வாசிக்க: 1 இராஜாக்கள் 13, 14 ; சங்கீதம் 150 ; யோவான் 8: 1-30
வேத வசனம்: யோவான் 8: 3. அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
கவனித்தல்: இயேசுவை தங்களுடைய தீய திட்டங்களில் சிக்க வைப்பதற்கான மற்றுமொரு தந்திரமான முயற்சியை பரிசேயர்களும், வேதபாரகர்களும் செய்வதை நாம் இங்கு பார்க்கிறோம். அவர்களுடைய கேள்விக்கு இயேசு பதிலளிப்பதைப் பொறுத்து அவர்மேல் குற்றம் சாட்ட விரும்பினர். அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும் என்று இயேசு தீர்ப்பளித்திருந்தால், இயேசு ரோமப் பேரரசுக்கு எதிரானவர் என்று சொல்லி இருப்பார்கள். ஏனெனில், அந்நாட்களில் மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் யூதர்களிடம் கொடுக்கப்படவில்லை. அந்தப் பெண்ணைக் கல்லெறிந்து கொல்வதற்கு கட்டளையிட மறுத்திருந்தால், இயேசு மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு எதிரானவர் என்று சொல்லி இருப்பார்கள். நியாயப்பிரமாணத்தின்படி, விபச்சாரப் பாவம் செய்த ஆண் மற்றும் பெண் இருவருமே தண்டிக்கப்பட (அ) கொல்லப்பட வேண்டும் (லேவி.20:10. உபா.22:22). இங்கு, விபச்சாரத்தில் பிடிபட்ட அந்தப் பெண்ணை மட்டுமே அவர்கள் தேவாலயத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.
அவர்கள் எவ்விதத்திலாவது இயேசுவின் மீது குற்றம் சாட்டும்படியாக அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, தரையில் தன் விரலினால் எழுதினார். இயேசு விரலினால் தரையில் எழுதினதை சிலர் பழைய ஏற்பாட்டில் தேவன் தன் விரலினால் எழுதி கொடுத்த கற்பலகை சம்பவத்துடன் தொடர்பு படுத்துகின்றனர் (யாத்திராகமம் 31:18). இது போல, இயேசு விரலினால் தரையில் எழுதினதற்கு ஜனங்கள் பல்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றனர். பதில் சொல்லும்படி அவர்கள் நச்சரித்துக் கொண்டிருந்த போது, “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” என்று இயேசு சொன்னார். இயேசுவின் பதிலானது அவர்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி, பயத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். ஆகவே அவர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக, அந்த இடத்தை விட்டுச் சென்றனர். முடிவில், இயேசுவும் அவளை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தவில்லை. மாறாக, அவளுடைய ஒழுக்கக் கேடான வாழ்க்கையில் தொடர்ந்து இராதபடிக்கு அறிவுறுத்தினார்.
அந்த விபச்சாரப் பெண்ணிடம் இயேசு செய்த செயலானது இயேசுவும் ஒரு பாவி என்பதைக் காட்டுகிறது என்று சிலர் இயேசு மீது குற்றம் சாட்டுகின்றனர். எந்த நீதிமன்றத்திலும், ஒரு நீதிபதியானவர் தனக்கு முன் கொண்டுவரப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை வழங்குவார். ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விடுதலை செய்கிறார் எனில், அந்த நீதிபதியும் குற்றம் சாட்டவரைப் போல ஒரு குற்றத்தை செய்திருக்கிறார் என்று அர்த்தம் ஆகாது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய இயேசு அவளுடைய பாவங்களை மன்னிக்கிறதற்கு தனக்கு உள்ள சக்தியை வெளிப்படுத்தினார். தீய திட்டங்களுடன் இயேசுவை சிக்கலில் மாட்டி விட முயற்சித்தவர்கள், அவருடைய பதிலால் வகையாக சிக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு இயேசுவைக் குற்றம் சாட்ட எவ்வித வாய்ப்பும் இல்லாமல் போயிற்று. மாறாக, அவர்களுடைய மனச்சாட்சியானது அவர்களுடைய பொல்லாத செயல்களைக் குறித்து அவர்களைக் குற்றம் சாட்டியது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய இயேசு அவர்களுடைய திட்டங்களை முறியடித்து, ஒரு புதிய வாழ்க்கையை வாழ அந்த பெண்ணுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்.
பயன்பாடு: மற்றவர்களுக்கு எதிராக நான் குற்றம் சாட்டுவதற்கு முன்பு, நான் என் குறைகள் மற்றும் தவறுகளைக் குறித்து அறிய வேண்டும். “கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (நீதி.11:1). ஒரு கிறிஸ்தவனாக, நான் ஜனங்களை ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை நேசிப்பதற்கும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தருவதற்கும் ஆயத்தம் உள்ளவனாக இருக்க வேண்டும். என் சுய-நீதி எல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது. இயேசுவே என் நீதி. அவர் ஜனங்களை நேசிக்க எனக்கு போதிக்கிறார். ஆகவே, நான் ஜனங்களை அன்புடனும், தேவ நீதியுடனும் தீர்ப்பிட வேண்டும்.
ஜெபம்: இயேசுவே, உம்மைப் போல என்னை நேசிக்க வேறு யாருமில்லை. ஜனங்கள் என் மேல் குற்றம் சாட்டி, ஆக்கினைத் தீர்ப்பிட தயாராக இருக்கையில், நீர் என்னை நேசித்து, உம் இரக்கத்தை காண்பிக்கிறீர்.ஆண்டவரே, நீரே நீதியுள்ள நியாயாதிபதி. நான் உம் நீதி பரிபாலனத்தில், உம் நீதியில் வாழ எனக்கு உதவும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
Day - 151
No comments:
Post a Comment