வாசிக்க: 1 நாளாகமம் 25, 26; நீதிமொழிகள் 29; அப்போஸ்தலர் 2:1-13
வேத வசனம்: நீதிமொழிகள் 29: 15. பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
17. உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
கவனித்தல்: சமீப காலங்களில், நம் சமுதாய மற்றும் குடும்ப வாழ்வில் பல மாற்றங்களை நாம் காண்கிறோம். பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுப்பதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக தங்கள் வேலையில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அதுபோல, குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், மற்றும் மொபைல் போன் என பொழுதுபோக்கு சாதனங்களுடன் செலவிடுகிறார்கள். ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்வது ஒரு தனி நபரின் பொறுப்பு என நவீன உலகம் கூறுகிறது. ஆயினும், நாம் உலகில் காணும் ஒழுக்கம் சார்ந்த பல பிரச்சனைகள் மற்றும் சீர்கேடுகளுக்கு அது எவ்வித தீர்வதையும் தருவதில்லை. மறுபுறம், தேவ ஞானத்துடன் நம் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது. “ பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்” என நீதிமொழிகள் 29:15 கூறுகிறது. அப்படியெனில், நம் கோபத்தை வெளிப்படுத்த, நம் குழந்தைகளை கடுமையாக தண்டிக்கலாம் அல்லது திட்டலாம் என்றோ வேதாகமம் நம்மை அனுமதிக்கிறது என்று அர்த்தம் அல்ல. மாறாக, ஞானத்தை அளிக்கும்படி நம் குழந்தைகளை முறையாக சிட்சிப்பது பற்றி வேதம் போதிக்கிறது. அன்பான பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிட்சித்து, உலகத்தின் ஆபத்துகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்கள் என வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 13:24; 19:18; 22:15; 23:13, 14). குழந்தை வளர்ப்புடன் தொடர்புடைய பெற்றோருக்கான இந்த ஒழுங்கு அன்பின் அடிப்படையில் ஆனது என்பது நினைவில் இருக்கட்டும் (நீதிமொழிகள் 3:11,12; எபிரெயர்.12:5-11). முறையாக சிட்சிக்கப்பட்ட ஒரு பிள்ளையானது தன் பெற்றோருக்கு கனத்தையும், அமைதியையும், மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று நீதிமொழிகள் 22:6 கூறுகிறது. தற்காலத்தில் பெற்றோரிடம் காணப்படுகிற முக்கியமான பிரச்சனை என்னவெனில், பலர் தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளத் தயாராக இல்லை; ஆனால் தங்கள் பிள்ளைகள் மட்டும் எல்லாவற்றிலும் மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எந்த சாக்குப்போக்குகளையும் சொல்லாமல், நாம் யாராக இருந்தாலும், வேதாகம ஒழுங்கையும் போதனைகளையும் பின்பற்றி, நம் இளைய/ எதிர்கால தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும். அது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அனேகருக்கு ஞானத்தையும், சமாதானத்தையும், மற்றும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
பயன்பாடு: என் வாழ்க்கையை தேவன் ஒழுங்குபடுத்தும்படி/சிட்சிக்கும்படி நான் அவரை அனுமதிக்க வேண்டும். அவருடைய கோலும் தடியும் என்னை சரிப்படுத்தி/திருத்தி, என்னை தேற்றுகிறது. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் தேவனுடைய வார்த்தையானது எனக்கு வழி (ஒளி) காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவில், பிதாவாகிய என் தேவன் அவருடைய சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், மற்றும் ஞானத்தையும் கண்டு கொள்ளவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவுகிறார்.
ஜெபம்: பிதாவாகிய தேவனே, என்னை சிட்சிக்கும் உம் அன்பிற்காக நன்றி. பரிசுத்தத்திலும், அன்பிலும், மற்றும் நீதியிலும் நான் உம்மைப் போல மாற/வாழ வேண்டும் என நீர் விரும்புகிறீர். அன்பின் ஆண்டவரே, உம் ஞானமுள்ள வார்த்தைகளை தவறாமல் கேட்டு, கீழ்ப்படிய எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 180