Monday, May 17, 2021

தேவனுடைய மாறாத அன்பு

வாசிக்க:  2 சாமுவேல் 9, 10; சங்கீதம் 136 ; யோவான் 1: 1-28

வேதவசனம்: சங்கீதம் 136: 23. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
24. நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
25. மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
26. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

கவனித்தல்: நம் தேவன் யார், அவர் தம் ஜனங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அற்புதமான ஒரு சங்கீதமாக சங். 136 இருக்கிறது. கடைசி நான்கு வசனங்கள் (23-26) இந்த சங்கீதத்தின் கருப்பொருள்களை சுருக்கமாக சொல்கிறதை நாம் காணலாம்: தேவனுக்கு நன்றி சொல்ல ஒரு அழைப்பு (வ.26), தேவனும் அவருடைய படைப்பும் (வ.25), மற்றும் தேவன் தம் ஜனங்களுக்குச் செய்த வல்லமையான செயல்கள் (வ.23-24). “தேவன் தருகிற எல்லா ஈவுகளுக்காகவும் நன்றி செலுத்துதல்- நன்றியுணர்வு- என்பது விசுவாசத்தின் மிகவும் அடிப்படையான மறுமொழி அல்லது பதில் என்ற உண்மையை” இந்த சங்கீதம் வலியுறுத்துகிறது ((George Stroup).

கடந்த காலத்தில் தம் ஜனங்களுக்கு உதவின அதே தேவன் இன்று நமக்கு உதவுகிறார் என்பதை வசனம் 23-24 நமக்கு நினைவுபடுத்துகிறது. நாம் நம் வாழ்க்கையில் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்ட, தாழ்மையான, மற்றும் விரும்பத்தகாத ஒரு நிலையைக் கடந்து செல்லும்போது,  மனிதர்கள் நம்மைக் கவனிக்காமலும், உதவி செய்யாமலும் போகலாம். ஆனால் நாம் உதவியை மிகவும் ஆர்வமாகத் தேடுகிற நம் கடினமான தருணங்களில் தேவன் நம்மை நினைக்கிறார். அவர் நம்மைப் பாதுகாத்து. நம் வாழ்க்கையில் வெற்றிகளைக் காணும்படி நம்மைப் பெலப்படுத்துகிறார். நம் தேவைகளை எல்லாம் சந்திப்பதற்கு அவர் நமக்குத் தருவது போதுமானதாகும். ஆகவே,  நம் வாழ்க்கையில், இந்த உலகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறவைகள், அவை என்னவாக இருந்தாலும் சரி, என்ன நடக்குமோ, எப்போது எப்படி முடியுமோ என்று அதைப் பற்றி நாம் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவை இல்லை.  நாம் தேவனுடைய அன்பை நினைத்து நம்பிக்கையுடன் இருக்க முடியும். ஏனெனில் அவருடைய கிருபை இன்றும், என்றும் உள்ளது.  

பயன்பாடு: என் தேவன் என்னை எப்பொழுதும் நினைவுகூர்கிறார். அவருடைய அன்பு என் போராட்டங்கள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுவிக்கிறது. அவர் என்னை நேசிப்பதால், எனக்குத் தேவையான அனைத்தும் என்னிடம் இருக்கிறது. தேவன் என்னுடன் இருக்கிறார். உண்மையில், அவர் எனக்குள் இருக்கிறார். அவருடைய மாறாத அன்பு இதை எனக்கு சாத்தியப்படுத்தித் தருகிறது. தேவன் என்னை உயர்த்தி, நான் அவருடன் வாழும்படி எனக்கு உதவுகிறார். அவருடைய கிருபை என்றுமுள்ளது. அதற்கு முடிவேயில்லை. “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” (சங்.116:12). அவருடைய முடிவிலாத அன்பு நான் என் வாழ்நாளெல்லாம் தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்தும்படி என்னை அழைக்கிறது. தேவனே, உமக்கு நன்றி!

ஜெபம்: பிதாவாகிய தேவனே, உம் அன்பிற்காக நன்றி. எதிர்காலத்தைப் பற்றிய எந்தவொரு நம்பிக்கையும் இன்றி நான் தனித்துவிடப்பட்ட போதிலும் கூட, உம் அன்பு என்னைத் தேற்றுகிறது. உம் அன்பே என் வாழ்க்கைக்கான நம்பிக்கை. ஆண்டவரே, அனுதினமும் நான் உம் அன்பைப் போற்றிப் புகழவும், நன்றியுணர்வு நிறைந்த இருதயத்துடன் வாழவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: