Friday, July 30, 2021

விடுதலைக்கான ஒரு ஜெபம்

வாசிக்க: நெகேமியா 11-13; சங்கீதம் 28; அப்போஸ்தலர் 21:1-25

வேத வசனம்சங்கீதம் 28: 9. தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

கவனித்தல்: தாவீது தன் வாழ்வில் எதிர்கொண்ட மரண ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் விடுதலை வேண்டும் என்று அவன் ஊக்கமாகச் செய்த ஜெபத்துடன் சங்கீதம் 28 ஆரம்பிக்கிறது. தாவீது தேவனுடைய உதவியை நாடி, தன்னைப் பாதுகாக்குமாறு தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடுகிறார் (வ.1,2). ஆயினும், 6-7ம் வசனங்களில், தேவன் ”என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்” என்று சொல்லி தன் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். உதவிக்காக அவர் செய்த ஜெபமானது துதிப் பாடலாக மாறியது. தேவன் ஏன் தன் ஜெபங்களுக்கு பதில் தருகிறார் என்பதை அவர் சொல்லும்போது, “என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்” என்று சொல்கிறார். தேவனை நம்புகிற இருதயமானது மகிழ்ச்சி அடைந்து, துதிப் பாடல்களினால நிரப்பப்படுகிறது. தன் ஜெபங்களுக்கான பதிலைப் பெற்ற பின்பு, தாவீது இப்பொழுது தன் ஜனங்களுக்காக ஜெபிக்கிறார் (வ.9). தம் ஜனங்களை இரட்சித்து ஆசீர்வதிக்கும்படி தேவனே அவர்களுடைய மேய்ப்பராக இருக்கும்படி அவர் வேண்டிக் கொள்கிறார். தேவன் தம் ஜனங்கள் துன்பத்தில் இருக்கும் வேளைகளில் எல்லாம் அவ்ர்களை இரட்சிக்கிறார். தேவ ஜனங்களுக்கு தேவனே இரட்சகராகவும் மேய்ப்பனாகவும் இருக்கிறார் (சங்.23:1; 40:11; 78:52; ஏசாயா 40:11; 63:9). தேவன் தம் ஜனங்களைப் பாதுகாத்து, வழி நடத்தி, அவர்களின் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை வழி நடத்திக் கொண்டு போவது போல தேவன் தம் ஜனங்களை நடத்திச் செல்கிறார் (சங்.23; 78:52; 80:1; ஏசாயா 40:11; 63:9). தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவருடைய ஜனங்கள் மேல் இருக்கிறது; அவர் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய வாழ்வை ஆசீர்வதிக்கிறார். மரணத்திற்கேதுவான வியாதிகள் அல்லது ஆபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும்போது, நாம் தேவனை நம்ப முடியும். அவர் நம் பெலனும் கேடகமுமாயிருக்கிறார். நல்ல மேய்ப்பராகிய இயேசு எல்லா மரண ஆபத்துக்களில் இருந்தும் நம்மைப் பாதுகாத்து ஆசீர்வதிக்கிறார் (யோவான் 10:10,11).      

 பயன்பாடு:  “கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (சங்.144:15). நான் தேவனை நம்பும் போது, அவர் என்னை இரட்சித்து ஆசீர்வதிக்கிறார்.கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்” (சங்.28:7). தேவன் என்னோடு இருக்கிறபடியால், நான் “பொல்லாப்புக்குப் பயப்படேன்” (சங்.23:4). அவர் என்னை ”வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்” தப்புவிக்கிறார்; அவர் என் ஜெபங்களுக்குப் பதில் தந்து, எல்லா ஆசீர்வாதங்கள் மற்றும் நித்திய ஜீவனை அருளிச் செய்து என்னை ஆசீர்வதிக்கிறார் (சங்.91:3,15, 16). நான் தேவனை எக்காலத்திலும் நம்புவேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் இரட்சிப்புக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி. இயேசுவே, நான் உம் மந்தையில் உள்ள ஒரு ஆட்டுக் குட்டி; நான் உம்மை கவனமாக, ஜாக்கிரதையாக பின்பற்ற விரும்புகிறேன். என்னை உம் கரங்களில் ஏந்திக் கொண்டு, இன்றும் என்றும் என்னை எல்லா ஆபத்துகளில் இருந்து பாதுகாத்தருளும். ஆமென்.   

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 210

No comments: