Tuesday, July 20, 2021

நண்பர்களே, நீங்கள் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும்

வாசிக்க: எஸ்றா 1, 2; சங்கீதம் 18; அப்போஸ்தலர் 13:13-42

வேத வசனம்:  அப்போஸ்தலர் 13: 38. ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு) மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
39. மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

கவனித்தல்: பவுல் தான் மனம் திரும்பிய நாள் முதற்கொண்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் துவங்கி, இயேசுவே தேவ குமாரன் என்றும் மேசியா என்றும் வேத வசனங்களில் இருந்து விளக்கிக் கூறுகிற வல்லமையான நற்செய்தியாளராக இருந்தார் (அப்.9:20-22). ஏறக்குறைய அவர் தன் முதல் பிரசங்கத்தைச் செய்து 15 ஆண்டுகளுக்குப் பின், அப்போஸ்தலர் 13ம் அதிகாரத்தில், பவுல் செய்த பிரசங்கத்தின் செய்தியைப் பற்றிய முதலாவது குறிப்பை நாம் காண்கிறோம். இங்கு, இயேசுவே தேவ குமாரன் என்று நிரூபிக்க யூத வரலாற்றை இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையுடன் பவுல் தொடர்பு படுத்துகிறார். 38, 39ஆம் வசனங்களில், தன் பிரசங்கத்தைக் கேட்ட யூதருக்கு இயேசுவைப் பற்றிய ஒரு ஆழமான செய்தியைப் பகிர்ந்து, சுவிசேஷத்தின் சாராம்சம்—இரட்சிப்பு, பாவ மன்னிப்பு, மற்றும் நீதிமானாக்கப்படுதல்—பற்றி பேசுகிறார். நியாயப்பிரமாணம் மூலமாக யூதர்களால் பெறமுடியாத ஒன்றைப் பெறும்படிக்கு, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க அவர்களுக்கு சவால் விடுத்தார். ”உங்களுக்கு…அறிவிக்கப்படுகிறது,” ”உங்களுக்குத் தெரிந்திருக்கக் கடவது,” மற்றும் “விசுவாசிக்கிற எவனும்” என்பன போன்ற பவுல் பயன்படுத்தும் வார்த்தைகள் கவனிக்க தூண்டுகிறதாகவும், இயேசுவை விசுவாசிக்க செயல்படவும் வலியுறுத்துகிறது. தேவனுடைய ஆசீர்வாதங்களை எதையும் செய்யாமல் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்ற இயேசுவைப் பற்றிய புதிய போதனையை பவுல் சொல்லக் கேட்ட யூதர்கள் ஆச்சரியமடைந்திருப்பார்கள். இதற்கு முன்பாக அவர்களால் மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே விடுதலையைப் பெறக் கூடாதிருந்தது. ஆனால் இப்பொழுதோ, இயேசுவை அவர்கள் விசுவாசிக்கும்போது தேவனுடைய ஈவைப் பெற முடியும். யூதர்கள் மட்டுமல்ல, இயேசுவை விசுவாசிக்கும் எவரும் இரட்சிப்பையும், பாவங்களில் இருந்து மன்னிப்பையும், நீதிமானாக்கப்படுதலையும் பெற முடியும். இயேசுவைப் பற்றிய நற்செய்தியானது அதைக் கேட்கிற எவருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்றதாக இருக்கிறது. எதையாவது செய்தோ அல்லது நியாயப்பிரமானத்தைப் பின்பற்றியோ ஒருவர் தேவனுடைய ஈவுகளைப் பெற முடியாது. இந்த உண்மையை நாம் அறிந்து இருக்கிறோமா? இயேசுவை விசுவாசிக்கிறோமா? நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், இயேசுவின் மீது விசுவாசமுள்ளவர்களாக இருப்பது மட்டுமே.

பயன்பாடு: என் கிரியைகள் அல்லது மோசேயின் நியாயப்பிரமாணம் என்னை பாதுகாக்க முடியாது. இயேசுவோ என் பாவங்களுக்குப் பரிகாரம் உண்டு பண்ணும்படியாக சிலுவையில் மரித்தார். நான் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். இயேசுவின் இரத்தம் என்னைச் சகல பாவங்களிலும் அநியாயத்திலும் இருந்து என்னை சுத்திகரிக்கிறபடியால நான் மன்னிக்கப்பட்டிருக்கிறேன். நான் இயேசுகிறிஸ்துவின் மீது உள்ள என் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன். தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறேன். தேவன் என்னை நேசிக்கிறார். இயேசு இன்றும் உயிரோடிருக்கிறார். இதைவிட அதிகமாக நான் அறிந்து கொள்ள வேறு என்ன இருக்கிறது! 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என்னை இரட்சிக்கிற உம் அன்பிற்காக நன்றி. உம் அளவற்ற கிருபைக்காக உம்மை துதிக்கிறேன். இயேசுவே, நான் இன்றும் என்றும் உம் பாதுகாப்பின் கீழ் பத்திரமாக வாழ எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, நற்செய்தியை அறியாதவர்களுக்கும் கேள்விப்படாதவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்க எனக்கு உம் பலம் தாரும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 200


No comments: