Monday, July 26, 2021

நற்செய்தியை அறிவிக்க ஒரு சிறந்த ஆரம்ப உரை

வாசிக்க: நெகேமியா 3, 4; சங்கீதம் 24; அப்போஸ்தலர் 17

வேத வசனம் அப்போஸ்தலர் 17: 22. அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று (மூடநம்பிக்கையுள்ளவர்களென்று) காண்கிறேன்.
23. எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

கவனித்தல்: அப்போஸ்தலர் 17ம் அதிகாரத்தில் பவுலின் வல்லமையான பிரசங்கங்களில் ஒன்றை நாம் காண்கிறோம். நற்செய்தியைக் கேட்டிராதவர்களுக்கு கலாச்சார ரீதியாக சாட்சிபகருவதற்கு மிகச் சிறந்த  உதாரணமாக பவுல் அத்தேனருக்குச் சொன்ன செய்தி கருதப்படுகிறது. பவுலின் செய்தியைக் கேட்டவர்கள் புதிய கருத்துக்களைக் கேட்பதில் ஆர்வம் மிகுந்த, அறிவார்ந்த, மற்றும் கற்றறிந்தவர்களாக இருந்தார்கள். விக்கிரகங்களால் நிறைந்த அத்தேனே பட்டணத்தைப் பார்த்ததில் பவுல் மகிழ்ச்சி அடைய வில்லை. ஆயினும், அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்த ஞானிகள் மார்ஸ் மேடையில் பேசும்படி பவுலை அழைத்த போது, பவுல் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்த மிகவும் கவனமான வார்த்தைகள் அடங்கிய அறிமுக உரையுடன் தன் பேச்சைத் துவங்கினார். ”தன் ஆவியில் மிகவும் வைராக்கியமடைந்த” பவுல் அந்தப் பட்டணத்தில் தான் பார்த்த விக்கிரகங்களுக்கு எதிரான ஒரு கடுமையான விமர்சனத்தை முன் வைத்து தன் உரையைத் துவங்கி இருக்க முடியும். மாறாக, பவுல் தான் பார்த்ததை மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த உதவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி, “அறியப்படாத தேவனுக்கு” என அவர்கள் வைத்திருந்த பலிபீடத்தைக் குறித்து பவுல் என்ன சொல்வார் என்பதை அறியும் ஆர்வத்தை அவர் உண்டாக்கினார். தன் அறிமுக உரையுடன், தேவனைப் பற்றிய அவர்கள் அறியாமையை நயமாக எடுத்துச் சொன்னதும் அன்றி, அத்தேனே பட்டணத்தில் உள்ளார்கள் தேவனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளை நோக்கி அவர்கள் கவனத்தைத் திருப்பினார் (வ.23). சிருஷ்டிகராகிய தேவனை பவுல் அவர்களுக்கு அறிமுகம் செய்து, விக்கிரக வணக்கத்தின் அபத்தத் தன்மையை அம்பலப்படுத்தினார் (வ.24-29). முடிவில், தன் வாதத்தை நிரூபிக்க இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொல்லி, அவர்கள் மனம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

மார்ஸ் மேடையில் பவுல் செய்த பிரசங்கமானது பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் நிறைந்த சமுதாயத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும். பவுலின் செய்தி கலாச்சார ரீதியாக ஏற்றதாகவும், வேதாமம ரீதியாக சமரசமற்றதாகவும் இருந்தது. அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றில் இருந்து தன் நற்செய்தி அறிவிப்பைத் துவங்கினார். அதன் பின், மெதுவாக அவர்கள் கவனத்தை இயேசுவின் மீது திருப்பினார். இயேசுவைப் பற்றி அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என நம்மில் பலர் விரும்புகிறோம். கிறிஸ்தவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறுகளில் ஒன்று என்னவெனில், ஜனங்களில் கலாச்சார நடைமுறைகள் அல்லது மதங்களுக்கு எதிரான விமர்சனங்களுடன் தங்கள் நற்செய்திப் பணியைத் துவங்குவதுதான். அப்படி எனில், நம்மிடம் இருந்து நற்செய்தியைக் கேட்பவர்களைப் பிரியப்படுத்துவதற்காக சில வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் அல்லது சத்தியத்தை சமரசம் செய்ய வேண்டும் என்று பொருள் அல்ல. பவுல் தன் செய்தியில் சத்தியத்தை சமரசம் செய்ய வில்லை.  அவர் அதைக் கேட்பவர்களுக்குப் புரியும் விதத்தில் பேசினார். நற்செய்தியைக் கேட்பவர்களுக்கு அது கவனத்தை ஈர்க்கிறதாக இருக்கும்படிக்கு நாம் கலாச்சார ரீதியாக ஏற்ற முறையில் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். நாம் அதைச் செய்கிறோமா?

பயன்பாடு: நற்செய்தியைப் பிரசங்கித்தல் என்பது என் கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான ஒரு பொறுப்பு ஆகும். நான் எல்லா நேரங்களிலும் நற்செய்தி அறிவிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். ”கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர்.1:16). இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நான் பேச வேண்டியபிரகாரமாக தெளிவாகச் சொல்ல/பிரசங்கிக்க வேண்டும் (கொலோ.4:3,4).

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம்மை அறிந்து கொள்ளவும், இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவும் உதவிய உம் அன்பிற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, இயேசுகிறிஸ்துவின் மகத்துவத்தைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாக சொல்ல எனக்கு ஞானத்தை தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 206

No comments: