Friday, July 2, 2021

குணசாலியான பெண் யார்?

வாசிக்க: 2 நாளாகமம் 1, 2; நீதிமொழிகள் 31; அப்போஸ்தலர் 3

வேத வசனம்: நீதிமொழிகள் 31: 10. குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

கவனித்தல்: விலையேறப் பெற்ற முத்துக்கள் அல்லது இரத்தினங்கள்(gems) மிகவும் அரிதானவை; அவை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை, அவற்றின் விலையோ மிகவும் அதிகம். ஆகவே, எல்லாராலும் அதிக விலை உள்ள இரத்தின கற்களை வாங்க முடியாது. குணசாலியான பெண்ணைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினம் என்ற புரிதலுடன் நீதிமொழிகள் 31:10 இல் உள்ள கேள்வியானது அனைவருக்கும் பதில் தெரிந்த ஒரு கேள்விதான் என சிலர் கருதுகின்றனர். விலையேறப்பெற்ற முத்துக்களை கண்டு பிடிப்பதைக் காட்டிலும் குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பது அருமையானது என்று வேறு சிலர் விளக்கம் தருகின்றனர். விளக்கம் எதுவாக இருந்தாலும், ஒரு சிறந்த பெண்ணின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய ஒரு அழகான குறிப்பை நீதிமொழிகள் 31:10-31 தருகிறது. நீதிமொழிகள் 31ல் குறிப்பிடப்பட்டிருக்கிற குணசாலியான பெண்ணின்  கடின உழைப்பு மற்றும் முயற்சிகளைப் பார்க்கும்போது, யார் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என அனேகர் நினைக்கின்றனர். ஆயினும், “கர்த்தருக்குப் பயப்படுகிற” பெண்ணே அந்த குணசாலியான, சிறந்த மற்றும் உயர்ந்த மனதுடைய பெண் என நீதிமொழிகள் 31:30 கூறுகிறது.  இப்படிப்பட்ட தேவ பயம் நிறைந்த பெண்களை நாம் எல்லா இடங்களிலும் காண முடியும். அவர்கள் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றவர்கள். குணசாலியான பெண்கள் அவர்களுடைய குடும்பத்திற்கு உண்மையிலேயே ஒரு கிரீடமாக இருக்கிறார்கள் (நீதி.12:4). அப்படிப்பட்ட சிறப்பான/ குணசாலியான பெண்கள் நம் புகழ்ச்சிக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். 

 பயன்பாடு: அழகும், சவுந்தரியமும் ஒரு பெண்ணுக்கு மதிப்பைக் கொடுக்கிறதாக நவீன உலகம் சித்தரிக்கிறது. நம் ஊடகங்கள் பெண்மையைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை முன் வைக்கின்றன. “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” என்று வேதம் சொல்கிறது. மனிதர் பார்க்கிற படி தேவன் பார்ப்பதில்லை, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (1 சாமு.16:7). தேவ பயம் உள்ள என் இருதயத்தை தேவன் பார்க்கிறார். தேவன் பார்ப்பது போல நான் மற்றவர்களைப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். வேதம் சொல்வது போல, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” கர்த்தருக்குப் பயப்படுதலானது தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையைத் துவங்க அல்லது/மற்றும் தொடர தேவையான ஞானத்தைத் தருகிறது. 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் குடும்பத்தில், சபையில், சமுதாயத்தில், மற்றும் தேசத்தில் இருக்கிற தேவ பக்தியுள்ள அனைத்து பெண்களுக்காகவும் உமக்கு நன்றி.  சொல்கிறேன்.ஆண்டவரே, இப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட பெண்கள் அனேகரை எங்கள் மத்தியில் எழுப்புங்கள். இயேசுவே, ஒவ்வொரு பெண்ணிலும் தேவனுடைய சாயலைக் காண எனக்கு உதவுங்கள். தகப்பனே, கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு என் கண்களையும் இருதயத்தையும் திறந்தருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 182

No comments: