வாசிக்க: 2 சாமுவேல் 21, 22; சங்கீதம் 142; யோவான் 4: 1- 26
வேத வசனம்: 2 சாமுவேல் 22: 4. ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.
5. மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
6. பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
7. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
கவனித்தல்: 2 சாமுவேல் 22ம் அதிகாரத்தில் நாம் காணும் தாவீதின் நன்றியறிதலின் பாடலை அவன் பாடிய நேரம் இன்னதென்று முதல் வசனத்தில் வாசிக்கிறோம். 2 சாமுவேல் 8ல் நாம் காண்கிற தாவீதின் வெற்றிகளுக்குப் பின் மற்றும் 2 சாமுவேல் 11ல் பத்சேபாள் மற்றும் உரியா விசயத்தில் செய்த பாவங்களுக்கு முன் இந்த பாடலை அவன் எழுதியிருக்க வேண்டும். 2 சாமுவேல் 22ம் அதிகாரம் சங்கீதம் 18 உடன் சில சிறிய மாற்றங்களுடன் அப்படியே ஒத்து காணப்படுகிறது. தாவீது தான் எதிர்கொண்ட பிரச்சனைகளின் வேளைகளிலும், கர்த்தர் அவனை விடுவித்த பின்னரும் தேவனை துதித்தான் என அவன் எழுதிய சங்கீதங்கள் சொல்கின்றன.
“மரண அலைகள்”, “துர்ச்சனப்பிரவாகம்”, “பாதாளக் கட்டுகள்”, மற்றும் “மரணக்கண்ணிகள்” போன்ற சொற்றொடர்கள் தாவீது சந்தித்த ஆபத்துகள் எவ்வளவு அபாயகரமானதாக இருந்தன என்பதை விளக்குகின்றன. தேவன் தனக்கு அற்புதமான வெற்றிகளையும் விடுதலையையும் தந்ததாக அவர் உணர்ந்திருப்பார். தாவீதின் வெற்றிகளுக்கான இரகசியம் என்னவெனில், தன் நெருக்கத்தின் வேளைகளில் அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். ஒரு நபர் மரண அலைகளின் வல்லமையினால் சூழப்பட்டு நெருக்கப்படும் போது, ஒரு வார்த்தை பேசுவது கூட கடினமானதாக இருக்கும். ஒருவர் தண்ணீரில் மூழ்கி, மூச்சுவிட திணறும்போது, மற்றும் மரணத்திற்கு சமீபத்தில் இருக்கும்போது, அவர் தேவனை நோக்கிக் கூப்பிட முடியுமா? அப்படிப்பட்ட தருணங்களில், தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட போது, தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். தேவன் அப்படிப்பட்ட ஜெபங்களை கவனமாகக் கேட்கிறார். ”மரண அலைகள்” நம்மிடையே பல விதங்களில் அல்லது வடிவங்களில் வரக் கூடும். நம் சூழ்நிலையானது எவ்வளவு நம்பிக்கையற்றதாக இருந்தாலும் சரி, நாம் தேவனை நோக்கி ஜெபிக்கும் போது, நாம் ஒரு அற்புதத்தை, ஒரு விடுதலையை, மற்றும் ஒரு சுகமாகுதலை எதிர்பார்க்க முடியும்.
பயன்பாடு: தேவன் என் அருகில் இருந்து, என் ஜெபங்களைக் கேட்கிறார். எந்த சூழ்நிலையிலும், எந்நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து அவரை நோக்கி நான் ஜெபம் செய்ய முடியும். நான் நெருக்கத்தில் இருக்கும் நேரங்களில் தேவனை நோக்கி ஜெபம் செய்ய முடியாது என்று நம்ப வேண்டும் என பிசாசு விரும்புகிறான். நான் ஜெபிப்பதை தடை செய்யும்படிக்கு அவன் என் தோல்விகளை, இயலாமைகளை, மற்றும் என் பலவீனங்களை அடிக்கடி நினைவுபடுத்துகிறான். பிசாசு தன் திட்டங்களை என்னிடம் கூற வெவ்வேறு நபர்களை பயன்படுத்தலாம். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, நான் அதில் கவனம் செலுத்த மாட்டேன். நானோ “மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்” என்று சொல்கிற தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பேன். வாழ்க்கையை அச்சுறுத்துகிற பிரச்சினைகளால் நான் சூழப்பட்டிருக்கும் போது, நான் கவலைப்பட்டு நெருக்கத்தில் இருக்கும் போது, நான் தேவனை நோக்கி ஜெபம் செய்வேன். எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லாத நேரத்திலும் கூட, தேவன் என் நம்பிக்கையாக இருக்கிறார். நான் அவரை நம்புவேன். என் நெருக்கத்தில் அவரைக் கூப்பிட நான் தயங்க மாட்டேன். அவர் என் துதிக்குப் பாத்திரர்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீரே என் இரட்சகர். ஆண்டவரே, நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலை நீரே. என் எல்லா ஜெபங்களையும் கேட்டுப் பதிலளிப்பதற்காக தேவனே உமக்கு நன்றி. என் தேவனே, என் தேவைகளின் நேரங்களில் மட்டுமல்ல, எப்பொழுதும் நான் உம்மிடம் வர எனக்கு உதவும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
Day - 143
No comments:
Post a Comment