Thursday, July 29, 2021

தேவனிடம் நீங்கள் கேட்க விரும்பும் ஒன்று

வாசிக்க: நெகேமியா 9, 10; சங்கீதம் 27; அப்போஸ்தலர் 20

வேத வசனம்சங்கீதம் 27: 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

கவனித்தல்: நம் வாழ்க்கைத் தேவைகள் மாறும் தன்மை உடையவை, அவை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்று மிகவும் அருமையானதாக நாம் கருதுகிற ஒன்று, நாளையே தொல்லை தரக் கூடியதாக மாறக் கூடும். நம் வாழ்க்கையில் எப்படியாவது பெறவேண்டும் என ஏங்கித் தவித்த காரியங்கள், அவைகளை அடைந்ததும் விரும்பத்தகாத/வெறுக்கிற ஒன்றாக ஆகலாம். எனவே, ஆண்டவரிடம் நாம் கேட்க விரும்பும் ஒரு காரியம் பற்றிய கேள்விக்கு துல்லியமான ஒரு பதிலைக் நாம் சொல்ல முடியாமல் போகலாம். நம் சூழ்நிலைகளைப் பொறுத்து நம் பதில்களும் மாறும். சங்கீதம் 27ல், தாவீதோ கர்த்தரிடம் தான் கேட்க விரும்பும் ஒரு காரியத்தைக் குறித்து நம்பிக்கையுடன் சொல்கிறார். இந்த சங்கீதத்தை தாவீது எப்பொழுது எழுதினார் என்று நமக்குத் தெரியாது. வசனங்கள் 2, 3, 10, 12 ஆகியவை தாவீது தன் வாழ்வில் அனுபவித்த சில சவால்களைக் குறிக்கிறதாக இருக்கிறது.  தாவீது அரண்மனையில் இருந்தாலும் சரி, வனாந்திரத்தில் இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும், தாவீது கர்த்தரிடம் இதே காரியத்தைத் தான் கேட்டிருப்பார் என நாம் உறுதியாக நம்பலாம். தாவீது தேவனைத் தவிர வேறு எதையும் தேடவில்லை என்பதற்கு அவருடைய வாழ்க்கை சாட்சி பகருகிறது (1 சாமு 13:14).

தாவீது தன் வாழ் நாளெல்லாம் தேவனுடைய ஆலயத்தில் (கூடாரத்தில்) வாழ வேண்டும் என விரும்பினார். அவர் தேவனை தேடுவதில் கருத்தாக கவனமாக  இருந்தார். தன் எதிரிகள் அல்லது எதிர்த்து நிற்கும் சூழ்நிலைகளை அல்ல, தாவீது தேவனுடைய மகிமையைப் பார்க்க விரும்பினார். கர்த்தரே தன் வெளிச்சம் என்பதையும், ஆண்டவருடைய வெளிச்சம் அவருடைய வாழ்வில் உள்ள இருளனைத்தையும் அகற்றும் என்பதை தாவீது அறிந்திருந்தார்.  கர்த்தருடைய பிரசன்னம் அல்லது தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பது என்பது தன் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக பத்திரமாக இருக்க உதவும் ஒரு இடம் என்பதை தாவீது அறிந்திருந்தார். கர்த்தருடைய வீட்டில் வாசம் செய்தல் (அ) தங்கி இருத்தல் என்பது உண்மையிலேயே ஒரு பெரிய ஆசீர்வாதம் ஆகும் (சங். 23:6; 26:8; 91:1). தாவீதுக்கு பல்வேறு பொறுப்புகளும் அலுவல்களும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆயினும், அவருடைய முதல் விருப்பம் அல்லது இருதயத்தின் ஏக்கம் கர்த்தருடன் இருக்க வேண்டும் அவரைத் தேடவேண்டும் என்பதாக இருந்தது.  இயேசு மார்த்தாளிடம் சொன்ன வார்த்தைகளை நாம் நினைவில் கொள்வோமாக: “நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” (லூக்கா 10:41,42). நம் கவலைகள் எந்த மாற்றத்தையோ அல்லது பலன்களையோ ஒரு போதும் கொண்டு வரப் போவதில்லை. ஆனால் தேவன் எல்லாவற்றையும் மாற்ற முடியும். நாம் தேவனைத் தேடும்போது, நம் பிரச்சனைகளையும், எதிரிகளையும் எதிர்கொள்வதற்கான மன உறுதியை அவர் நமக்குத் தருகிறார். நாம் இன்னமும் உலகப் பிரகாரமான காரியங்களைக் கேட்டுக் கொண்டு, நம் ஜெபங்களில் வீண் வார்த்தைகளை அலப்பிக் கொண்டு இருக்கிறோமா? (மத்.6:5-8). நாம் தேவனை, தேவனை மட்டுமே நம் வாழ்வில் தேடுவோமாக.

பயன்பாடு: சவாலான சூழ்நிலைகளை என் வாழ்வில் எதிர்கொள்ளும்போது அல்லது எல்லா வளங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழும்போது, என் தலையாய தேவை தேவனே என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். கர்த்தரில் நான் பெற்று மகிழும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் பாதுகாப்பை உலகப் பிரகாரமான எந்த காரியங்களும் எனக்குத் தர முடியாது. தேவன் என் பயங்களை அகற்றி, தம் வெளிச்சத்தினால் என் வாழ்வை நிரப்புகிறார். தேவனே என் முதல் தேவை; நான் அவரை முறையாக தவறாது தேட வேண்டும். நான் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியைதும் தேட வேண்டும். என் கண்கள் என்னுடைய எதிரிகள் மீது அல்ல, கர்த்தர் மீதும் அவருடைய பரிசுத்த மகிமையின் மீதும் இருக்க  வேண்டும்.

ஜெபம்: கர்த்தராகிய தேவனே, என் வாழ்வில் நீர் தந்திருக்கிற உம் வெளிச்சத்திற்காக உமக்கு நன்றி. நீர் என் எதிரிகளிடம் இருந்து என்னை விடுவிக்கிறீர். தேவனே, என் கண்கள் எப்போதும் உம்மையே பார்க்கவும், உம்மைத் தேடவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 209

No comments: