வாசிக்க: எஸ்தர் 1-3; சங்கீதம் 29; அப்போஸ்தலர் 21:26-40
வேத வசனம்: சங்கீதம் 29: 3. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4. கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
கவனித்தல்: இடி முழக்கத்துடன் கூடிய
மழையில் இருக்கும் சக்தியாகக் கருதப்பட்ட பாகால் மிகவும் வல்லமையுள்ள கடவுள் என கானானியர்கள்
நம்பினர். அதற்கு எதிராக, இந்த பூமியில் தேவனுடைய வல்லமையும் மகிமையும் காணக்கூடியது
மற்றும் கேட்கக் கூடியது என்பதை சங்கீதம் 29 விவரித்து, தேவனை ஆராதிக்கும்படி ஜனங்களை
அழைக்கிறது. ”கர்த்தருடைய சத்தம்” என்பது சங்.29 இல் ஏழு முறை வருகிறதை நாம் பார்க்கிறோம்.
தேவன் மோசேயுடன் பேசிய போது, ஜனங்கள் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் கண்டு, மிகவும்
பயந்தார்கள் ( யாத்.19:16-19). இது போல, கர்த்தரின் வார்த்தையானது இடியுடன் தொடர்புடையதாக
வேதத்தில் அடிக்கடி காட்டப்படுகிறது (1 சாமு. 7:10; யோபு 37:4-5; சங். 18:13; ஏசாயா.
30:30-31; யோவான் 12:29). கர்த்தரின் சத்தம் சகல வல்லமை உள்ளதும், சிருஷ்டிக்கும் சக்தி
உடையதாகும் (ஆதி.1; சங்.33:6-9). “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும்,
ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின” என்று பரிசுத்த
வேதாகமம் சொல்கிறது (2 பேதுரு 3:5). கர்த்தருடைய சத்தம் தேவனுடைய வல்லமையையும் மகிமையையும்
வெளிப்படுத்துகிறதாக இருந்தாலும் கூட, அதன் முதன்மையான நோக்கம் என்னவெனில், மனிதர்களாகிய
நம்முடன் தொடர்பு கொண்டு பேசுவதும், சிருஷ்டிகரை தொழுது கொள்ள அழைப்பு விடுப்பதும்
ஆகும். தேவன் இன்றும் பேசுகிறாரா? கடந்த காலங்களில் அவர் தம் தீர்க்கதரிசிகள்
மூலமாக பலவிதங்களில் பேசினார். ஆனால் இப்பொழுதோ, அவர் இயேசு கிறிஸ்து மூலமாக பேசுகிறார்
(எபி.1:1,2). நாம் இயேசுவுக்கு, இயேசுவின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டும் (மத்.
17:5; மாற்கு 9:7; லூக்கா 9:35; எபி.12:25). இயேசு தேவனுடைய வார்த்தை ஆவார் (யோவான்
1:1; வெளி.19:16). நாம் தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிக்கும்போது, அவருடன்
உறவாடும்போது, இயேசு நம்முடன் பேசுகிறார். சொல்லப் போனால், நாம் அவருடன் பேச வேண்டும்
என்று விரும்புவதைக் காட்டிலும், நம்முடன் பேச அவர் அதிக ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்.
“காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று இயேசு அடிக்கடி சொன்னார். ”இன்று அவருடைய சத்தத்தைக்
கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள்
இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்” (சங்கீதம் 95:8) என்று பரிசுத்த வேதாகமம் நம்மை
எச்சரிக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, அதின்படி நடக்க நம்மை ஒப்புக்
கொடுப்போமாக.
பயன்பாடு: தேவன் என்னுடன் பேச வரும்போது,
“நீ எங்கே இருக்கிறாய்” என அவர் கேட்கிறார் (ஆதி.3:9). நான் தேவனிடம் இருந்து எதையும்
மறைக்க முடியாது/கூடாது. நான் பாவத்திற்கு மரித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்
தேவனுக்கென்று பிழைத்திருக்கிறேன் (ரோமர் 6:11). அனைத்து சிருஷ்டிகளும், காற்றும்
கடலும் கூட இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறது. நான் இயேசுவின் அன்பின் வார்த்தைகளை
வாசித்து அதற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் கர்த்தர்.
ஜெபம்: கர்த்தாவே, நீர் ஜீவனுள்ள தேவன். என் தேவனே, உம் அன்பிற்காக
நன்றி. உம் வார்த்தைகள் ஜீவனும் வல்லமையும் உள்ளதாக இருக்கிறது. இயேசுவே, உம் வார்த்தைகள்
ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவரே நான் தேவனுடைய வார்த்தையை நினைவு
கூரவும், அதன்படி வாழவும் அனுதினமும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 211