க:  2 சாமுவேல் 19, 20; சங்கீதம் 141; யோவான் 3: 22-36

வேத வசனம்: யோவான் 3: 30. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.

கவனித்தல்: யோவான் ஸ்நானகன் இயேசுவுக்கு ஒரு முன்னோடியாக இருந்தான். மக்கள் அவனை ஒரு தீர்க்கதரிசி என மதித்தனர். தேவ பக்தியுள்ள யூதர்கள் அவன் மேசியாவாக இருக்கக் கூடும் என நினைத்தனர். ஆயினும்,, “கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுவதே” யோவானுடைய ஊழியத்தின் ஒரே நோக்கம் ஆக இருந்தது. ஜனங்களிடையே அவன் பிரபலமானவனாக இருந்தாலும், இயேசு யார் என்பதைப் பற்றி ஜனங்களுக்குச் சொல்ல அவன் தாழ்மையுள்ளவனாக இருந்தான். இங்கே, யோவான் செய்தது போன்ற ஒரு ஊழியத்தை இயேசுவும் அவருடைய சீடர்களும் செய்வதாகப் பார்த்த தன் சீடர்களுக்கு யோவான் கொடுத்த பதிலை நாம் காண்கிறோம்.  ஜனங்கள் அனைவரும் இயேசுவிடம் செல்வதைப் பார்த்த போது, அவர்கள் பொறாமைப் பட்டிருக்கக் கூடும். ஆகவே அவர்கள் யோவானிடம் அதுபற்றி கூறுகின்றனர் (வ.26). ஆனால், தன் சீடர்களின் போக்குக்கு உடன்படுவதற்குப் பதிலாக, யோவான் மிகவும் மகிழ்ச்சியாக இயேசுவே மேசியா என்று சாட்சி கொடுத்து, ஜனங்கள் அவரிடம் செல்வதைக் குறித்து மகிழ்ச்சியடைந்தான். எதிர்காலத்தைக் குறித்து தன் சீடர்களுடன் சேர்ந்து கவலைப்படுவதற்குப் பதிலாக, என் “சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று” என்று சொன்னான். 

யோவானுடைய தாழ்மைக்கும், இயேசுவின் ஊழியத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததற்கும் எது காரணமாக இருக்கக் கூடும்? அவருடைய தவ வாழ்க்கையா? அல்லது இயலாமையா? “பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்” என்ற தெளிவான புரிதல் யோவானுக்கு  இருந்தது. தாழ்மையாக இருப்பதற்கு யோவான் சுய-வெறுப்பு மீது கவனம் வைக்க வில்லை. மாறாக, அவர் தன் முழு கவனத்தையும், இயேசு பெருக வேண்டும் என்பதில் வைத்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் நம் வாழ்வில் என்ன செய்கிறோம்? சமுதாயத்தில் நம் நிலைமையை உயர்த்துவதில் கவனம் வைக்கிறோமா அல்லது இயேசுவை உயத்துவதில் கவனம் வைக்கிறோமா? இயேசுவை நம் வாழ்வில் நாம் எங்கு வைத்திருக்கிறோம்? இயேசுவுக்கு நாம் கொடுக்கும் இடம் மற்றும் கவனம் ஆகியவை நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை தீர்மானிப்பதாக இருக்கிறது. “அவர் பெருகவேண்டும்” என்று நாம் இயேசுவின் மீது நம் கவனத்தை வைத்தால், நம் வாழ்க்கையில் சம்பூரண மகிழ்ச்சி உடையவர்களாக நாம் இருப்போம்.

பயன்பாடு: இயேசுவைப் பற்றி சாட்சி கூறுவதில் யோவான் ஒரு முழுமையான மகிழ்ச்சியை அனுபவித்தார். ஒரு ஆரோக்கியமான ஆன்மீக வாழ்க்கைக்கு “அவர் (இயேசு) பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்” என்பது நல்ல ஒரு மருந்து ஆகும். இயேசுவை உயர்த்துவதில் நான் என் கவனத்தைச் செலுத்தும்போது, வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் மற்றவர்கள் பெறும் வெற்றியைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  இயேசு யார் என்று ஜனங்களுக்கு சொல்கிற ஒரு தனித்துவமான நோக்கம் மற்றும் அழைப்பு யோவானுக்கு இருந்தது. நான் இயேசுவைப் பற்றி சாட்சியமளிக்க தயங்கக் கூடாது. நான் இயேசுவை என் வாழ்வில் உயர்த்தி, இயேசுவே “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று தைரியமாக மக்களிடம் சொல்வேன். 

ஜெபம்: இயேசுவே, யோவான் ஸ்நானகனின் அற்புதமான தாழ்மை நிறைந்த வாழ்க்கைக்காக நான் உம்மை துதிக்கிறேன். ஆண்டவரே, வேறெதைக் காட்டிலும் அதிகமாக நான் உம் மீது என் கவனத்தை வைக்க எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, என் முழு கவனத்தையும் இயேசுவின் மீது வைக்கவும், மேசியாவின் மகத்துவத்தை என் ஜனங்களுக்குச் சொல்லவும் என்னைப் பலப்படுத்தும். உளையான சேற்றில் இருந்து நீர் என்னை தூக்கி எடுத்திருக்கிறீர். உமக்கே சகல மகிமையையும் செலுத்த நாம் உம்மை என் வாழ்வில் உயர்த்த விரும்புகிறேன். ஆமென்.

 
- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 142

No comments: