Saturday, July 17, 2021

நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?

வாசிக்க: 2 நாளாகமம் 31, 32; சங்கீதம் 15; அப்போஸ்தலர் 11: 19-30

வேத வசனம்:  அப்போஸ்தலர் 11: 25. பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
26. அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

கவனித்தல்: பொதுவாக, தாங்கள் விரும்பாத அல்லது வெறுக்கிறவரை நிந்திக்க அல்லது கேலி செய்ய அல்லது திட்டுவதற்கு தவறான பட்டப்பெயர்களைச் சூடுவதில் ஜனங்கள் ஈடுபடுவார்கள். புதிய ஏற்பாட்டில், கிறிஸ்தவன் என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது (அப்.11:26; 26:28; 1 பேதுரு 4:16). இயேசுவைப் பின்பற்றுபவர்களை இழிவு செய்வதற்காக ஒரு அவமரியாதையான வார்த்தையாக இதை ஜனங்கள் பயன்படுத்தினர். ரோம சக்கரவர்த்தையை ஏற்றுக் கொண்டு வணங்கினவர்களிடம் இருந்து இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என சிலர் கூறுகின்றனர். மூல மொழியில், கிறிஸ்துவைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையான Christos  மற்றும் ”சொந்தமான அல்லது கட்சியைச் சேர்ந்த” என்ற பொருளைத் தரும் இலத்தின் மொழியில் இருந்து எடுக்கப்பட்ட பெயரடைச் சொல்லான “-ian,” என்ற இரண்டு வார்த்தைகள் சேர்ந்து உருவானதுதான் கிறிஸ்தவன் என்ற வார்த்தை ஆகும். இப்படியாக, கிறிஸ்தவன் என்பது கிறிஸ்துவுக்குச் சொந்தமான ஒருவரைக் குறிக்கிற ஒரு வார்த்தையாக இருக்கிறது. 

அந்தியோகியாவில் சீடர்களை கிறிஸ்தவர்கள் என அழைக்கத் துவங்கின காலம் வரைக்கும், இயேசுவைப் பின்பற்றினவர்கள் தங்களை சீடர்கள், விசுவாசிகள், சாட்சிகள், சகோதரர், மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் பரிசுத்தவான்கள் என அழைத்துக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவன் என்ற முத்திரையானது ஒரு சுய அடையாளம் அல்ல, மாறாக மற்றவர்களால் கொடுக்கப்பட்ட ஏளனமான ஒரு அடையாளம் ஆகும். இயேசுவின் நாமத்திற்காக அவமானமடைவதற்குப் பாத்திரவான்கள்” என இயேசுவின் சீடர்கள் குறித்து யூதர்கள் கருதினர். ” சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர்” வந்த நிகழ்வு குறிப்பிடத்தகுந்த ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இன்று உலகமெங்கிலும் இலட்சக்கணக்கானவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் கிறிஸ்தவர்கள் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கேள்வி என்னவெனில், அவர்களில் எத்தனை பேர் “கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்” அல்லது சீடர்கள்! இயேசு தன் சீடர்களின் குணாதிசயங்கள் பற்றி பல இடங்களில் சொல்லி இருக்கிறார் (பார்க்க: மத்.16:24; மாற்கு.8:34; லூக்கா 9:23; 14:25-33; யோவான் 8:31-32; 13:34-35). கிறிஸ்தவராக இருப்பது என்பதும் இயேசு கிறிஸ்துவின் சீடராக இருப்பதும் வேறல்ல, ஒன்றுதான். நான் ஒரு கிறிஸ்தவனா? என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். ”ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு உற்சாகப்படுத்துகிறார் (1 பேதுரு 4:16).

பயன்பாடு: நான் ஒரு கிறிஸ்தவன். ஏனெனில், நான் இயேசுவுக்கு சொந்தமானவன். நான் சுயத்தை வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு என் வாழ்க்கையில்  இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். நான் இயேசுவின் போதனைகளைக் கைக்கொண்டு, அவரில் நிலைத்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் அன்பு மற்றும் நற்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள அவருடைய அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது.

ஜெபம்: தேவனே, என்னை இரட்சித்த உம் அன்பிற்காக நன்றி. ஆண்டவரே, உம் சீடராக வாழவும், உலகிற்கு உம் அன்பைக் காண்பிக்கவும் இன்று எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். இயேசுவே, ஒரு கிறிஸ்தவராக, என் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் நான் செல்லும் இடமெங்கிலும் உம் சாட்சியாக இருக்க எனக்கு உதவியருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day – 197


No comments: