Saturday, June 12, 2021

இயேசுவின் சீடர்களுக்கான பொன்னான விதி

வாசிக்க:  2 இராஜாக்கள் 13, 14; நீதிமொழிகள் 11; யோவான் 13: 21-38

வேத வசனம்: யோவான் 13: 34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

கவனித்தல்: எல்லா மதங்களும் அன்பைப் பற்றி போதிக்கின்றன என்றும், அன்பு உலகளாவியது என்றும் ஜனங்கள் சொல்கின்றனர். சிலர் அன்பு என்பது வாழ்க்கைக்கான பொன்னான நெறிமுறைகளில் ஒன்று என்றும் அடிப்படை நெறி சார்ந்த கடமை என்றும் கூறுகின்றனர். ஆயினும், மற்றவர்களை நேசிப்பது ஜனங்களுக்குக் கடினமானதாக இருக்கிறது. இங்கு இயேசு தன் சீடர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளை பற்றி நாம் வாசிக்கிறோம்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.” அன்பைப் பற்றிய கட்டளை புதிதானது அல்ல. பழைய ஏற்பாடு அன்பைப் பற்றிப் போதிக்கிறது (லேவியராகமம் 19:18); இந்த வசனத்தை இயேசு அனேகந்தரம் குறிப்பிட்டார்.  உண்மையைச் சொல்வதானால், அன்பைப் பற்றிய இரண்டு கற்பனைகளில் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசனங்களை அனைத்தும் அடக்கி இயேசுதாமே சுருங்கச் சொல்லி இருந்தார். அப்படியானால், இது எப்படி ஒரு புதிய கட்டளையாக இருக்க முடியும்? இது புதிய கட்டளைதான், ஏனெனில், தான் அவர்களை அன்பு செய்தது போலவே அவருடைய சீடர்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார். இந்த புதிய கட்டளைக்கான அளவுகோல் அல்லது தரமான அளவீடு இயேசுவின் அன்பு ஆகும். அன்பு பற்றி மிகவும் ஆழமாகப் பேசின, போதித்த அனேக பெரிய தலைவர்களைப் பற்றி நாம் வாசித்து அறியலாம். ஆயினும், இயேசு கிறிஸ்து ஒருவர்  மட்டுமே தன் வாழ்க்கை மூலமாக அன்பு செய்வதற்கான ஒரு பரிபூரணமான முன் மாதிரியை வைத்து சென்றிருக்கிறார். இயேசுவின் அன்பு நிபந்தனையற்றது, தியாகமானது, பாரபட்சமற்றது, மற்றும் வருகிற அனைவரையும் ஏற்றுக் கொள்கிறது.  இயேசு தன் சீடர்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும் என்று சொன்னார். தாழ்மையாக இருப்பது பற்றி இயேசு சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கலாம் (யோவான் 13:14). கிறிஸ்துவின் அன்புதான் மனத்தாழ்மைக்கான திறவுகோல் ஆகும். 

இந்த வேதபகுதியில் (யோவான் 13:34,35), இயேசு மூன்று காரியங்களைப் பற்றி சொல்கிறார்: முதலாவதாக, (என்ன செய்ய வேண்டும் என்கிற) ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார், பின்னர் அக்கட்டளையை (எப்படி செய்ய வேண்டும்) நிறைவேற்றுகிறதற்கான வழியைப் பற்றிச் சொல்கிறார், கடைசியாக, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதின் பலனைப் பற்றிச் சொல்கிறார்—“நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” இயேசுவைப் போல அன்பு செய்வது என்பது அவருடைய சீடர்களின் தனித்துவமான அடையாளம் ஆகும். நம் சமுதாயத்தில், மாநிலத்தில், நாட்டில், மற்றும் உலகத்தில் நாம் காணும் தற்போதைய நிலைமையானது கிறிஸ்தவ அன்பிற்கான தேவையைப் பற்றி கூறுகிறது. கிறிஸ்தவ அன்பை இயேசுவின் சீடர் ஒருவர் வெளிப்படுத்தும்போது, இந்த உலகமானது இயேசுவைக் காண்பதற்கும் அவருடைய அன்பை ருசிப்பதற்குமான ஒரு வாய்ப்பைப் பெறுகிறது. நம் மூலமாக கிறிஸ்துவின் அன்பைக் காண்பிப்பதற்கான அனேக பொன்னான வாய்ப்புகளை வாழ்க்கையானது நமக்கு தருகிறது. இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய தன்னலமற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பை உலகத்திற்குக் காண்பிப்பது நம் பொறுப்பு ஆகும். 

பயன்பாடு: இயேசு என்னை நேசித்து தன் சீடனாக என்னை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். இயேசு என்னை நேசிப்பது போல நான் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்பது இயேசு எனக்கு தந்திருக்கிற ஒரு கட்டளை மற்றும் பொறுப்பு ஆகும். என் அன்பு உலக அளவீடுகளின் அடிப்படையில் இருக்கக் கூடாது. இயேசுவே என் முன்மாதிரி. அவருடைய அன்பு என்னை ஊக்கப்படுத்துகிறதாகவும், மற்றவர்களை நேசிப்பதற்கான அளவுகோலாகவும் இருக்கிறது. வாழ்க்கையை மாற்றுகிற தேவ அன்பை ஜனங்கள் அறிந்து ருசிக்க உதவுகிற ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்புகிறேன். 

ஜெபம்: இயேசுவே, என்னை இரட்சித்த உம் அன்பிற்காக நன்றி. ஆண்டவரே, “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்ற உம் கட்டளைக்குக் கீழ்ப்படியும்படி  உம் அன்பினால் என் இருதயத்தை நிரப்பும். நீர் அனைவரையும் நேசிக்கும் இரட்சகர் ஆண்டவர் என்று ஜனங்கள் உம்மை அறிந்துகொள்ளும்படியான வாழ்க்கையை வாழ உதவும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 162

No comments: