Friday, July 23, 2021

சட்டநெறிவாதம் – அறிகுறி இன்றி வீழ்த்தும் ஆட்கொல்லி

Legalism—a silent killer

வாசிக்க: எஸ்றா 7, 8; சங்கீதம் 21; அப்போஸ்தலர் 15:1-21

வேத வசனம்: அப்போஸ்தலர் 15: 1. சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.
2. அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறுசிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

கவனித்தல்: இன்று சபையில் நாம் காணும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை புதிது அல்ல; அவை சபையின் ஆரம்ப காலத்திலேயே இருந்திருக்கின்றன. பிரச்சனைகளை கண்டுகொண்டு, அவைகளை சீக்கிரமாக தீர்த்துவைப்பது சபையானது உயிருள்ளதாகவும் துடிப்பானதாகவும் வைத்திருக்க உதவும். ஆதிச்சபையில் ”மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும்” உண்டானதற்கான காரணம் குறித்து அப்போஸ்தலர் 15:1ல் நாம் வாசிக்கிறோம். அந்தியோகியாவில் இருக்கையில், யூதேயாவில் இருந்து வந்தவர்கள் புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு விருத்தசேதனம் கட்டாயம் என்று சொன்னார்கள். ஆனால் எருசலேமிலோ, மோசேயின் நியாயப்பிரமாணம் முழுவதையும் புறஜாதியார் கைக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அதிகப்படியான மற்றும் நடைமுறை சாத்தியம் இல்லாத கோரிக்கைகளை முன் வைத்தனர் (வ.5).  மோசேயின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றபடி புறஜாதிகளுக்கு எதிரான தங்களுடைய கோரிக்கைகள் சரியானவை என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். கவனிக்க: இதைச் செய்யாவிட்டால் நீங்கள் இரட்சிக்கப் பட மாட்டீர்கள் அல்லது கிறிஸ்தவர்களாக (இருக்க) மாட்டீர்கள் என்ற கோரிக்கையுடன் அவர்கள் ஆரம்பித்தனர்.

சட்டநெறிவாதம் (தேவனைக் காட்டிலும் அதிகமாக குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள், விதிமுறைகள், செயல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செயல்) இப்படிப்பட்ட கோரிக்கைகளுடன் தான் சபையில் எப்பொழுதுமே நுழைகிறது. முதலில்  அது சிறிய காரியங்களை வலியுறுத்துவதில் ஆரம்பிக்கிறது. பின்பு, அவை கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியடைந்து விசுவாசிகள் கிறிஸ்துவில் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கிறதாக மாறிவிடுகிறது. சட்ட நெறிவாதமானது கிறிஸ்தவ சபைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான மிக முக்கியமான எதிரிகளில் ஒன்றாகும். சட்டவாதம் கிறிஸ்தவர்களை குற்ற மனப்பான்மையிலும் அவமானத்திலும் தொடர்ந்து வைத்திருக்கிறது. மேலும் பிரசங்க பீடங்களில் கேட்கிற சில காரியங்களை செய்யாததற்காக கிறிஸ்தவர்கள் மீது பழிசுமத்தி, அவர்களுடைய மகிழ்ச்சியை திருடிக் கொள்கிறது. பரிசேயருடைய மாய்மாலமான போதனையின் பயனற்ற தன்மை பற்றி இயேசு ஏற்கனவே நம்மை எச்சரித்திருக்கிறார் (மத்.23:13). அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வைக் கண்டறிய ஒன்று கூடினர்.  தேவன் பாரபட்சமின்றி புறஜாதியாரை எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு சபை மன்றம் முன்பு சொன்னார். நியாயப்பிரமாணமானது சுமக்க முடியாத நுகத்தடி சுமை என்று சொல்கையில், நியாயப்பிரமாணத்தினாலே அல்ல, “கிருபையினாலே” நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று பேதுரு சுட்டிக்காட்டினார். சில நல்ல கிறிஸ்தவர்கள் கூட சட்டவாத நடைமுறைகளை ஆதரிக்கக் கூடும். அவர்கள் ”செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை” என்ற ஒரு பட்டியலை முன் வைத்து, மற்ற கிறிஸ்தவர்களும் அவர்களைப் போல இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தாங்கள் குறிப்பிட்ட சில காரியங்களைச் செய்வதால் அல்லது பின்பற்றுகிறபடியால் தேவனைப் பிரியப்படுத்துகிறோம் என்று நினைத்து சட்ட வாதத்தைப் பின்பற்றுகிறவர்கள் தங்களைப் பற்றி பெருமை பாராட்டிக் கொள்கிறார்கள். சட்ட வாதம் செய்பவர்களின் “நீங்கள் இதை செய்யாவிடில்” என்று சொல்கிற பட்டியலில் இருந்து இயேசுவின் பட்டியல் வேறுபட்டது ஆகும். மறுபடியும் பிறத்தல், மற்றவர்களை மன்னித்தல், சிறு பிள்ளைகளைப் போல தேவனுடைய இராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளுதல், மனம் திரும்புதல் என பல காரியங்களைப் பற்றி இயேசு நமக்குப் போதித்திருக்கிறார் (மத்.5:20; 18:3, 35; லூக்.13:3, யோவான்.3:3; 6:44; 12:24; 15:4). சட்ட வாதத்திற்கு அல்ல, இயேசுவின் போதனைக்கே நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். 

பயன்பாடு: என்னுடைய கிரியைகளினால் அல்ல, தேவனுடைய கிருபையாலேயே நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.  என் கிரியைகளினால் நான் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. சட்ட வாதம் என் வாழ்க்கையில் நுழைந்து, தேவனை விட்டு என்னைப் பிரிக்க நான் அனுமதிக்கக் கூடாது. நாம் முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கையை நான் வாழும்போது, நான் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அனுபவிக்கிறேன். என் கிறிஸ்தவ வாழ்வின் ஆசீர்வாதத்தைப் பாதிக்கும் சட்ட வாதத்தை என் வாழ்வில் நான் அனுமதிக்கவே மாட்டேன்.

ஜெபம்: பிதாவாகிய தேவனே, உலகப் பெருமை மற்றும் பாவங்களில் இருந்து என்னை இரட்சித்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம்மை விட்டும், தேவனுடைய வார்த்தையில் இருந்தும் என் கவனத்தை திசைதிருப்பும் எதற்கும் இடம் கொடுக்காமல் கவனமாக இருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 203


No comments: