Sunday, July 18, 2021

நம்பிக்கையின் பாடல்

வாசிக்க: 2 நாளாகமம் 33, 34; சங்கீதம் 16; அப்போஸ்தலர் 12

வேத வசனம்:  சங்கீதம் 16: 1. தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
2. என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,
3. பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.

வசனம் 2: நான் கர்த்தரை நோக்கி சொல்கிறதாவது, “நீரே என் ஆண்டவர்; உம்மைத் தவிர நன்மையானது என்று வேறெதுவும் எனக்கில்லை." (எனது தமிழ் மொழிபெயர்ப்பு)

கவனித்தல்: தன் தந்தையின் ஆடுகளை மேய்த்த காலத்தில் இருந்தே, தாவீது தன் வாழ்வில் பல ஆபத்துகளை சந்தித்தார். அவர் ஆபத்தான விலங்குகளையும் இரட்சதர்களையும் எதிர்கொண்டார். தன் உயிரைப் பாதுகாப்பதற்காக தப்பி ஓடவேண்டிய தருணங்களும் தாவீதின் வாழ்வில் இருந்தன. பல நேரங்களில் குகைகளிலும் அவாந்தரமான இடங்களிலும் அவர் மறைந்து வாழ்ந்தார். வலிமையான போர்வீரரான தாவீது, ஆபத்தான ஒரு நேரத்தில் பைத்தியக்காரன் போல நடித்து உயிர் தப்ப வேண்டியதாயிருந்தது. தாவீதின் வாழ்நாளெல்லாம், அவர் பிரச்சனைகளின் மேல் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. ஆயினும் எல்லா சூழ்நிலையிலும் அவர் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தார். தன் கடினமான தருணங்கள் ஒன்றில், தாவீது சங்கீதம் 16 ஐ எழுதி இருக்கலாம். 

இங்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட ஒரு தருணத்தில் தேவனிடம் உதவி கேட்டு தாவீது தன் பாதுகாப்பிற்காக செய்த ஒரு சிறிய ஜெபத்தை நாம் காண்கிறோம். தேவன் யார் என்பதை தாவீது அறிந்திருந்தார். ஆகவே, அவர் தன் பிரச்சனையை/கஷ்டத்தைப் பற்றி சொல்லுவதற்குப் பதிலாக, தேவன் மீதான தன் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தைப் பற்றி பேசுகிறார். தேவன் தன் புகலிடமாக இருக்கும் பட்சத்தில், எந்த தீங்கும் அழிவும் தன்னைப் பாதிக்காது என்பதை தாவீது புரிந்து கொண்டிருந்தார். தேவனிடத்தில் தஞ்சமடைந்த தாவீது, தன் முழு நம்பிக்கையையும் தேவனிடத்தில் வைத்தார். தன் நம்பிக்கையை அறிக்கை செய்த தாவீது, கடினமான தருணங்களிலும் “நீரே என் ஆண்டவர்”  என்று சொன்னார். தன் வாழ்க்கையில் இருந்த எல்லாவற்றிலும் தேவன் ஒருவரே நல்லவர், நன்மை செய்கிறவர் என்று தாவீது விசுவாசித்தார். ஆகவே, அந்நம்பிக்கையுடன், அவர் தேவனை துதித்து, கர்த்தருக்குள் அவருக்கிருந்த உறுதி மற்றும் சந்தோஷத்தையும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும் அவரால் வெளிப்படுத்த முடிந்தது. 

நம்மை அலைக்கழிக்கும் சவாலான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். நபருக்கு நபர் நம் பிரச்சனைகள் மாறுபடுகிறதாக இருக்கிறது. ஆனால், நம் தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. நாம் அவரை நம்பி, அவரில் தஞ்சமடைய முடியும். நாம் தேவனை நம்பும்போது, நாம் எதிர்கொள்கிற பிரச்சனைகளின் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டோம். மாறாக, தேவனின் நன்மையையும், அவர் நமக்கென வைத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் காண்போம். வேதம் சொல்வது போல, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக்கோபு 1:17). நாம் தேவனை எப்பொழுதும் நம்ப முடியும். 

பயன்பாடு: “நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்” (சங்.91:2). “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை…எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” (சங்.73:25,28). எந்தச் சூழ்நிலையிலும், தேவனே எனக்கு அரண் ஆக இருக்கிறார். “நான் அசைக்கப்படுவதில்லை.”     

ஜெபம்: ஆண்டவரே, ஆபத்து நாளில் நீரே என் தஞ்சம். உம்மை நம்புகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுகிறதில்லை. என் தேவனே, என்னைக் காப்பாற்றும் . கர்த்தாவே, பூரண சமாதானத்துடன் என்னைப் பாதுகாத்தருளும்; நான் உம்மையே நம்பி இருக்கிறேன். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 198


No comments: