Wednesday, July 14, 2021

சுத்தமானது மற்றும் தீண்டத்தகாத தீட்டு

வாசிக்க: 2 நாளாகமம் 25, 26; சங்கீதம் 12; அப்போஸ்தலர் 10:1-23

வேத வசனம்: அப்போஸ்தலர் 10: 14. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
15. அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

கவனித்தல்: இயேசு என்னிடம் நேரடியாக தோன்றி குறிப்பிட்ட ஒன்றைச் செய்யும்படி சொன்னால் நான் கீழ்ப்படிவேன் என்று ஜனங்கள் சொல்வார்கள்.  ஜனங்கள் ஆண்டவருக்கு “ஆம்” என்று சொல்லி, கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அப்போஸ்தலர் 10ல், பேதுரு ”அப்படியல்ல” என்று தேவனிடம் சொல்லி ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுப்பதை நாம் பார்க்கிறோம். ” அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை” என்று பேதுருவுக்கு முன்பே வேறொருவரும் சொல்லி இருக்கிறார். பேதுரு சொல்வதற்கு முன் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் இது போன்றதொரு மறுப்பை தேவனிடம் தெரிவித்தார் (எசேக்.4:13-15). யூதர்கள் தீட்டான உணவை சாப்பிடுவதை வெறுக்கிறார்கள்; அப்படி சாப்பிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டால் அதற்காக தங்கள் உயிரையும் இழக்க ஆயத்தமாக இருந்தார்கள் (மக்கபேயர்கள் காலத்தில் அப்படி செய்தனர்). எல்லா மதங்களும் கலாச்சாரங்களும் உலகத்தில் உள்ள அனைத்து காரியங்களையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்: தீண்டத்தகாதது மற்றும் சுத்தமானது Profane and Sacred (அசுத்தமானது மற்றும் தூய்மையானது). ஜனங்களின் மத நம்பிக்கைகள், சமுதாய மற்றும் கலாச்சார பழக்க வழக்கங்கள் இந்த இரண்டு பிரிவுகளை ஜனங்களை ஏற்றுக் கொள்ள அல்லது நிராகரிக்க, ஜனங்களை ஒன்று சேர்ப்பதற்கு அல்லது அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதற்கு பயன்படுத்துகின்றன. ”சுத்தம் அல்லது அசுத்தம்” பற்றிய கருத்தானது ஜனங்களைப் பிரித்து, நிறம், இனம், பாலினம், மற்றும் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்ட அவர்களை வழி நடத்துகிறது.

ஒரு மனுஷனை தீட்டுப்படுத்துவது எது என்பதைப் பற்றி இயேசு நமக்கு ஏற்கனவே போதித்திருக்கிறார் (மத்.15:11; மாற்கு 7:15). அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, ” தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது” என்று சொல்லி, குறிப்பிட்ட சில காரியங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என மக்களை தடுக்கும் வஞ்சிக்கிற ஆவிகளின் உபதேசங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எழுதுகிறார் (1 தீமோ.4:1-5). கிறிஸ்தவர்களாகிய நாம், நம் இருதயத்தில் இருந்து வருகிறவைகளைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும், நம்முடைய மற்றும் மற்றவர்களுடைய வெளிப்புற தோற்றத்திற்கு அல்ல. “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்” என்று சொல்வது எளிது (லூக்கா 22:33). ஆனால், அதை செயல்படுத்துவது தான் உண்மையான சவால் ஆகும். நம் எதிர்பார்ப்புகள் அல்லது/மற்றும் நம் சமுதாய நடைமுறைகளுக்கு எதிரான ஒன்றைச் செய்யும்படி ஆண்டவர் சொல்லும்போது, நாம் தாமதமின்றி அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். தேவனால் எதையும் சுத்தமானதாகவும் தூய்மையானதாகவும் மாற்ற முடியும். நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது, மற்றவர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களைக் கொடுக்கிற வாய்க்கால்களாக நாம் மாறுகிறோம். தேவன் இன்றும் பேசுகிறார். நீங்கள் அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்கிறீர்களா? ஒருவேளை, நீங்கள் விரும்பாத, கேட்க விரும்பாத ஒன்றை அவர் சொல்லக் கூடும்.

பயன்பாடு: நான் என்னைப் பற்றி பெருமை பாராட்டிக் கொண்டிருக்காமல், இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவேன். அனைவருக்கும் இயேசுவின் நற்செய்தியை பகிர்ந்து கொள்ள நான் எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பேன். மக்களின் சாதி, நிறம், மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறவனாக நான் இருக்கக் கூடாது. தேவன் ஜனங்களைப் பார்ப்பது போலவே நானும் அவர்களைப் பார்க்க வேண்டும். என்னைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் அவரே. அவரால் எவரையும் சுத்தமாக்கவும் தூய்மைப்படுத்தவும் முடியும். 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, நீர் நல்ல தேவன். நீர் படைத்த அனைத்தும் நல்லதாயிருக்கிறது. இயேசுவே, ஜனங்கள் தங்களுடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உதவ என்னைப் பயன்படுத்தியருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 194


No comments: