Tuesday, June 22, 2021

வேலையில் ஜாக்கிரதையுடன் இருக்க ஒரு அழைப்பு

வாசிக்க: 1 நாளாகமம் 11, 12; நீதிமொழிகள் 22; யோவான் 19: 1-24

வேத வசனம்:  நீதிமொழிகள் 22: 29. தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

கவனித்தல்: சிலர் கடின உழைப்பை நம்புகின்றனர்; “விடா முயற்சி வெற்றியைத் தரும்,” என்று அவர்கள் நினைக்கின்றனர். சிலர் சாமர்த்தியமாக வேலை செய்வது நல்லது என்று நம்புகின்றனர்; தங்கள் வேலையை திட்டமிடவும் செயல்படுத்தவும் அவர்களிடம் இருக்கிற அறிவாற்றலை அவர்கள் நம்புகின்றனர். கடின உழைப்பின்றி, கொஞ்சமாக வேலை செய்து வெற்றி பெற வேண்டும் என அவர்கள் முயற்சி செய்கின்றனர். சிலர் உண்மையுள்ள ஊழியர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் பணிக்குறிப்பில் உள்ள அனைத்து விவரங்களின் படி ஒன்றுவிடாமல் சரியாக வேலை செய்ய முயற்சிக்கிறார்கள். கடின , சாமர்த்திய, மற்றும் உண்மையுள்ள வேலைக்காரர்கள் என அனைவரிடமும் உள்ள எல்லா குணாதிசயங்களும் நிரம்பிய ஜாக்கிரதையுள்ள வேலைக்காரனைப் பற்றி நீதிமொழிகள் 22:29 கூறுகிறது. ஜாக்கிரதை என்பதைக் குறிக்கும் வார்த்தையானது, எச்சரிக்கையுடன் வேலை செய்வதை அல்ல, தன் வேலையை மிகவும் உயர்வாக மதித்து, அதைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைதலைக் குறிக்கிறது. (இதை நீதி.8:30 உடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்). ஜாக்கிரதையுள்ள வேலைக்கார்ன் தன் வேலையைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணி, அதைச் செய்வதில் களிகூருகிறார். அவர் தன் முழு இருதயத்தோடும் பணி செய்து, அனைத்தையும் சரியாக அல்லது முறையாக செய்ய முயற்சி செய்கிறார். ஒரு வேலையை எப்படியாவது செய்து முடித்துவிட வேண்டும் என்பது அவருடைய நோக்கம் அல்ல. மாறாக, அதைச் சிறப்பாகச் செய்து முடிக்க விரும்புகிறார். ஜாக்கிரதை உள்ள வேலைக்காரர்களாக இருப்பதற்குத் தேவையான ஆவியை தேவன் தருகிறார் (யாத்.35:30-36:2). இப்படிப்பட்ட ஜாக்கிரதையுள்ள வேலைக்கார்கள் எப்பொழுதும் வெற்றி பெற்று, உயர்ந்த பதவிகளில் அல்லது இடங்களில் வேலை செய்வார்கள். அப்படிப்பட்ட  ஜாக்கிரதையுள்ள ஊழியர்கள் மற்றும் உயர்ந்த இடங்களில் பணி புரிந்த விசுவாச  வீரர்கள் பலரைப் பற்றி வேதம் சொல்கிறது.

நமக்குக் கொடுக்கப்பட்ட “கொஞ்சத்தில்” உண்மையும் உத்தமமுமாக இருப்பது பற்றி இயேசு போதித்திருக்கிறார் (மத். 25:14-30; லூக்கா 19:12-27). “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு நடைமுறை அறிவுரையை விசுவாசிகளுடன் பகிர்ந்து கொள்கிறார் (1 கொரி.10:31). நாம் ஒரு அலுவலக வேலை செய்கிறவர்களாகவோ, அல்லது சொந்த வியாபாரம் அல்லது தொழில் உடையவர்களாகவோ, வீட்டில் இருந்து வேலை செய்கிறவர்களாகவோ, வீட்டு வேலையைக் கவனிக்கிறவர்களாகவோ, என்ன வேலை செய்தாலும் நாம் அதைச் செய்ய வேண்டுமே என்று அலுத்துக் கொண்டு செய்யாமல், கர்த்தருக்காக செய்ய  வேண்டும். அப்படிப்பட்ட ஜாக்கிரதையுள்ள வேலைக்காரர்களுடன் தேவன் இருந்து, அவர்களை அனைத்து காரியங்களிலும் மேலும் மேலும் வெற்றி பெற வைக்கிறார், விருத்தியடைய செய்கிறார். 

பயன்பாடு: நான் செய்கிற வேலைக்குத் தேவையான அனைத்து திறமைகளும் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் என் வேலையை மிகச் சிறந்த முறையில் செய்து முடிக்க என் தேவன் தம் ஆவியை எனக்குத் தருகிறார். எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறவராகவோ அல்லது எதற்கெடுத்தாலும் சட்டம் பேசுகிறவராகவோ நான் இருக்கத் தேவை இல்லை. தேவனையும் அவருடைய கிருபையையும் நான் விசுவாசிக்கும்போது, எனக்கு முன்பாக தேவன் வைத்திருக்கிற வேலையைக் குறித்து நான் மகிழ்ச்சி அடைய முடியும். அது பெரிதோ சிறிதோ என்னவாக இருந்தாலும், நான் கர்த்தரின் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வேன். நான் தெளிந்த மனதுடன் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் என்னை உயர்த்தி, அவருக்கு சேவை செய்ய இன்னும் அதிகமதிக வாய்ப்புகளை எனக்குத் தருகிறார். 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் அனைவருக்கும் தனித்தன்மை வாய்ந்த அழைப்பயும் வேலையையும் வைத்திருக்கிறீர். இயேசுவே, என் இஷ்டத்தின் படி நான் வாழாமல், உம் இருதய விருப்பங்களைப் புரிந்து வாழ எனக்கு உதவும். ஆண்டவரே, என்னை உம் ஆவியால் நிரப்பி, நீர் விரும்புகிற அனைத்தையும் செய்ய என்னைப் பலப்படுத்தும். ஒவ்வொருநாளும், உம் நாமத்தை மகிமைப்படுத்துகிற ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உதவியருளும். ஆமென். 

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 173

No comments: