Wednesday, July 7, 2021

கருத்து வேறுபாடுகளைக் களைவது எப்படி?

- ஆதிச் திருச்சபையில் இருந்து conflict management (முரண்பாடு மேலாண்மை) பற்றிய ஒரு பாடம்

வாசிக்க: 2 நாளாகமம் 11, 12; சங்கீதம் 5; அப்போஸ்தலர் 6

வேத வசனம்: அப்போஸ்தலர் 6: அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

கவனித்தல்: ஆதி திருச்சபையில் முதல் உறுப்பினர்களாக இருந்தவர்கள் அனைவருமே யூதர்கள் ஆவர், அவர்கள் பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் (அப்போஸ்தலர் 2:5,41). அனுதினமும் புது விசுவாசிகள் ஆதிச் சபையில் இணந்து வந்தனர் (அப்போஸ்தலர் 2:47; 5:14). ஒரு உரையாடல், நிறுவனம், மற்றும் எந்த அமைப்பிலும் பங்கு பெறுபவர்கள் அல்லது இருக்கும் நபர்களின் எண்ணிக்கை பெருகும்போது, அது முறையாகக் கையாளப்படாவிடில், அது அதிக சிக்கல்களை உண்டாக்கும். அப்போஸ்தலர் 6:1ல், கிரேக்க மொழி பேசும் யூதர்களுக்கும் எபிரேய மொழி பேசும் யூதர்களுக்கும் இடையே, ஏழை விதவைகளை கவனிப்பது பற்றிய விஷயத்தில் எழுந்த ஒரு கருத்து வேறுபாடு பற்றி நாம் வாசிக்கிறோம். அந்த குற்றச்சாட்டை அப்போஸ்தலர்கள் கையாண்ட விதம் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது.  அந்நாட்களில், அப்போஸ்தலர்கள் திருவசனத்தைப் போதிக்கிற ஊழியத்தையும் சபையில் ஏழைகளைப் போஷிக்கிற ஊழியத்தையும் செய்து வந்தனர். ஒரு பிரச்சனை வந்த போது, அப்போஸ்தலர்கள் அனைத்து சீடர்களையும் ஒன்றாக வரவழைத்து, தாங்கள் ஜெபத்திலும் தேவ வசனத்தை போதிக்கிறதிலும் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதாக தெளிவாக எடுத்துரைத்தனர். முறுமுறுப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு தொடர்பான விஷயத்தில், பந்தி விசாரணை செய்யும் வேலையைச் செய்ய, “ பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை” தெரிந்து கொள்ளும்படி ஒரு யோசனையை முன்வைத்தனர். இந்த யோசனை அனைவருக்கும் பிரியமானதாக இருந்தது என்பதும், அந்த ஏழு பேரின் பெயர்கள் உணர்த்துகிறபடி அவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசும் யூதர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது ஆகும்.  அப்போஸ்தலர்கள் அந்த ஏழு பேரிடமும் பந்திவிசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தனர். பிரச்சனைக்கு அடிநாதமாக இருந்த ஏழைகளைப் போஷித்தல் தொடர்பான விஷயத்தில் ஆதிச்சபையானது மேலும் பிரச்சனைக்கு இடம் கொடுக்காமல் இணக்கமான முறையில்  தீர்த்து வைத்தது.  இத்துடன் இந்த சம்பவம் முடிவு பெறவில்லை என்பதைக் கவனியுங்கள். அந்த ஏழு பேரையும் சபையானது நியமித்த பின்பு, சபையில் ஒரு துரிதமான வளர்ச்சி, பெருக்கம் உண்டானது என்றும், “ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்” என்றும் நாம் வாசிக்கிறோம் (வ.7).  இன்னமும் கூட இச்சம்பவத்தில் நமக்கு சில அதிக விஷயங்கள் உண்டு; ஏழு பேரில் ஒருவரான ஸ்தோவான் ஒரு சிறந்த நற்செய்தியாளராக மாறினார்; சில காலம் பின்பு, அவர் சபையின் முதல் இரத்த சாட்சியாக மரித்தார்.

அப்போஸ்தலர்களின் “உறுதிப்படுத்தும் செயல்” ("affirmative action") சபையில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. மேலும் எருசலேமுக்கு வெளியே சபையின் ஊழியத்திற்கான ஆரம்பப் புள்ளியாக அது இருந்தது. நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்: நம் கருத்துக்கு முரண்படுகிற அல்லது வேறுபடுகிற குரல்(களை) நாம் கேட்கும்போது நாம் அதை எவ்வாறு கையாளுகிறோம்? அப்படிப்பட்ட குரல்களை எழ விடாமல் அடக்கி, பெரும்பான்மையினரின் பலத்தை நிரூபிக்க முயற்சிக்கிறோமா? அல்லது சம நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், பிரச்சனையை சச்சரவின்றி தீர்த்து வைக்கவும் முயற்சிகள் எடுக்கிறோமா? எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுக்கிறோமா? நாம் “ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும்” கவனம் செலுத்தி, அதற்கு அதிக நேரம் கொடுக்கிறோமா? பெரும் மாற்றங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன!

பயன்பாடு: கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை நான் எதிர்கொள்ளும்போது, நான் தேவனுடைய வார்த்தைக்கு நேராக என் கவனத்தை திருப்பி, கர்த்தர் சொல்கிற வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். எனது நிலையை நிரூபிப்பதோ அல்லது வாதத்தில் ஜெயிப்பதோ என் நோக்கம் அல்ல. மாறாக கிறிஸ்துவுக்கு ஜனங்களை ஆதாயம் செய்வது ஆகும். நான் என் அழைப்பு மற்றும் முக்கியமான பொறுப்பு பற்றி தெளிவையும் உறுதியையும் பெறும்போது, என் வாழ்வில் எந்தப் பிரச்சனைகளையும் கையாள்வது எனக்கு எளிதானதாகிவிடுகிறது. ஒவ்வொரு சவாலும், தேவனை இன்னும் அதிக உண்மையுடன் சேவிக்க ஒரு வாய்ப்பைக் கொண்டு வருகிறதாக இருக்கிறது. 

ஜெபம்: என் ஆண்டவராகிய இயேசுவே, என் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் உமக்கு சாட்சியாக இருக்க உம் ஆவியினாலும் ஞானத்தினாலும் என்னை நிரப்பும். உலக காரியங்கள் அல்லது சாதனைகளைத் தேடுவதற்குப் பதிலாக, முதலாவது உம்மையும் உம் வார்த்தைகளையும் தேட எனக்கு உதவியருளும். ஆண்டவரே, மற்றவர்களை உறுதிப்படுத்தவும், நீர் விரும்புகிற மாற்றங்களை உண்டாக்கவும்  எனக்கு உம் கிருபையை தந்தருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 187

No comments: